மா. நன்னன்
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல் என்னும் சிற்றூரில் ஜூலை 30, 1924 அன்று பிறந்தவர் இவர். இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலை பல்கலையில் புலவர் பட்டம் பெற்றார். தமிழ்மீது கொண்ட ஆர்வத்தால் பெயரை நன்னன் என்று மாற்றிக்கொண்டார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்றார், துவக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்வைத் துவங்கினார். பணியாற்றிக்கொண்டே படித்து சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். பின்னர், தொல்காப்பியர் உரைகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். மாநிலக்கல்லூரி உட்படப் பல கல்லூரிகளில் பணியாற்றிய இவர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமை மிக்கவர். சென்னைத் தொலைக்காட்சியின் 'எண்ணும் எழுத்தும்' என்ற பகுதி மூலம் பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாகத் தமிழ் கற்பித்தார், பெரும்புகழும் பெற்றார்.

எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்த இவர், சுமார் 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 'உரைநடையா, குறைநடையா?', 'எல்லார்க்கும் தமிழ்', 'தவறின்றித் தமிழ் எழுதுவோம்', 'பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?', 'தமிழ் எழுத்தறிவோம்', 'கல்விக்கழகு கசடற எழுதுதல்' போன்ற இவரது நூல்கள் முக்கியமானவை. தமிழக அரசின் சமூக சீர்த்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது உட்படப் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றவர். இவருக்குப் பார்வதி என்ற மனைவியும் வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர்.



© TamilOnline.com