ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15d)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்.

*****


கேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்ட எது சரியான தருணம்? (தொடர்கிறது)

பதில்: சென்ற பகுதிகளில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பல அம்சங்கள் கூடியுள்ளன; உங்கள் நிறுவன வகை, குழு பலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சி நிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மேலும், மூலதனத்தாருக்குப் பெரும்பங்கு அளிக்கவேண்டி வர நேர்ந்தாலும், உடனே மூலதனம் திரட்டுவதற்கான சில காரணங்களையும் பார்த்தோம். இப்போது எத்தகைய தருணங்களில் மூலதனம் திரட்டுவதைத் தாமதிப்பது நல்லது என்று காண்போம்.

முதலாவதாக, நீங்களே குறிப்பிட்டபடி, சிறிது காலம் செலவிட்டு, நிறுவனத்தை ஓரளவுக்கு வளர்க்க முடிந்தால் நிறுவனத்தின் மதிப்பீடு உயரும். அப்போது நிறுவனத்தில் மூலதனத்தாருக்கு அளிக்க வேண்டிய பங்கைச் சற்றுக் குறைக்கலாம். ஆனால், இக்காரணத்தினால் மூலதனம் நாடலைத் தள்ளிப்போட வேண்டுமானால், முதற்கண் ஏன் தாமதிக்கக் கூடாது என்பதற்கு, நாம் குறிப்பிட்ட அபாயங்கள் எதுவும் இல்லையா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். நிறுவனத்தின் பங்கிழப்பைத் தவிர, மூலதனத் திரட்டலைத் தள்ளிப்போட இன்னும் சில முக்கியக் காரணங்கள் உண்டு.

இத்தறுவாயில், மூலதன நிறுவனங்கள் மூலதனம் அளிப்பதற்கான முன் நிபந்தனைகளை மிகவும் கடுமையாக்கியுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு முதல் முழுச்சுற்றுக்குக் (full series-A round) கேட்ட அம்சங்களை இப்போது விதைநிலை (seed stage) மூலதன நிறுவனங்களே கேட்க (demand) ஆரம்பித்துள்ளன! முன்பு இரண்டாம் முழுச்சுற்றுக்கான வளர்ச்சி நிலை என்ன எதிர்பார்க்கப்பட்டதோ அது முதல் முழுச்சுற்றிலேயே இருக்கவேண்டும் என இப்போது வற்புறுத்துகிறார்கள். அதாவது, விற்பொருள் வாடிக்கையாளரைச் சென்றடைந்து பலன் தந்திருக்க வேண்டும், அப்போதுதான் மூலதனமளிப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!

ஏன் அப்படி? ஏனென்றால், மூலதன நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் அளவிலான பெரும் மதிப்பீட்டில் ஒற்றைக்கொம்பு (unicorn) எனப்படும் நுகர்வோர் சார்ந்த மின்வலை நிறுவனங்களில் முதலிட்டுள்ளனர். அதனால், ஒருபக்கம் தமது மற்ற மூலதனங்களும் அத்தகைய பெரும்பலனை அளிக்கவேண்டும், அதனால், தங்கள் முதல்சுற்றே ஓரளவு வளர்ச்சியடைந்து பலனளிக்க நம்பிக்கையூட்டுவதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வேறொரு பக்கமோ, அப்படி பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இட்ட மூலதனம் சரிந்து அரைமடங்கு ஆகிவிட்ட கதைகளும் உண்டு. அதனால், அடுத்த முதலீடாவது வளரும் வாய்ப்பை அதிகம் பெற்றிருக்கவேண்டும் என்று கருதி, வளர்ச்சி அம்சத் தேவையை அதிகமாக்குகிறார்கள். காரணம் என்னவாயினும், மூலதனம் அளிக்க வளர்ச்சி எதிர்பார்ப்பு மிக உயர்ந்துள்ளது என்பதுதான் தற்போதைய நிலைமை.

