Live wire என்ற சொல்லை லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் திருமதி. ராஜஸ்ரீ நடராஜனைப் பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிரெசெண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றபின் மேலே IIT கரக்பூரில் MTech படித்தார். அவருக்கும் கணவர் திரு. சாயிராம் குமாருக்கும் நலிந்த பிரிவினருக்குக் கல்வி தருவதென்றால் அப்படி ஒரு தணியாத ஆர்வம். தகவல் தொழில்நுட்பத் துறையில் 27 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ராஜஸ்ரீ தற்போது காக்னிசென்ட் ஃபௌண்டேஷனில் உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார். பின்தங்கியோர் கல்விநிலையை உயர்த்தும் ஸ்ரீ சத்திய சாயி வித்யா வாஹினி திட்டத்தில் தன்னார்வத் தொண்டராக, வழிகாட்டியாக மிகத் தீவிரமாகச் செயல்படுகிறார். பிற்பட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் 'சாயி சங்கல்ப்' பள்ளியின் அறங்காவலர் குழுவில் இருக்கிறார். கல்வி என்றால் தேடித்தேடிப் போய் உதவுகிற இவரது அமைப்பு 'சாயி கேதார் அறக்கட்டளை'. அதன்மூலம் Katha on Ratha என்ற பணித்திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். வாருங்கள், தனது பயணத்தை ராஜஸ்ரீயே விவரிக்கக் கேட்போம்....
*****
நான் படித்தது எலக்ட்ரிகல் எஞ்சினியரிங். ஆனாலும் விரும்பி டாடா கன்சல்டன்ஸியில் சேர்ந்தேன். சென்னையில் குடும்பத்தோடு இருக்கலாம் என்பதால் நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தார்கள். பின்னர் நான் பலருக்குப் பயிற்சி அளிக்குமளவிற்கு இங்கே கற்க முடிந்தது. அதன் பிறகு சாயிராம் குமாருடன் திருமணம் நிகழ்ந்தது.
பகவானை அறியவந்தேன் என் கணவர்மூலம் எனக்கு சத்ய சாயி நிறுவனங்கள் அறிமுகமாயின. முதன்முதலில் சுவாமியின் தரிசனம் எனக்கு பெங்களூர் பிருந்தாவனில் கிடைத்தது. வெகுதூரத்தில் இருந்து பார்த்தேன். "இவ்வளவு தள்ளியிருந்து பார்க்கிறோமே" என்ற சின்ன ஏக்கம் மனதில் இருந்தது. ஆனால், பின்னால் எனக்கான தொடர்புகளை சுவாமி அங்கே வைத்திருக்கிறார் என்பது அப்போது தெரியவில்லை. நாளடைவில் இங்கே பால விகாஸில் குருவாகச் செயல்படும் பயிற்சிக்கு என்னை அழைத்தனர். ஆனால், அமெரிக்கா செல்லவேண்டி இருந்ததால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை.
டெக்சஸ் வாழ்க்கை அமெரிக்காவில், டெக்சஸ், ஹூஸ்டனில் வசித்தோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சாயி மையம் வெகுதூரம். எப்போதாவது பஜனைக்குப் போவோம். ஓரிரண்டு ஸ்டடி சர்க்கிளில் பங்கேற்றிருக்கிறேன். 1994ல் அங்கு ஒரு ஆன்மீக முகாமுக்குச் சென்றேன். அதில் "Pathways to God" என்ற நூலை எழுதிய ஜோனதன் ரூஃப் பேசினார். அவரைத் தொடர்ந்து மற்றொருவர் பேசினார். அவர் போதைமருந்துக்கு அடிமையானவர். அவர் எப்படி சுவாமியிடம் வந்து மாறினார் என்பதை விவரித்தார். ஒரு குழந்தை கேட்டது, "நீங்கள் மாறியபிறகு, உங்கள் பழைய நண்பர்களோடு இன்னும் நட்பில் இருக்கிறீர்களா?" என்று. அதற்கு அவர், "நான் பழையபடி நட்பைத் தொடர்ந்தேன். ஆனால் அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்களாகவே என் மாற்றத்தைப் பார்த்து, உண்மையைப் புரிந்துகொண்டு, மெல்ல மெல்ல மாறினார்கள்" என்றார். அதை மறக்க முடியாது.
