ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக தடவிவிட்டுக் கொண்டாள். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் கோபாலைத் தட்டி எழுப்பினாள். இன்னும் சற்றுநேரத்தில் மகனைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
தூக்கத்தில் இருந்து எழுந்த கோபாலன், "நந்து வந்திருப்பான் இல்ல?" என்று கேட்டார், அவளும் தன்னோடுதான் இருக்கிறாள், அவளுக்கு மட்டும் எப்படித் தெரியும் என்கிற நினைப்பே இல்லாமல். சிறிது காலத்திற்கு முன் இதற்கெல்லாம் கோபப்பட்ட அமிர்தா, இப்போது சலனமே இல்லாமல் தலையை மட்டும் ஆமாம் என்று அசைத்தாள். அவர்கள் இந்தியாவில் இருக்கும் பெரியபிள்ளை மகேஷிடமிருந்து சிறியமகன் நந்துவிடம் இரண்டாவது முறையாக அமெரிக்கா வருகிறார்கள்.
இமிக்ரேஷன் முடிந்து வெளியே வந்தபொழுது நந்து கையை ஆட்டி வரவேற்றான். நந்து முகம்மலர ஓடிவந்து தாயை அணைத்துக்கொண்டான். பிறகு தந்தை பக்கம் திரும்பி, "வாங்கப்பா" என்றான். இதையெல்லாம் சட்டையே செய்யாத கோபாலன், "எப்படிடா இருக்க?" என்று கேட்டார். மகன் பதிலுக்குத் தலையை ஆட்டியதைக்கூடப் பார்க்காமல் காருக்கு நடந்தார்.
மகனுடன் பேசிக்கொண்டு நடந்த அமிர்தா, அமெரிக்கக் காற்றிலேயே, தனக்கு ஒரு சுதந்திரம் உள்ளதுபோல் நினைத்தாள். வீட்டுக்கு வந்ததும் குளித்து முடித்து, நந்து சமைத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டதும், கோபாலன் தூங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு பெட்ரூமுக்குப் போய்விட்டார்.
அம்மாவிடம் தனியாக "எப்டீம்மா இருக்கார் இவர் இப்ப" என்று கேட்டான் நந்து. "எப்பவும் போலத்தான்" என்று சொல்லி வறட்டுச் சிரிப்பு சிரித்து, "அத விடு. நீ எப்டி இருக்க" என்றாள். கோபாலன் இல்லாத சமயத்தில் தாயும் மகனும் மனம்விட்டுப் பேசினர். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஸ்டேட் தேர்தல் முடிவுகள், அதன் விளைவாக. என்ன நடக்கக்கூடும் என்பது பற்றி எல்லாம் பேசினார்கள். அமிர்தாவும் தனக்குப் புரியாதவற்றைக் கேட்டு ஆர்வத்துடன் தெரிந்து கொள்வாள். இங்கு நடக்கும் தேர்தலுக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி அறிந்து கொள்வாள். நந்துவிற்கும் இது மிகவும் பிடிக்கும். தாயின்மீது மிகுந்த பாசமும் மதிப்பும் வைத்திருந்தான்.
அதனால் பொறுமையாக விளக்குவான். இதுபோல் மனம் விட்டுப் பேச அவளுக்கு ஆசையாக இருந்தது. தூக்கம் கலைந்து வெளியே வந்த கோபாலன், நந்து பேசிக்கொண்டு இருந்ததைச் சற்றுநேரம் கேட்டார். பிறகு அமிர்தாவை "காஃபி போட்டுட்டியா" என்று கேட்டார். அதன் அர்த்தம் அமிர்தாவுக்குத் தெரியும். 'இதெல்லாம் உனக்கு வேண்டாத விஷயம். வேலையைப் பார்' என்பதுதான். அமிர்தாவும் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து காஃபி போடச் சென்றாள். இது நந்துவிற்குக் கோபத்தைத் தந்திருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
ஒருவழியாக கோபாலன் அமெரிக்க நேரத்திற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார். அந்த வாரம் இறுதியில் வெளியே சிறு பிக்னிக் போகத் திட்டம் போட்ட நந்து, "அப்பா இந்த வாரம் சனி ஞாயிறுல வெளியே போலாம். சாயங்காலம் வந்து சொல்றேன்" என்று சொல்லிவிட்டு ஆஃபீஸ் போனான்.
