இறகுப்பந்துப் போட்டிகளில் அமெரிக்காவின் தேசீய சாம்பியன் (Under 19) பட்டத்தை 2017 ஏப்ரலில் வென்றார் கோகுல் கல்யாணசுந்தரம். ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் டொரான்டோவில் நடந்த பான் அமெரிக்கன் சேம்பியன்ஷிப்பின் தனிநபர் மற்றும் டீம் போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டிகளில் இவர் தொடர்ந்து ஆறாவது முறையாக அமெரிக்காவின் சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் முதல் 4 இடத்தைப் பெற்ற வீரர்கள் பங்கேற்ற பான் அமெரிக்கன் போட்டிகளில் கோகுல் 2017ல் மூன்றாம் இடத்தைப் பிடித்ததுடன், அமெரிக்கா டீம் சேம்பியன்ஷிப்பை வெல்வதில் முக்கியப் பங்களித்தார்.
இவ்வாண்டுப் போட்டிகளின் முத்தாய்ப்பாக அவர் பங்கேற்றது இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரில் அக்டோபர் 9 முதல் 22 வரை நடந்த உலக ஜூனியர் பேட்மின்டன் சேம்பியன்ஷிப் ஆகும். இந்தியா உட்பட 60 நாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடிய கடுமையான போட்டி ஆகும் இது. முந்தைய ஆண்டுகளில் பெரூ (2015), ஸ்பெயின் (2016) நாடுகளில் நடந்த இந்தப் போட்டிகளில் கோகுல் அமெரிக்காவின் சார்பாகப் பங்கேற்றிருக்கிறார்.
கோகுல் கல்யாணசுந்தரம் மருத்துவப் படிப்பை மேற்கொண்டுவிட்ட காரணத்தால், இறகுப்பந்துக் கனவுகள் இப்போதைக்கு இங்கே நிற்கக்கூடும். ஆயினும் சாதனைகளே அவருக்கு வாழ்வாக அமையட்டும் என வாழ்த்துவோம்.
கார்த்திக் கல்யாணசுந்தரம் கோகுலின் இளைய சகோதரர் கார்த்திக்கும் 17 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் பிரிவில் இவ்வாண்டு அமெரிக்க தேசிய சேம்பியன்ஷிப்பை வென்றது வியக்கத்தக்க சாதனை. அண்மையில் தென்கலிஃபோர்னியாவில் நடந்த சூப்பர் ரீஜனல் போட்டிகளில் 19 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதலிடம் வென்றார். இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் அவர் 17 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவினர் என்றபோதும் அவர் வென்றது அடுத்த உயர்நிலையில் என்பதுதான்.
கார்த்திக் தமக்கான வயதுப் பிரிவின் கீழ் கனடாவின் டொரான்டோவில் இவ்வாண்டு ஆகஸ்டில் நடந்த பான் அமெரிக்க தனிநபர் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இதில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்பது நான்காவது முறை ஆகும். கார்த்திக் இன்னும் உயரங்களைத் தொடத் தென்றலின் வாழ்த்துக்கள்.
|