லண்டனில் பால விகாஸ் நாங்கள் 8, 9 மாதம்தான் அமெரிக்காவில் இருந்தோம். பின் லண்டன் சென்றோம். அங்கே 1996வரை இருந்தோம். அங்கே சமிதியும், பஜனை மையமும் அருகிலேயே இருந்தது. பால விகாஸ் புத்தகங்களைக் கொடுத்து வகுப்பெடுக்கச் சொன்னார்கள். பாடல், கதை, நாடகம் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நானும் நிறையக் கற்றுக்கொண்டேன். இங்கே விடுமுறைக்கு வரும்போது ராமகிருஷ்ணா மடத்திலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன். சிறு சிறு போட்டிகள் வைத்து அந்த நூல்களைப் பரிசாகக் கொடுப்போம்.
இந்தியா திரும்பினோம் வேலையை விட்டுவிட்டு 1997ல் இந்தியாவிற்கு வந்தோம். சென்னை வந்துதான் வேலை தேடினோம். காக்னிசென்ட்டில் வேலை கிடைத்தது. அது ஒரு நல்ல அனுபவம். முதன்முதலில் ஒரு பெரிய டீமை வைத்து நிர்வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. Project management, Time management என்று பல்வேறு நிர்வாக அம்சங்களில் பயிற்சிகள் கிடைத்தன அது ஒரு தனி அனுபவமாக இருந்தது. "I can" என்ற பயிற்சி வேலைக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கும் உதவக்கூடிய பலவற்றைக் கற்பித்தது.
காசி விநாயகர் ட்ரஸ்ட் டியூஷன் சென்டர் நாம் கற்றதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது. ஒரு பள்ளி ஆரம்பிக்கவும் விருப்பம். 'சேவாலயா' முரளி உள்ளிட்ட பலருடன் ஆலோசித்தோம். அதைச் செய்ய ஆள்பலம் தேவை என்பது புரிந்தது. அதனால் முதலில் ஒரு இலவச டியூஷன் சென்டரை மேற்கு மாம்பலத்தில், எங்கள் காசி விநாயகர் ட்ரஸ்ட் மூலம் அதனை ஆரம்பித்தோம்.
அருகே எளிய பின்புலம் கொண்ட குழந்தைகள். ஒரே ஒரு அறை கொண்ட வீடு, அதில் பெற்றோர் டி.வி. பார்ப்பார்கள். படிப்பதற்கேற்ற அமைதி, தனிமை கிடைக்காது. படிக்கப் பல இடைஞ்சல்கள். அவர்கள் நன்கு படிக்க வசதியாக ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து, தினமும் மாலையில் மூன்று மணிநேரம் படிக்க வசதி செய்து கொடுத்தோம். ஆசிரியர்கள் பலர் எங்களுடன் இணைந்தனர். வீட்டுப்பாடம் முடிப்பது, பாடம் படிப்பது என்பதாகத்தான் அது இருந்தது. இதுதான் கல்வியா, இதுவே போதுமா என்று யோசித்தோம்.
வித்தியாசமாக ஏதாவது செய்ய எண்ணினோம். சனிக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ், கவிதைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஸ்லோகம் சொல்லுதல் எல்லாம் ஏற்பாடு செய்தோம். சுமார் 100 குழந்தைகள்வரை அங்கு வந்து படிப்பார்கள். நான்கரை ஆண்டுகாலம் அது தொடர்ந்தது.
பள்ளிக்கூட ஆசை வேலை காரணமாக நாங்கள் மாம்பலத்திலிருந்து வேளச்சேரிக்கு மாறினோம். மாம்பலம் மையத்தைத் தொடர முடியாமல் போனது. அப்போது ஒரு நண்பர் "சாயி சங்கல்ப் பள்ளியைப் பற்றிக் கூறினார். அது "அரசன்கழனி என்ற குடிசைகள் நிரம்பிய இடத்தில், வருவாய் குறைந்த மக்களுக்குக் கல்வி தரும் நோக்கத்தோடு நடந்து வருகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் நாய், மாடு எல்லாம் உள்ளே வருகின்றன. நீங்கள் உதவ முடியுமா?" என்று கேட்டார். நாங்கள் அங்கே போய்ப் பார்த்தோம். அதன் தாளாளர் திரு. ராஜப்பாவைச் சந்தித்தோம். ஐந்து நடுத்தரவகுப்பு இளைஞர்கள் சேர்ந்து அதனை நடத்துவதை அறிய மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.
புட்டப்பர்த்தியில் நிகழ்ந்த இளைஞர் மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது ஸ்ரீ சாயிபாபா "நீங்கள் எங்கே பள்ளிகளே இல்லையோ அப்படிப்பட்ட இடங்களில் பள்ளி தொடங்கி நடத்துங்கள்" என்று சொன்னதில் உந்தப்பட்டு, அந்தப் பள்ளியை அந்தப் பிற்பட்ட கிராமத்தில் ஆரம்பித்திருந்தார்கள். அப்போது அரசன்கழனிக்குச் சாலைகூடக் கிடையாது. மழை பெய்தால் இடுப்பளவு நீரில் குடிசைகள் மிதக்கும். சுற்றுப்புறத்திலிருந்த காலனிப் பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் அங்கு வந்து படித்தார்கள். அங்கு வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உருது பேசக் கூடியவர்கள். அப்படிப்பட்ட இடத்தில் தரமான கல்வியைத் தரும் நோக்கத்துடன் 'சாயி சங்கல்ப்' பள்ளியை ஆரம்பித்தனர். இதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. முதலில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்தோம். பின்னர் நிதி உதவினோம்.
அதைவிட, நமது உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பது முக்கியம் என்பதாக எனக்குத் தோன்றியது. குழந்தைகளுக்குப் பாட்டு, கதை சொல்லிக் கொடுக்க முடிவுசெய்தோம். நாளடைவில் அவர்கள் எங்களையும் தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்தனர். நாங்களே ஒரு பள்ளி ஆரம்பிக்க ஆசைப்பட்டோம். இப்போது ஒரு பள்ளியே எங்களை இணைத்துக் கொள்கிறது என்றால் அதை சுவாமியின் சங்கல்பமாகவே நினைத்தோம். உடனே இணைந்து கொண்டோம்.
தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் அரசன்கழனிக் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழும் பிழையில்லாமல் படிக்க, எழுத வரவில்லை என்பதைக் கவனித்தோம். அதற்காக எழுதி, படிக்கும் சில பயிற்சிகளை ஆரம்பித்தோம். நல்ல விழுமியங்களை நாடகங்கள் மூலம் சொல்வது, அதில் எல்லாக் குழந்தைகளையும் பங்கேற்க வைப்பது ஆகியவற்றைச் செய்தோம்.
குறைந்த வசதிகொண்டோர் படிக்கும் மற்றப் பள்ளிகளுக்கும் இந்தப் பயிற்சியை விரிவுபடுத்த ஆசைப்பட்டோம். நான் ஆசிரியர் பயிற்சி பெற்றவளல்ல. இந்தத் துறையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஸ்டேன்ஃபோர்டு, எம்.ஐ.டி. ஆகியவை நடத்தும் ஆன்லைன் கோர்ஸ்கள் பலவற்றைச் செய்தேன். காக்னிசென்ட்டில் Knowledge Management பிரிவுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படி, நான் கற்றதையெல்லாம் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தர விரும்பினேன். அதற்காக 'Inspire' என்ற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
ஸ்ரீ சத்ய சாயி வித்யா வாஹினி சாயிநாத் என்றொரு நண்பர், இப்போது டென்வரில் இருக்கிறார். அவர் ஸ்ரீ சத்யசாயி வித்யா வாஹினியின் தீவிரத் தொண்டர். எனக்கு அதன் இயக்குனர் சத்யஜித்தைச் சந்திக்கும் வாய்ப்பும் பின்னால் கிடைத்தது. நான் என்னவெல்லாம் செய்ய நினைத்தேனோ அதையெல்லாம் முன்பே சுவாமி வித்யா வாஹினியில் செய்து வைத்துவிட்டு "நீ வா" என்று அழைப்பதுபோல் இருந்தது. "Education for all, Education by all" என்பது அதன் கொள்கை வாசகம். இரண்டுமே என் மனதுக்கு மிகப் பிரியமானவை. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களின் அறிவு, திறமை, பண்புகள் அனைத்தையும் உயர்த்துவதைத் தொடர்பயிற்சித் திட்டமாகக் கொண்டது வித்யா வாஹினி. வித்யா வாஹினியில் டெக்னாலஜி, பின்னர் திட்டமிடல் எனப் பல அம்சங்களைப் பயின்றேன்.
சாயி கேதார் ட்ரஸ்ட் ஆங்கிலவழிப் பள்ளி எனக் கூறிக்கொண்டாலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே தமது வயது அல்லது வகுப்புக்கேற்ற மொழித்திறன் இல்லாமலிருப்பதைப் பல பள்ளிகளிலும் நாங்கள் கண்டோம். ஓர் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் மாணவரால் அவருடைய ஒரே ஒரு தேர்வைக்கூடப் படித்து, எழுத முடியவில்லை. தொழில்திறன் இருந்தாலும் வாசிக்க, எழுத முடியவில்லை. இளமையிலேயே மொழித்திறனை ஏற்படுத்தி, வாசிப்பில் ஆர்வம் உண்டாக்கினால்தான் அவர்கள் இதர பாடங்களைக் கற்று, தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்பதை உணர்ந்தோம். எப்படி மொழித்திறனை வளர்ப்பது?
நாமெல்லாம் பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். அது நமது அறிதல் ஆர்வம், கற்பனை வளம் ஆகியவற்றைத் தூண்டி, நம்மை வாழ்நாள் முழுவதும் கற்போராக (Life long learner) மாற்றியது. நாமும் கதைசொல்லிகள் மூலம் கற்கும் திறனை உயர்த்தலாம் எனத் திட்டமிட்டோம். முதலில் சாயி சங்கல்ப் பள்ளியில்தான் ஆரம்பித்தோம்.
அப்போதுதான் எங்களுக்கு காக்னிசென்ட்டிலிருந்து திருமதி. சுதா யக்ஞராமன் என்றொரு தொண்டர் கிடைத்தார். ஐ.டி. துறையில் இருந்தாலும் முன்னர் அமெரிக்காவில் மான்டிசோரி டீச்சராக பணிபுரிந்தவர். அவரது துணையுடன், மான்டிசோரி முறைப்படி சின்னச் சின்ன வார்த்தைகளை ஃபோனெடிக் ஆக எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி அளித்தோம். இதையெல்லாம் முறைப்படுத்தி நடத்துவதற்காக 'சாயி கேதார் ட்ரஸ்ட்' ஆரம்பித்தோம். இதிலிருந்து ஆயுள் கைதியின் குழந்தைகள், பெற்றோரை இழந்த மாணவர்கள் சிலருக்குப் படிக்கப் பணம் கட்டி உதவுகிறோம். படிப்புக்கு உதவித்தொகை கொடுத்து, எங்களோடு தன்னார்வப் பணி செய்யுங்கள் என்று சிலரிடம் கேட்கிறோம்.
2015ல் சென்னையில் வெள்ளம் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவற்றில் சைதாப்பேட்டை SISTWA பள்ளியும். அதில் நரிக்குறவர் குழந்தைகள் படிக்கிறார்கள். தங்கிப் படிக்கவும் வசதி உள்ளது. திருவள்ளுவர் குருகுலம் என்பது பெயர். அப்பாவும், மகளுமாக ஆரம்பித்து நடத்துகிறார்கள். இப்போது அரசு உதவி பெறுகிறது. வெள்ளத்தில் அதன் நூலகம், கம்ப்யூட்டர்கள் எல்லாம் பாழாகின. புதிய நூல்கள், கம்ப்யூட்டர்கள் வாங்க 'சாயி கேதார்' மூலம் உதவினோம். அப்போது அவர்கள், "புத்தகம் கொடுப்பதோடு நிறுத்தி விடாதீர்கள், குழந்தைகளுக்குப் படிக்கவும் சொல்லிக் கொடுங்கள்" என்றார்கள்.
Katha on Ratha
படிக்க எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்று யோசித்த போதுதான் கதை ரதம் (Katha on Ratha) தொடங்கும் எண்ணம் பிறந்தது. சிறிய எளிய கதைப் புத்தகங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பள்ளிக்குக் கொண்டு போவது; அங்கே ஒரு கதைசொல்லி (Reading coach) அந்த நூலை அறிமுகப்படுத்தி, எழுத்துக் கூட்டிக் கதையை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். அந்தப் புத்தகங்கள் நிறைய வண்ணப்படங்கள் கொண்டதாக இருக்கும்.
