வெந்தய மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் - இரண்டு கிண்ணம்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெண்டைக்காய் (அ) சேப்பங்கிழங்கு - 100 கிராம்
இஞ்சி - 1/2 துண்டு

செய்முறை
ஒரு கிண்ணத்தில் பச்சை மிளகாய், சீரகம், துவரம்பருப்பு, தேங்காய்த்துருவல் இவற்றை நீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பை அதில் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் வெந்தயத்தைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்துள்ள பொருட்களைப் பிழிந்து சேர்த்து சட்னி பதத்தில் மிக்ஸியில் எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறித் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். காயைத் தனியே எடுத்துக் கொள்ளவும். மஞ்சள்தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.

அதே கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதையும் போட்டுக் கிளறி, அதில் கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறி நெருப்பைக் குறைவாக வைத்துக் கொதிக்கவிடவும். அத்துடன் பொரித்து வைத்துள்ள காய்கறித் துண்டுகளைச் சேர்க்கவும். பொங்கிவரும் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடவும். அதிகம் கொதிக்கக்கூடாது. இறக்கிவைத்த பின்பு உப்புச் சேர்க்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தட்டால் மூடிவைக்கவும்.

கமகம வெந்தய மோர்க்குழம்பு ரெடி. லேசான கசப்பு இருக்கும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதுதானே!

பிரேமா,
கம்மிங், ஜார்ஜியா

© TamilOnline.com