இரவு மணி பத்து ஆனது. நந்து வரவில்லை. அமிர்தா கவலையுடன் தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். கோபாலன் சர்க்கரை வியாதி என்ற போர்வையில் வேளைக்குச் சாப்பிட்டு படுத்துவிட்டார். இரவு நேர இயற்கை உபாதையால் அறையை விட்டு வெளியேவந்த கோபாலன், "நந்து வரலையா?" என்று கேட்டார். இல்லை என்பதைத் தலையசைப்பில் அமிர்தா தெரியப்படுத்தினாள். "வேலை இருக்கும்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கச் சென்றுவிட்டார்.
நந்து இரண்டு மணிக்கு வந்தவன், அமிர்தா விழித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் வருத்தத்துடன் அருகே வந்து, "ரொம்ப ஸாரிம்மா. முதல்ல உங்களுக்கு ஒரு ஃபோன் ஏற்பாடு பண்றேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் திடீர்னு உடம்பு சரியில்லாமல் போய், எமர்ஜென்சில அட்மிட் செஞ்சு பாக்க வேண்டியதாப் போச்சு. இங்கெல்லாம் அது ரொம்ப ரேர்,அதுவுமில்லாம காஸ்ட்லி. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இன்னொரு ஃப்ரெண்ட் அவன்கூட இருக்கான். சரி நீ சாப்பிட்டியா?" என்றான்.
அமிர்தா, "இல்லை நந்து. பரவாயில்லை. ஆபத்து சமயத்துல உதவி செய்யறது மனுஷத்தனம். எதப்பத்தியும் அப்ப நெனக்கக்கூடாது" என்றவள் இருவருக்கும் தட்டுகளை எடுத்து வைத்தாள்.
தாயின் அருகில் வந்த நந்து, "இதெல்லாமே சின்ன வயசிலேர்ந்து நீ சொல்லித் தந்தது தானேம்மா" என்று சொல்லி, மெள்ள அவளை அணைத்துக் கொண்டான். "சரி சரி சாப்பிடு" என்றபடி தானும் இரண்டு வாய் போட்டுக்கொண்டு சமையலறையைச் சரி செய்தாள். நந்து சாப்பிட்டதும் தூக்கம் கண்களை அழுத்த, தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டான். மகன் கணவனைப்பற்றிக் கேட்காதது உறுத்த, காரணம் அவர் நடந்துகொள்ளும் விதம் என்பதும் புரிய, மௌனமானாள்.
வந்து ஒருமாதம் ஆகிவிட்டது. இரண்டு நாட்களாக, கோபாலன் சுருண்டு சுருண்டு படுத்துக்கொண்டார். குளிர் தாங்காமல் ஜலதோஷம் இருமல். நந்துவும் தன்னிடம் இருந்த சிரப் மற்றும் மாத்திரைகளைத் தந்துவிட்டு வேலைக்குப் போய்விட்டான். மேலும் இரண்டு நாட்கள் அதே நிலையில் கழித்தார்.
அமிர்தா கஷாயம் போட்டுக் கொடுத்தாள். எதற்கும் குணமாகவில்லை. நந்துவுக்கும் ப்ராஜெக்ட் முடியவில்லை என்று இரவு நேரங்கழித்து வருவதும் காலையில் சீக்கிரம் கிளம்புவதுமாக இருந்தான். மகன் தன்னை டாக்டரிடம் அழைத்துச் செல்லவில்லை என்பதைத் தனியாக அமிர்தாவிடம் புலம்பினார்.
இரவு களைத்துப் போய் வீடு திரும்பிய நந்து, அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டுவிட்டு, "இன்னும் ரெண்டு நாள் பாக்கலாம். சரியாகலைனா டாக்டரிடம் போகலாம்" என்றவன், *நான் படுத்துக்கறேம்மா. எனக்கு ஒண்ணும் வேணாம்" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டான்.
சிறிதுநேரம் கழித்துக் கண்விழித்த கோபாலன், "நந்து வந்துட்டானா" என்று கேட்டார். அமிர்தா "உம்" என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தாள். அவருக்குத் தரவேண்டிய, மாத்திரையை வென்னீருடன் தந்தாள். கோபாலன் விடாமல், "ஏன் அப்பாவுக்கு எப்டி இருக்குன்னு பாக்க முடியாதாமா?" என்றார் கோபத்தால் கண்கள் சிவக்க. "டாலர்ல செலவழிச்சு டிக்கெட் வாங்கின திமிரு. கூட இருந்து பாக்கணும், இல்லை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்னு தோணல" என்றார். அமிர்தா பேசாமல் படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருந்தாள். சென்னையில் இருந்தபொழுது நடந்த நிகழ்ச்சி ஒன்று மனதில் ஓடியது.
