தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த மேகங்களும் என மதியம் மூன்று மணிக்கே இருட்டிப் போனதில் சூழலில் இருந்த இதம் பசக்கென்று மனதிலும் ஒட்டிக்கொண்டது.

சரண்யாவுக்குக் கிளம்பலாம் என்றுதான் தோன்றியது. அலுவலகப் பேருந்து ஐந்தரைக்குத்தான் கிளம்பும். இப்போது புறப்பட்டாலும் மாறி மாறி வண்டி பிடித்துப் போவதற்குள்... வேண்டாம், இன்னும் ஒன்றரை மணி நேரம்தானே.

இயர் ஃபோனில் இளையராஜாவைத் துணைக்கழைத்து, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். கண்ணாடி வழியே சூழல் ரம்மியமாக இருந்தது. யாரோ ஜதி சொல்வதுபோல தூரத்துத் தென்னை மரங்கள் ஒரே ரிதத்தில் தலையைச் சிலுப்பி ஆட, தன்னை மறந்து சில நிமிடங்கள் லயித்திருந்தவள், பிறகு வேலைக்குள் முழுகிப் போனாள்.

"சரண்.. கிளம்பல?" முக்கோணமாக விரிந்திருந்த இருக்கை அமைப்பின் அடுத்த கோடியில் இருந்த அருள் குரல்கொடுத்த பின்தான் நேரத்தையே கவனித்தாள். "அச்சோ. டைம் ஆயிடுச்சு. தேங்க்ஸ் அருள். பை பை. ஹேவ் எ குட் வீக் எண்ட்." ஒன்றிரண்டாகப் பூந்தூறல்ஆரம்பித்திருக்க, ஓட்டமும் நடையுமாக விரைந்து... நல்லவேளை... பேருந்தைப் பிடித்துவிட்டாள்.

பஸ்ஸில் முக்கால்வாசி இருக்கைகள் காலி. வழக்கமாய்க் காணும் முகங்கள் தென்படவில்லை. இன்று வரவே இல்லையோ, ஒருவேளை சீக்கிரம் கிளம்பிவிட்டார்களோ? வேடிக்கை பார்க்கத் தோதான இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

பத்தாவது நிமிடம் புதுப்பெண் போல வெட்கி வெட்கிச் சிவந்து கொண்டிருந்த வானம் சாரலை மென் தூறலாக மாற்றி, அடர் மழையாகக் கொட்டியது. கண்ணாடி ஷட்டர் போட்டிருக்க, சொட்டுச் சொட்டாக விளிம்பில் வழிந்த நீரை இவள் தொட்டுத் தொட்டுச் சுண்டிவிட, மழையும் இவளோடு விளையாடுகிற மாதிரி இவள் தொடும் இடத்திலெல்லாம் நீர் சேர்த்தது.

ஒரு படத்தில் சுவலட்சுமி இந்தமாதிரி மழைநீரைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது நாயகன் கண்ணில் படுவாள். 'நம்மையும் யாராச்சும் கவனிக்கிறாங்களோ!" அந்தக் காட்சி நினைவில் சிரிப்பு வந்தது.

போக்குவரத்து நெரிசலில் பேருந்து நின்று நின்று நகர்ந்து, நத்தையாய் ஊர்ந்து, பின் மொத்தமாக நின்றே போனது. "இதுக்கு மேல போறது கஷ்டம். பாலத்து மேலேயே தெப்பமா தண்ணி நிக்குது....." ஓட்டுனர் சொல்ல, சரண்யாவுக்கு பக்கென்று இருந்தது. "அய்யோ அண்ணா... அப்புறம் எப்படி போறது?" இவள் அலற, "ஒண்ணும் பண்ண முடியாதும்மா. முன்னாடி எவ்வளவு தூரத்துக்கு வண்டி நிக்குது பாரு". ஜன்னலை உயர்த்திப் பார்க்க, வானம் இப்போது முழுவதுமாக இருட்டி இருந்தது. சில இடங்களில் சாலையில் முழங்காலளவு நீரில் மக்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

'நடந்தா அவ்வளவு தூரம் போக முடியும்?' திகிலோடு சுற்றிலும் பார்த்தாள். அதற்குள் முக்கால்வாசிப் பேர் இறங்கிவிட, பேருந்தில் மொத்தமாகப் பத்துத் தலைகள்கூட இல்லை. வீட்டை அழைக்கலாம் என்று ஃபோனை எடுத்தால் பேட்டரி ஒற்றைப் புள்ளியில் நின்றது. கடவுளே, பாட்டுக் கேட்கிறேன் பேர்வழின்னு சார்ஜ் போடாம விட்டுட்டேனே. 'ஆன் தி வே' என்று குறுஞ்செய்தி ஒன்றைமட்டும் அனுப்ப முடிந்தது.

