ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே தவிர அவளை விரும்பவில்லை. அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி கிடையாது.
மிகவும் நொந்துபோன அவர், தன் மகளை மணந்துகொள்பவருக்கு ஏராளமான சொத்துக்களைத் தருவதாக அறிவித்தார். ஒருவழியாக அவளைத் திருமணம் செய்துகொள்ள ஒருவர் முன்வந்தார். திருமணம் நடைபெற்றது. தம்பதியர் இருவருமே மிகவும் கடவுள் பக்தி கொண்டவராக ஆயினர். பல கோவில், குளங்களுக்குப் போயினர், புண்ணிய நதிகளில் நீராடினர். அவர்கள் சந்தித்த முனிவர் ஒருவர், உலக விஷயங்களில் உழல்கிற எவரும் அவளுக்கு நல்ல மூக்கைத் தரவியலாது, அவளைப் படைத்த கடவுளேதான் அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
நிறையச் செல்வம் இருந்தபோதும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மற்றவர்கள் எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேலி பேசுவதாக அந்தப் பெண்மணி நினைத்தாள். "நாம் இருவரும் இமயமலைக்குப் போய் அங்கே ஒருமாத காலம் தவம் செய்யலாம்" என்று அவள் தன் கணவனிடம் கூறினாள். அவரும் சம்மதிக்கவே, இருவரும் அப்படியே செய்தனர். எப்படியாவது நல்ல அழகான மூக்கைப் பெற்றுவிட வேண்டுமென்ற ஆசையில் அவள் மிகவும் சிரத்தையோடு தவம் செய்தாள்.
கடவுள் அவள்முன் தோன்றினார். அவளும் தனக்கு அழகான பெரிய மூக்கு வேண்டுமென்று கேட்டாள். "அப்படியே ஆகட்டும்" என்றார் கடவுள். அவர் மறைந்தவுடன் தன் முகத்தில் இருந்த பெரிய மூக்கைப் பார்த்ததும் முன்னைவிடத் தன் முகம் அசிங்கமாகிவிட்டதாக எண்ணினாள். மீண்டும் மிகவும் சிரத்தையோடு அவள் கடவுளை நோக்கித் தவமிருந்தாள். அவரும் அவள்முன் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டார். "எனக்குப் பெரிய மூக்கு வேண்டாம்" என்றாள். "அப்படியே ஆகட்டும்" என்று கூறிக் கடவுள் மறைந்தார். பார்த்தால், அவளுக்கு மூக்கே இல்லாமல் போயிருந்தது! தனக்கு நல்லதொரு மூக்கு வேண்டுமென்று பிரார்த்திக்க முயன்றதில் மூக்கே காணாமல் போய்விட்டதே என்று அவள் யோசிக்கலானாள்.
இந்தக் கதை சொல்லவருவது இதுதான்: கடவுள் உங்கள் முன்னே இருக்கிறார், உங்களோடு விளையாடுகிறார், பேசுகிறார். ஆனாலும் அவரிடம் எதை, எப்போது, எங்கே கேட்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நமக்கு வேண்டுவது ஒன்று, ஆனால் நாம் கேட்பது வேறொன்று. இதைச் செய்கையில் நாம் துன்பத்துக்கு ஆளாகிவிடுகிறோம். நீங்கள் வேண்டுவதையெல்லாம் கொடுக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால், எது நல்லது, எதை உண்மையாகவே கேட்கவேண்டும் என்பதை நீங்கள் அறியவில்லை. எதை, எப்போது வேண்டுவது என்பது தெரியாதபோது, முழுமையாகக் கடவுளிடம் சரணடைந்து, அவனுடைய கருணையைக் கேட்பதே எளியதும் சிறந்ததுமான வழியாகும்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |