ஜூலை 29, 2017 அன்று கேன்டன் மிச்சிகன் ஹிந்து கோவிலில் செல்வி. சுவேதா சுப்பையாவின் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடந்தது. 'இன்டர்நேஷனல் அகடமி ஆஃப் இந்தியன் மியூசிக்' என்ற இசைப் பள்ளியில் குரு திருமதி. கஸ்தூரி சிவகுமாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளாக இசை பயின்று வருகிறார் சுவேதா. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பிரபல பாடகர் நெய்வேலி திரு. R. சந்தான கோபாலன். சிறப்பு விருந்தினர் ஐ கர்நாடிகா நிறுவனர் திரு. ரவி நடராசன்.
மூன்று மணி நேரத்தில் பன்னிரண்டு வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு மொழிப் பாடல்களைப் பாடித் திறமையை வெளிப்படுத்தினார் சுவேதா. குறிப்பாக அருணகிரிநாதர், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, தஞ்சாவூர் சங்கர அய்யர் ஆகியோரின் தமிழ்ப் பாடல்கள் அவையோரை மகிழ்வித்தன. காம்போஜி ராகத்தில் "ஓ ரெங்கசாயீ", மற்றும் தேஷ் ராகத்தில் "ராம நாமமே துதி" ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வயலினில் திரு. ஜெய்சங்கர் பாலன், மிருதங்கத்தில் திரு. வினோத் சீதாராமன், கடத்தில் திரு. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பாக உடன்வாசித்தனர்.
சுவேதா யூனிவர்சிட்டி ஆப் மிச்சிகனில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பயில்கிறார். 2016ம் ஆண்டு கலா சேவா என்ற நிகழ்வை நடத்தி 2000 டாலர் திரட்டி அமெரிக்க கேன்சர் சொசைட்டிக்கு அளித்தார்.
'இன்டர்நேஷனல் அகடமி ஆஃப் இந்தியன் மியூசிக்' இசைப்பள்ளியை 2004ம் ஆண்டு முதல் திருமதி.கஸ்தூரி சிவகுமார் மற்றும் அவரது துணைவர் திரு. சிவகுமார் பட் தொடங்கித் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
காந்தி சுந்தர், மிச்சிகன் |