அப்படியிருக்கையில், நீங்கள் நிறுவனம் ஆரம்பித்தவுடன் மூலதனம் திரட்டப்போனால் அது கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைகிறது. முன்கூறிய தாமத அபாயங்கள் இருப்பினும் நிறுவனத்தை ஓரளவுக்காவது வளர்த்து, வாடிக்கையாளர்களிடம் பேட்டா (beta) நிலையில் விற்பொருள் பலனளிக்கிறது என்று காட்டி, பிறகுதான் பெரும் மூலதனம் திரட்டுவது நல்லது. (அதனால் ஒரு டாலர் மூலதனம்கூடத் திரட்டக்கூடாது என்பதில்லை. அதைப்பற்றிப் பிறகு காண்போம்).

அப்படியே மூலதனத்தார் எதிர்பார்ப்பு உயர்ந்திருந்தாலும் ஏன் மூலதனம் திரட்ட முயலக்கூடாது? ஒரு லாட்டரி பரிசுபோல் எதாவது அதிர்ஷ்டவசமாக கிடைக்கக்கூடும் அல்லவா?! லாட்டரியில் கூட ஒரு சீட்டு வாங்கினால்தானே பரிசு கிடைக்க ஏதோவொரு வாய்ப்பு என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இப்படிப் பாருங்கள்: லாட்டரியில் சீட்டு வாங்காவிட்டால் பரிசு கிடைக்காது, ஆனால் வாங்காததால் அபாயமும் இல்லை. ஆனால் உங்கள் நிறுவனம் முதல்சுற்று மூலதனத்துக்குத் தயாராகும் முன் நீங்கள் நிதி திரட்ட முயன்றால் அது தீங்கில் முடியக்கூடும். முதலாவதாக, சில மூலதனத்தார் உங்களை நிராகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் வளர்ச்சி பெற்ற பிறகும் உங்கள் கதை பழைய கதை என்று எண்ணிச் சந்திப்பதையே தவிர்க்கக்கூடும். இரண்டாவது, சில நிராகரிப்புக்களுக்குப் பிறகு உங்கள் குழுவில் சிலர். இந்த நிறுவனத்துக்கு மூலதனமே கிட்டாது என்று அவசர முடிவுக்கு வந்து பயந்து, நிறுவனத்தை விட்டே விலகிவிடக் கூடும். அதனால் அவர்களோடு முதலிலேயே கலந்தாலோசித்து, நாமனைவரும் சிலகாலம் மூலதனமின்றித் தியாகம் புரிந்து நிறுவனத்தை வளர்த்து பிறகு நிதி திரட்ட முனைவோம் என்ற ஒப்பந்தத்தோடு செயல் புரிவது நல்லது.

நிதி நாடலைத் தாமதிக்க மேற்கூறியதை விட முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அது என்னவென்றால், நிறுவனத்தின் விற்பொருள் யோசனையில் (product idea) உங்களுக்கு எவ்வளவு திடமான, ஆதாரபூர்வமான நம்பிக்கை உள்ளது என்பது. தொழில்முனைவோர் அனைவருக்குமே, தம் யோசனையில் ஒரு வெறித்தனமான விசுவாசம் இருக்கும், அது நியாயந்தான். பார்க்கப்போனால் அத்தகைய வெறி விசுவாசம் இல்லாவிடில் நிச்சயமாக அவர்களால் நிறுவனத்தின் பாதையில் எழக்கூடிய பலப்பல தடங்கல்களைக் கடந்து வெற்றியடைய இயலாது. கருமமே கண்ணாயினாராகக் கண்துஞ்சாமல் முழு முயற்சி எடுக்கவும் முடியாது. மூலதனத்தார் கூட உங்கள் யோசனைமேல் உங்களுக்கே எவ்வளவு உற்சாகமும் நம்பிக்கையும் உள்ளது என்பதைச் சோதித்த பின்பே நிதியளிக்க முன்வருவர். ஆனால், அந்த விசுவாசம் குருட்டு விசுவாசமாக இருந்துவிடக் கூடாது.

அடுத்த பகுதியில், குருட்டு விசுவாசமின்றிச் செயல்பட ஏன் மூலதன நாடலைத் தள்ளிப்போட வேண்டும், தாமதிப்பதற்கான மற்றக் காரணங்கள் என்ன, பிற இடைப்பட்ட வழிமுறைகள் என்ன என்பவற்றை அலசுவோம்,

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com