எங்களுடையது Train the Trainer Model. இயன்றவரை நேரடியாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. கதைப் புத்தகத்தின் மூலம் வாசித்தல், சொற்களை இனங்காணுதல், தமிழுக்கிணையான ஆங்கிலச் சொல்லைக் காணுதல், எதிர்ச்சொல், பெயர்ச்சொல் எனப் பலவகையான மொழிக்கூறுகளை அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்க எங்கள் கதைசொல்லிகள் ஆசிரியர்களைப் பயிற்றுவார்கள். அத்தோடு நிற்காமல், "இந்தக் கதையின் முடிவு வேறெப்படி இருக்கலாம்?" என்பது போன்ற கேள்விகளால் மாணவர்களுக்குச் சிந்திக்கவும், மறு ஆக்கம் செய்யவும் தூண்டுவர். படத்தைப் பார்த்து அதற்கான சொல்லைக் கூறச் சொல்வர். அதையே ஒரு குறுநாடகமாக நடித்துக் காட்டச் சொல்வது, கதையைச் சொந்த வார்த்தையில் கூறச் செய்வது என்று பலவகைப் பயிற்சிகள் இருக்கும். இப்படியாக மாணவர்களை மொழியின், கதையின் கற்பனைச் சிறகுகளில் ஏற்றி, அதன் சுகத்தைக் காண வைத்து, மிகவும் அருகிப்போன 'புத்தகம் வாசித்தல்' என்னும் ஆர்வத்தை மீட்டெடுக்கக் கதை ரதத்தைப் பயன்படுத்தினோம்.
கதை ரதத்தோடு இணைந்த பள்ளிகளுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைக் கொடுப்போம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகம். பாடப்புத்தகம்தான் ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் என்பது மாறி, கதைப்புத்தகம் அப்படி வரும்போது அவர்களுக்கு உற்சாகமாகிறது. சுமார் ஒருமாத காலத்தில் அந்த நூலுக்கான எல்லாப் பயிற்சிகளும் முடிந்தபின் அடுத்த நூலின் பிரதிகளைத் தேவையான எண்ணிக்கையில் கொடுப்போம்.
இந்தப் புத்தகங்கள் பள்ளிகளுக்குச் சுழற்சி முறையில் சென்றுகொண்டே இருக்கும். குழந்தைகளுக்குப் புரியாத மொழியோ, களமோ, சூழலோ இல்லாதபடி பார்த்துக்கொண்டோம். அவர்களுக்குத் தெரியாத வாழ்க்கையாக இல்லாமல், அவர்களைச் சுற்றியிருக்கிற, புரிந்துகொள்ளக் கூடியதாக அந்தப் புத்தகங்கள் இருக்கும். துலிகா புக்ஸ், ப்ரதம் புக்ஸ், யுரேகா புக்ஸ் போன்றவை எங்களுக்குப் பொருந்தி வந்தன. ப்ரதம் புக்ஸ் நூல்களை ஆன்லைனில் வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம், அச்சடித்துக் கொள்ளலாம் என்று க்ரியேடிவ் காமன்ஸ் இலவச காபிரைட் கொடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தமிழில் பெயர்த்து இரண்டையுமே கொடுக்கிறோம்.
சாயி சங்கல்ப் பள்ளிதான் எங்கள் முதல் சோதனைக்கூடம். அதன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு இல்லாமல் இதனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தெரியாதவர்கள் முதலில் ஆங்கிலத்தில் படித்துவிட்டுத் தமிழுக்கு வருவார்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்துக்குப் போவார்கள். எப்படியாவது அவர்களைப் படிக்க வைக்கவேண்டும், அவ்வளவுதான்.
ரதம் செல்லும் பாதை Hand in Hand அமைப்பினர் சாலையோரச் சிறார், குழந்தைத் தொழிலாளிகள் ஆகியோரைத் தேடிப்பிடித்து அவர்களின் கல்விக்கண்ணைத் திறக்கிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை ஆகிய இடங்களில் ஆறு பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். தவிர இரண்டு மெட்ரிக் பள்ளிகளும் உண்டு. இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை 80 குழந்தைகளாவது இருப்பார்கள். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் என்பதால் ஒவ்வொருவரின் லெவலும் வேறு மாதிரியாக இருக்கும். ஆகவே அவர்களைப் பயிற்றுவிக்க முதலில் அந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். வில்லுப்பாட்டு, நிழல் பொம்மலாட்டம் என்று பலவகை உத்திகளைக் கையாண்டு அவர்கள் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுக்கும் விதம் மனதை தொட்டுவிடும். அத்தனை அர்ப்பணிப்பு, உற்சாகம் அங்கிருப்பவர்களுக்கும்.