அப்பொழுதும், கோபாலனுக்கு உடம்பு சரியில்லை. மூன்றுமுறை டாக்டரிடம் போயும் சரியாகவில்லை. மூத்தவன் மகேஷ் ஆஃபீஸ் விட்டு வந்ததும் டாக்டரிடம் அழைத்துப் போனான். அன்றும் மாத்திரை தந்துவிட்டு அமிர்தா திரும்ப நினைத்தபோது, கோபாலன், "மூணுதடவை டாக்டர் கிட்ட போயாச்சு. பணம்தான் செலவாகுதே தவிர உடம்பு சரியாகல. ஏதோ முன்னாடி பணம் சேர்த்து வைச்சிருந்தேனோ இப்ப நான் பிழைச்சேன்" என்று சொல்ல அவர் கண்கள் மட்டும் வாசலைப் பார்த்ததைக் கண்ட அமிர்தா தன்னையுமறியாமல் திரும்பினாள்.
அங்கு மகேஷ்! அதிர்ந்து போய்விட்டாள். மகேஷ், "இப்ப பணம் எங்க பிரச்சனை பண்ணுது?" என்று கேட்டான். எப்பொழுதும் மற்றவர்கள் மனதை வார்த்தைகளால் காயப்படுத்தியே பழகிவிட்ட கோபாலன், "ஆமாண்டா. இதுவரைக்கும் இவ்வளவு செலவாகுதே ஒரு நாளாவது டாக்டர் ஃபீஸாவது தரலாம்னு தோணிச்சா" என்று கேட்டார்.
சம்பளம் கம்மியாக இருப்பதால்தான் மனைவியுடன் மகேஷ் இவர்களோடு சேர்ந்து வாழ்கிறான். அவனைப்போய் செலவு செய்யக்கூடாதா என்றால் அவன் என்ன செய்வான். அமிர்தா, "இப்ப உடம்பு சரியில்லை. பணம் நமக்கு ஒரு பிரச்சனை இல்ல. பேசாம தூங்குங்க" என்று சொல்லி முடிப்பதற்குள், கோபாலன், "ஆமாம். நானே எல்லாச் செலவையும் பாத்தா உங்களுக்கு பிரச்சனை ஏது? ஜாலியா, பொறுப்பு இல்லாம இருக்கலாம்" என்று வெடித்தார்.மகேஷ்.
பின்னால் அவன் மனைவி நிற்பதை அவளது நிழல் சுவரில் விழுந்திருப்பதிலிருந்து உணர்ந்த அமிர்தா மனம் கூசினாள். இவர் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கிறது. அவர்களுக்கு இருக்கும் இன்னொரு வீட்டிலிருந்து வாடகை வேறு வருகிறது. இப்பொழுது பணம்பற்றிப் பேசியே இருக்க வேண்டாம். மருமகள் பிரியாவிடம் மகேஷ் என்ன சொல்லி அவளைச் சமாதானம் செய்யப்போகிறானோ என்றெல்லாம் நொடிப்பொழுதில் எண்ணமிட்டாள். மறுநாள் முதல் மகேஷ் அவரிடம் பேச விரும்பவில்லை. அதைப்பற்றி அவரும் கவலைப்படவில்லை. இந்தியா திரும்பியதும் இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறதோ என்று நினைத்தாள்.
சுடுசொல்லால் அன்பை வளர்க்கமுடியாது. இரண்டு மகன்களுக்கும் தந்தையைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.
பணமில்லாத பிள்ளையிடம், 'ஏன் எனக்காகப் பணம் செலவழிக்கவில்லை என்று கேட்டு நோகடித்தார். நேரமில்லாத பிள்ளையை, 'ஏன் என்னுடன் வரவில்லை' என்று கேட்டு நோகடிக்கிறார். அவர்களால் தரமுடியாததை எதிர்பார்த்து, அவர்களையும் நிம்மதியாக வாழவிடாமல் தானும் நிம்மதி இழந்து இருக்கும் கணவனைப் பரிதாபத்துடன், ஆனால் எப்பொழுதும்போல மௌனமாக, பார்த்தாள் அமிர்தா.
சுதா சந்தானம், மில்பிடாஸ், கலிஃபோர்னியா |