பீர்க்கங்காய் கிரேவி
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் - 1
புடலங்காய் (சிறியது) - 1
காராமணி (அ) தட்டைப்பயறு - 1/2 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
வற்றல் மிளகாய் (தேவைக்கேற்ப) - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளித் துண்டுகள் - 1/2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - தாளிக்க

செய்முறை
காராமணி அல்லது தட்டைப்பயறை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5, 6 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். பீர்க்கங்காய், புடலங்காய் இவற்றைக் கடாயில் 1 கிண்ணம் தண்ணீர் ஊற்றி அத்துடன் பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வேகவிடவும். முக்கால் வாசி வெந்தவுடன் அத்துடன் வேகவைத்த காராமணியைப் போட்டு, இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். காய் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும்.

சிறிய கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வற்றல் மிளகாய், கடலைப்பருப்பு இரண்டும் போட்டு, சிவக்க வறுபட்டவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். அதை மேற்கூறிய காய்க்கலவையில் கொட்டி, உப்புச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.

கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து அத்துடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து கிரேவியில் கொட்டி நன்கு கலக்கவும். அடுப்பை நிறுத்தியபின் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

காரம் அதிகம் விரும்புபவர்கள் வற்றல் மிளகாயைக் கிள்ளி அதன் தூளைத் தூவிக்கொள்ளலாம். சுவையான பீர்க்கங்காய் கிரேவி ரெடி.

பிரேமா,
கம்மிங், ஜார்ஜியா

© TamilOnline.com