இப்படி முதலில் 8 பள்ளிகளில் ஆரம்பித்தோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான் இலக்காக இருந்தது. 20 பள்ளிகளில் இப்போது கதை ரதம் ஓடுகிறது. திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் விரைவில் போக இருக்கிறோம். ஏகல் வித்யாலயா, விதார்த், SODEWS போன்றோரும் இதற்காக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
கவனிக்க வேண்டியவை Reading Rockets என்று அமெரிக்காவில் நன்றாகச் செய்கிறார்கள். அதைத் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியாது. காரணம், அமெரிக்க உச்சரிப்பு இவர்களுக்கும் அன்னியமானது.
மொழித்திறனை வளர்ப்பதில் LSRW (Listening, Speaking, Reading, Writing) Skills என்று சொல்வார்கள். முதலில் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்; கேட்டதை வாசிக்கவேண்டும்; நன்கு புரிந்து படித்து உணர்ந்து கற்று அதனைச் சொல்லவேண்டும். கூடவே ஆராயும் திறனும் வேண்டும். இன்றைக்கு இணைய உலகில், மீடியாவில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால் போதுமா? கிடைத்தது நல்ல கருத்தா என்று ஆராயவேண்டும். ஆராய்ந்து அறிந்ததை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் 'கம்யூனிகேஷன்' திறன் வேண்டும். கற்பனை வளம், படைப்பாற்றல் வேண்டும். இப்படியெல்லாம் எண்ணி கதை ரதத்தை வடிவமைத்தோம்.
கதை ரதத்தைப்பற்றி ஹிந்து மெட்ரோவில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, பல பள்ளிகள் தொடர்புகொண்டன. முதலில் ஆஷா "நாங்கள் ஒரு பள்ளியை தத்தெடுத்திருக்கிறோம், அங்கு வரமுடியுமா?" என்று கேட்டார்கள். அடுத்து ஐ.சி.எஃப். பள்ளி முன்னாள் மாணவர்கள் வந்து கேட்டார்கள். சில தன்னார்வத் தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.
தென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதியும் நலிந்தோர் நலம் மற்றும் கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் சாயி சங்கல்ப் பள்ளியின் ஆரம்பகாலத்திலிருந்தே ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். வித்யா வாஹினியில் எங்களோடு மென்ட்டாராகப் பங்கேற்கிறார். அவரைச் சாயி கேதார் ட்ரஸ்ட் மற்றும் கதா ஆன் ரதாவின் கௌரவ ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சாயி சங்கல்ப் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ஆர். கண்ணன் எங்களோடு இணைந்திருக்கிறார். சத்ய சாயி வித்யா வாஹினியில் ஃபெலோஷிப் ஆக இருந்த கரன்குமார், நவீன், திவ்யா ஆகியோர் எமது பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த மூவரில் முதல் இருவருக்கும் தமிழ் தெரியாது. ஹிந்தி, ஆங்கிலம் பேசுவார்கள். அதுவும் ஒரு புதுவித அனுபவம்தான்.
மற்றபடி இதுவே இறுதியல்ல. அவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக இதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இதற்கப் பிறகும் சத்ய சாயி வித்யா வாஹினி போன்றவற்றிலிருந்து தமது அறிவு, திறன், மனப்பாங்கு குறித்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். கதை ரதம் ஒரு தயாரிப்பு நிலைதான்.
நிலை அறிதல் எழுத்து, சொல், வாக்கியம் என்று வாசிப்பில் வளர்ந்து, பின்னர் புரிதல் நிலை, அலசி அறியும் நிலை, படைப்பாற்றல் என்று வளரவேண்டும். இவற்றை அறிவதற்கு என்று அசெஸ்மென்ட் டூல் வடிவமைத்தோம். பத்துக் கேள்விக்கு மேல் இருக்கக்கூடாது. ஆசிரியருக்கோ மாணவருக்கோ பரிட்சை போல இருக்கக்கூடாது.
சாதாரணமாக, கற்றுக்கொடுத்த புத்தகத்திலிருந்து டெஸ்ட் வைப்பார்கள். அப்படியல்லாமல், ஒரு புதுப் புத்தகத்தைப் படித்துக் குழந்தைகள் கிரகித்துக் கொள்கிறார்களா என்பதுதான் எங்கள் டெஸ்ட். எல்லாருக்கும் ஒரேமாதிரி டெஸ்ட் கூடாது, விதவிதமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரியவர்களாகி மேத்ஸ் ஒலிம்பியட், ஐ.ஏ.எஸ். என்று போனால் விதவிதமாகக் கேள்விகள் வரும். பதிலெழுதத் தயாராக வேண்டும். அந்தத் தகுதியை இப்போதே வளர்க்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம். பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அசெஸ்மெண்ட் செய்கிறோம். அந்த ரிசல்ட்டுக்கு ஏற்ப பயிற்சிமுறை மாறும்.