இவள் விழித்துக்கொண்டு நின்ற நேரத்தில், அவரவர் ஃபோனில் பேசியபடியே இறங்கிச் சென்று கொண்டிருக்க, குடையை விரித்துத் தானும் வேகமாக இறங்கினாள். அது எந்த இடம் என்றுகூடப் புரியவில்லை. அருகில் இருந்தவரிடம் கேட்க ஈக்காட்டுதாங்கல் என்றார். கீழே இறங்கியதும்தான் தெரிந்தது, மழை மழையாகப் பெய்யவில்லை என்று. 'இந்தா வச்சுக்கோ' என்று மேலிருந்து யாரோ ஓவர்ஹெட் டேங்க்கை மொத்தமாய்க் கவிழ்த்து விட்டதுபோல அசுர வேகத்தில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

நேரம் மணி ஏழு. சுரிதார் காலை முற்றிலுமாக நனைத்து ஓடும் நீரில் குத்துமதிப்பாகத் திசை ஊகித்து நடந்தாள். "ஏங்க... முகப்பேருக்கு எப்படி போகணும்?"

"இப்படியே நடந்து வாங்க. எல்லோரும் கோயம்பேடு, வடபழனின்னுதான் போறோம். பொடிநடைதான். எப்படியும் நாளை காலைக்குள்ள போய்ச் சேர்ந்துடுவோம்." இளைஞர் கூட்டம் ஒன்று கிண்டலடித்துக் கொண்டே கும்பலாக நடக்க, இவங்களை விட்டுடக்கூடாது. நடையை எட்டிப் போட்டாள்.

நினைத்தாளே தவிர, பத்து நிமிடத்திற்கு மேல் அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. காலில் விறுவிறுவென்று குளிர் ஏற, நழுவி ஓடும் செருப்பை இழுத்துப் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக பார்த்துப் பார்த்து வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.

எதுவோ இழுத்த மாதிரியிருந்தது, குனிந்து நிமிர்வதற்குள் அவர்கள் கண்ணிலிருந்து மறைந்திருந்தார்கள். இவள்கூட இறங்கிய யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காணவில்லை. நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டமாதிரி ஆளுக்கு ஒரு திசையில் வேகுவேகென்று நடந்திருக்க, நடுரோட்டில் முக்காலே மூணுவாசி நனைந்து நின்ற சரண்யாவுக்கு அந்த நிமிடம் அழுகையே வந்துவிட்டது.

'நெடுஞ்சாலையிலேயே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்...' என்று பாட்டாகப் பாடும்போது கொண்டாட்டமாகத்தான் இருந்தது. அதுவே நிதர்சனத்தில்...!

வீட்டில் கூப்பிட்டு அழைத்துக்கொண்டு போகச் சொல்லலாம் என்றால், இந்த மழையில் இத்தனை போக்குவரத்து நெரிசலில் எப்படி அங்கிருந்து வந்து... ப்ச்... சினிமா மாதிரி ஹெலிகாப்டர் கொண்டுவந்தா இறக்க முடியும்?"

காசி தியேட்டர் தாண்டுவதற்குள் பத்துநிமிடப் பயண தூரத்திற்கு ஒருமணி நேரம் கழிந்திருந்தது. சரண்யா சோர்ந்து போனாள். சுற்றி நிறையப் பேர் இருந்தாலும் அவரவர் தனியாக இருப்பதுபோல, குழந்தைகளுடன், சுமைகளுடன், வண்டி வாகனங்களுடன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தத்தளித்தபடி இருக்க, இடையிடையே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நீந்தும் நாய்களும், பூனைகளும் கூட! தெய்வமே... என்ன விதமான பயணம் இது?

'இப்படிப் போனா பில்லர் வந்துடுமாங்க?' இவள் கேள்விக்கு அவளைக் கடந்துசென்ற இளைஞன் எந்த மனநிலையில் இருந்தானோ... "அது வராதுங்க. நாமதான் போகணும்", பைக்கைத் தள்ளிக்கொண்டே கடுப்படிக்க, இவளுக்கு ஏண்டா கேட்டோம் என்றானது.

