செப்டம்பர் 16, 2017 அன்று நர்த்தனா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. அதிதி கிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃப்ரிமாண்ட் ஓலோனி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 14 வயதே ஆன அதிதி குரு திருமதி. ஜனனி ஜயகுமார் அவர்களிடம் நடனம் பயில்கிறார்.
கம்பீர நாட்டையில் புஷ்பாஞ்சலி, 'நமசிவாய வாழ்க' சிவஸ்துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. "ஆனந்த தாண்டவ கணபதி", நாராயண கவுத்துவம் கச்சிதமான அடவுகளுடன் அமைந்திருந்தன. தொடர்ந்து வந்த முருகன் மீதான வர்ணம் "நாதனை அழைத்து வா சகியே" அதிதியின் திறமைக்குச் சவாலாக இருந்தது. குரு அடையாறு லக்ஷ்மணனின் "நந்தி சொல்" பாட்டுக்கு தாளக்கட்டுடன் சிறப்பாக ஆடினார். "விஷமக்காரக் கண்ணா" பதத்தில் துள்ளலுடன் கூடிய துல்லிய அபிநயங்கள் காண்போரைக் கவர்ந்தன. பின்பு வந்த தில்லானாவும், இறுதியாக ராகமாலிகையில் அமைந்த "வாரணம் ஆயிரம்" பாசுரமும் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தன. உடையலங்காரம் ஆண்டாளைக் கண்முன் நிறுத்தியது.
மங்களத்துடன் நிறைவடைந்த நிகழ்ச்சிக்குப் பதின்ம வயதினரான கீதா சங்கர் (வாய்ப்பாட்டு), மாலினி மஹேஸ் (வயலின்), அக்ஷய் வெங்கடேசன் (மிருதங்கம்), காஷ்வி (நிகழ்ச்சித் தொகுப்பாளர்) ஆகியோர் மெருகூட்டினர். நட்டுவாங்கம்: குரு ஜனனி. இளவயதினரது திறமையைக் கண்டறிந்து பெருமையுடன் வெளிக்கொணர்ந்த ஜனனி பாராட்டுக்குரியவர். நிகழ்ச்சியின்மூலம் வந்த நன்கொடையை Aim For Seva அமைப்புக்கு அளித்து அதிதி அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடம்பெற்றார்.
செய்திக் குறிப்பிலிருந்து |