ஒலிநூல் தொலைதூரப் பள்ளிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் தொண்டர்கள் கிடைப்பது கடினம். அப்போதுதான் ஒலிப்பதிவு எண்ணம் வந்தது.சின்னச் சின்ன வார்த்தைகளை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்பதில் தொடங்கி அனிமேடட் ஆடியோ புக் வரை போடலாமா என்று ஆலோசித்து இப்போது அதைச் செய்து வருகிறோம். நிறைய வாலண்டியர்ஸ் இந்தப் புத்தகங்களைப் படித்து வாய்ஸ் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் சின்ன ட்ரெயினிங் உண்டு. எப்படி மெதுவாகப் படிக்க வேண்டும், சரியாக உச்சரிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளுடன் அதனைப்படிக்க வேண்டும், கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்போம்.
சேர வாரீர் செகத்தீரே! இதற்குத் தன்னார்வத் தொண்டர்களை வரவேற்கிறோம். அவர்கள் உலகில் எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள மைக்கில் ரெகார்ட் செய்து அனுப்பினால் போதும். எடிட்டிங் மற்றவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
ஆங்கிலமும் தமிழும் சேர்ந்து கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தைத் தமிழ்வழியாக உச்சரித்து, தமிழில் எழுதிப் பார்த்து, இதனை ஆங்கிலத்தில் படித்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே தமிழ் தெரிந்த, ஆங்கிலமும் பேசக்கூடிய, அடிப்படைக் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிற எல்லாரும் வாருங்கள். அவரவர் ஊரில் கொண்டுபோய்ச் செய்யுங்கள். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை, பயிற்சிகளை நாங்கள் தருகிறோம். இதே பெயரில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எல்லாரையும் சென்றடைய வேண்டும், அதுதான் முக்கியம்.
நாங்கள் இலவச க்ரியேடிவ் காமன் லைசென்ஸ் மூலமாக நூல்களை எடுத்துக்கொள்கிறோம். திருப்பி நாங்கள் செய்யப்போவதும் க்ரியேடிவ் காமன் லைசன்ஸ் மூலமாகத்தான். அதேபோல, ஆர்வமுள்ளவர்கள் அவரவர் மொழியில் - தெலுங்கிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ, வங்காளியிலோ, பஞ்சாபியிலோ செய்யலாம். நாங்கள் வரவேற்கிறோம்.
இப்போது நாங்கள் பயிற்சி நடத்தும் 20 பள்ளிகளுமே மிகவும் பின்தங்கிய சமூகநிலையில் உள்ளவர்களுக்கானவை, அநேகமாக அரசுப் பள்ளிகள். தனியார் பள்ளிகள் என்றால் கட்டணம் வாங்காத அல்லது மிகக்குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளிகள். நாங்கள் பள்ளிகளிடம் பயிற்சி, புத்தகங்கள் எதற்கும் கட்டணம் வாங்குவதில்லை. சமீபத்தில்கூட மழையில் நனைந்து பல புத்தகங்கள் பாழாகிவிட்டன. அவற்றுக்கு பதிலாக புதுப் புத்தகங்களைக் கொடுத்தோம்.
வரும்நாட்களில்... ஆங்கிலத்தில் இருப்பதுபோல பாட்டு, கலைகள், கைவினைகள் எல்லாம் தமிழிலும் சொல்லிக்கொடுக்க ஆசை இருக்கிறது. நாங்கள் செல்லும் பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற சாதாரணப் பள்ளிகள். குழந்தைகளுக்கு நல்ல ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்த யாருமில்லை. நல்ல ஆடியோ புக் கொண்டுபோய் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ரெகார்டிங் கூட ஆரம்பித்தோம். ஏன் கர்நாடக சங்கீதம் கரோகியில் வருவதில்லை என்ற குறை இருக்கிறது. சின்னச் சின்னப் பாடல்கள், செய்யுள்கள் எல்லாம் ஆடியோவில் கொடுக்க ஆசை. அடுத்து கணிதத்தையும் கொண்டுசெல்ல வேண்டும்; திறன்களை வளர்க்க வேண்டும். ஆனால், ஒவ்வொன்றாகத்தான் செய்கிறோம்.