"சம்பளத்துக்கு வேலை செய்யலைன்னா போகுது, வாங்குற கிம்பளத்துக்கு வேலை செஞ்சிருந்தாகூட... இப்படி ஆறு, ஏரியெல்லாம் நடு ரோட்டுக்கு வருமா?" செயல்படாத அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் வாய்க்குள் மென்றபடி அவன் நடக்க, சரண்யா மௌனமாகப் பின்னால் நடந்தாள். அவளுக்கு வேறுவழி இல்லை. அவன் வண்டி போகும் தடத்தில் நீர் விலகி நடப்பது எளிதாக இருக்க, பள்ளம் மேட்டில் விழுந்துவிடாமல் தொய்ந்திருந்த சக்தியை இழுத்துப் பிடித்தபடி பின்தொடர்ந்தாள்.

"எங்க போகணும் நீங்க?"

ஆங்காங்கே இவள் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தான். இவள் வேகத்திற்கு ஈடு கொடுத்து வண்டியைத் தள்ளினானே தவிர, அந்த அரைமணி நேரமும் இவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஓரிடத்தில் இவள் நடக்கமுடியாமல் நின்றேவிட, தானும் நின்றவன் இவளிடம் எங்கே வீடு என்று கேட்டான். சரண்யா சொன்னாள்.

"நான் வானகரம்தான். பயப்படாம வாங்க."

இவளுக்கு நைந்திருந்த உயிரில் கொஞ்சம் நம்பிக்கை பூத்த உணர்வு. "பில்லர் தாண்டிட்டா ஆட்டோ கிடைக்கும். அதுக்கப்புறம் ஈஸிதான்" வெளுத்திருந்த இவள் முகத்தைப் பார்த்து அவன் ஆறுதலாகச் சொல்ல, சரண்யா தலையாட்டினாள்.

"உங்க பேக்கை கொக்கில மாட்டிக்குங்க" என்றவன், "பயப்படாதீங்க. நானே தூக்கிட்டு ஓடணும்னு நினைச்சாலும் இந்த வெள்ளத்துல ஓடமுடியாது" கிண்டலாகச் சொன்னான். சரண்யா சிரித்தாள். கையில் சுமை இல்லாமல் வண்டியின் கைப்பிடியைப் பிடித்து நடக்க, கொஞ்சம் இலகுவாக இருந்தது.

உதயம் தாண்டி சிம்ஸ் மருத்துவமனை அருகே வந்து சேர்ந்தபோது, 'போதும், கொஞ்சம் விட்டு விட்டு அடிக்கலாம்' என்று மழை நினைத்தது போல. கொஞ்சம் தன் அருட்கொடையை நிறுத்தி இருந்தது. நூறடி சாலையில் நுழைந்து அசோக்நகர் வாட்டர் டேங்க் பக்கத்தில் வர, அங்கு சாலையில் தண்ணீர் தணிந்து வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. நூறு கோடி பணத்தை ஒன்றைப் பார்த்தால் கூட அத்தனை சந்தோஷம் வராது.

'உஃப்...' பெருமூச்சு மேலிட அங்கு சைக்கிளில் கேன் வைத்து நின்றவரிடம் தேனீர் வாங்கிக் குடித்தார்கள். இப்போதுதானே அரைக்கிணறு தாண்டி இருக்கிறார்கள். இன்னும் மீதி தூரம் போகவேண்டுமே. சரண்யா மறுத்தும் அவனே பணம் கொடுத்துவிட, இருந்த சார்ஜில் வீட்டிற்கு அழைத்துவிட்டு அதற்குள் உயிர் விட்டிருந்த மொபைலை கைப்பைக்குள் எறிந்தாள்.

வருகிற ஆட்டோக்களைக் கையைக் காட்டி நிறுத்த முயல, பெரும்பாலும் ஷேர் ஆட்டோக்கள்தான். ஃபுட் போர்டு அடிக்காத குறையாக எல்லாம் ததும்பி வழிந்தன. ம்ஹும்.. ஒன்றும் நிற்கிற பாடாய் இல்லை. நின்ற வண்டியிலும் ஏற்கனவே ஒருவர் மடியில் ஒருவர் உட்கார்ந்த மாதிரி அடுக்கியிருக்க, அந்த டிரைவர் இவளுக்கு தன் பக்கத்தில் இடம் காட்டினான். அந்த ஒண்ணரையடி இருக்கையில் ஏற்கனவே மூவர் உட்கார்ந்திருந்தனர். இவளுக்கு முறைப்பதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

"வேணாம் போப்பா" பின்னால் நின்றவன் சொன்னதில் அந்த டிரைவர் முறைத்துக்கொண்டே நகர்ந்தான். "நீங்க இப்படி போறதுக்கு என் வண்டிலேயே வாங்க. உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா". ஒருநொடி யோசித்தவள், தலையசைத்து வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து போனால் கோயம்பேடு ரவுண்டானாவிற்கு முன்னால் மீண்டும் சாலையில் குளம். உயிரோடு வீடு போய்ச் சேருவோமா என்ற அச்சம்கூட வடிந்து விரக்தியான மனநிலை வாய்த்த கணம் அது.

'உட்கார்ந்தே வந்துடுவியா? இறங்கு. நட.' விதி விகாரமாகச் சிரித்ததில் இறங்கி நடை. திரும்ப கொஞ்சதூரம் வண்டி. பிறகு, அண்ணா நகர் சந்திப்பில் தொடையளவு நீச்சல். பிறகுநடை. தொய்ந்து போனாள் சரண்யா.

வழியில் இரண்டுமுறை பொதுத் தொலைபேசியில் வீட்டிற்கு அழைத்துப் பேச அவள் நின்றபோதும் அவன் பொறுமையாகக் காத்திருந்தான். ஒரு வழியாக கோல்டன் ஃப்ளாட்ஸ் வந்து சேர்ந்தபோது மணி பதினொண்ணரை.

"இதோ. இங்கதான்... சொன்னேன்" சரண்யா தேட, அவள் அருகே வேகமாக வந்த ஆண் "ஹப்பா... ஒரு வழியா வந்துட்டியா! என்னடி நீ, சார்ஜ் போடு சார்ஜ் போடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" அவளைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சியும், கோபமுமாகப் பொரிய, "இவரு அரவிந்த். என்னோட ஹஸ்பண்ட்" சரண்யா அறிமுகப்படுத்தினாள். அவன் புன்னகையுடன் கையை நீட்டினான்.

"ரொம்ப தேங்க்ஸ் பாஸ். நீங்க மட்டும் இல்லேன்னா அவ்வளவுதான். எங்க இருக்கான்னே தெரியாம உயிரே போயிடுச்சு. இதுல ஃபோனும் இல்லாம..." அரவிந்த் வேகமாக அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கியபடி நன்றி சொல்ல, "இதுல என்னங்க இருக்கு..." அவன் முகத்தில் களைப்பை மீறிய மென்னகை.

"இதுக்குமேல நீங்க எப்படி போவீங்க? எங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு காலைல கிளம்புங்க" அரவிந்த் அழைத்தான். "இல்லைங்க. வைஃப் வீட்டுல பயந்துகிட்டே இருப்பாங்க," மென்மையாக மறுத்தவன், "பாத்துக் கூட்டிட்டு போங்க. ரொம்ப பயந்துட்டாங்க". லேசாக மேடிட்ட அவள் வயிற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை உதைத்து கிளம்பிவிட்டான்.

"ரொம்ப கஷ்டப்பட்டுட்டியாடா? இன்னிக்கு லீவ் போடுன்னு சொன்னேன் கேட்டியா?" படபடத்துக் கொண்டே வந்த அரவிந்துக்கு அவளால் பதில் சொல்லக்கூட இயலவில்லை. சோர்வுமிகுதியில் அவன் முதுகிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

"எனக்கென்னன்னு போகாம. நைஸ் பெர்சன் இல்ல? அவரு நம்பரை மறக்காம ஸ்டோர் பண்ணி வை. குடும்பத்தோட ஒருநாள் வீட்டுக்குக் கூப்பிடலாம்." அப்போதுதான் மண்டையில் அடித்த மாதிரி இருந்தது அவளுக்கு. "அச்சச்சோ!"

"ஏ லூஸு... நம்பரை வாங்கலையா நீ? சரி, அவர் பேர் என்ன?"

"தெரியலையே... கேட்காம விட்டுட்டேன்."

"என்னம்மா நீ?" அரவிந்த் கடிந்துகொள்ள, தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த அந்த இளைஞனை நன்றியுடன் பார்த்தாள் சரண்யா. போகட்டும். பெயர் தெரியாவிட்டால் என்ன? நடமாடும் தேவதைகளுக்குப் பெயர் அவசியமில்லை. அவள் இரு கைகளும் இணைந்து அவன் சென்ற திசை நோக்கி வணங்கிக் கொண்டிருக்க, அத்தனை அல்லல்களுக்கும் இடையே அவள் கண்களில் ஒரு மனிதனைத் தரிசனம் கண்ட நிறைவு இருந்தது.

ஹேமா,
யுடா

© TamilOnline.com