முதலில் கதை. பின்னர் மொழித்திறன் அதில்தான் இப்போது கவனம். ஒவ்வொன்றும் இரண்டு வருடமாவது காலூன்றிய பிறகு மற்றவற்றைக் கையில் எடுக்கலாம் என்று நினைக்கிறோம்.
சந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்
*****
என் கணவர் சாயிராம் குமார் நான் இங்கே பேசும்போது செய்தோம், எண்ணினோம் என்றே சொல்கிறேன். காரணம், எதையுமே நான் தனியாகச் செய்யவில்லை. கல்யாணம் ஆனது முதல் என் கணவர் சாயிராம் குமாரின் முழு ஒத்துழைப்போடுதான் எல்லாப் பணிகளையும் செய்து வருகிறேன். பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அறிமுகமானதும் அவரால்தான். அதை ஒரு பெரிய கருணை என்று சொல்லவேண்டும். அந்தப் பயணம் சேர்ந்துதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது 'கதா ஆன் ரதா' மூலமாக.
- ராஜஸ்ரீ நடராஜன்
*****
"சொதப்பிட்டேன், இல்லே?"
கதை ரதம் போன பள்ளிகளில் "மேடம், இப்பல்லாம் பிள்ளைகள் தாங்களாகவே புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார்கள். சாயி சங்கல்ப்பில் சனி, ஞாயிறு நாட்களில் பள்ளி விடுமுறை என்றாலும் நூலகம் திறந்திருக்கும். வேறு உயர்நிலைப்பள்ளிக்குப் போய்விட்ட முன்னாள் மாணவர்கள் சனிக்கிழமை புத்தகம் படிக்க என்றே அங்கே வருகிறார்கள். சமீபத்தில் நடந்த விஷயம் இது. அந்தக் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட். எழுதுவது, படிப்பது எல்லாம் வெகு நிதானமாகவே செய்யும் ஸ்லோ லேர்னர். எழுதுவது மிகச் சிரமமான விஷயம். அடுத்த வகுப்பு 'கதா ஆன் ரதா' என்றதும் கிடுகிடுவென்று எழுதி முடித்துவிட்டான். ஏன் இவ்வளவு வேகம் என்றால், "எழுதி முடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்பீர்கள் நீங்கள். அதனால்தான் வேகமாக எழுதினேன்" என்றானாம். இந்த மாற்றதைக் கொண்டுவருவதுதான் எங்கள் குறிக்கோள்.
அது போன்று SISTWAவில் ஓர் எட்டாவது வகுப்பு மாணவி, தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவள். "அப்புறம் எப்ப வருவீங்க?" என்றாள். "அடுத்த வாரத்தில் இவங்க வருவாங்க. நாங்க எப்ப முடியறதோ அப்போ வருவோம்" என்று சொன்னேன். "இங்கிலீஷ்ல கொஞ்சம் சொதப்பிட்டேன் இல்ல" என்றாள். அவளிடம் அந்த ஏக்கம் வந்துவிட்டது, கற்றுக்கொண்டு விடுவாள். உதவ நாம் இருக்கிறோமே.
- ராஜஸ்ரீ நடராஜன்
*****
கைகோக்க வாருங்கள்!
எதையுமே நாங்கள் தனியாக அல்லது எங்கள் பெயரில்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. இது நிறையப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு நிறையத் துணைவர்கள் வேண்டும். கல்வித்துறையில் சேவை செய்யும் என்.ஜி.ஓ.க்களுடன் கைகோக்க வேண்டும். அது இந்தியாவில் இருக்கலாம்; வெளிநாட்டில் இருக்கலாம்; அவை தங்கள் செயல்திட்டத்தை, ஆராய்ச்சியை, கன்டென்ட்டை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அதை நாங்களும் தேவைப்படுவோருடன் பகிர்ந்துகொள்வோம். அவர்களுடைய தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவோம். நாங்கள் செயல்படும் மாவட்டங்களுக்கெனச் சுழலும் நூலகங்களை அமைப்பது பற்றியும் யோசித்து வருகிறோம். பார்ட்னர்களிடம் ஐந்து, பத்து, ஐம்பது பள்ளிகள் இருந்தாலும் அவர்கள் 'கதை ரதம்' திட்டத்தை அவர்கள் நிர்வகித்துக் கொள்ளலாம். பயிற்சி கொடுத்து உதவுவது எங்கள் பணி.
- ராஜஸ்ரீ நடராஜன்
*****
தொடர்புகொள்ள
மின்னஞ்சல்: kathaonratha@gmail.com முகநூல்: /KathaOnRatha |