2007 மார்ச் 21லிருந்து ஏப்ரல் 20ம் தேதிவரை மிச்சிகன் பாண்டியாக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் குபேரலிங்க பிரதிஷ்டையை முன்னிட்டு யந்திர நவரத்தினப் பிரதிஷ்டை உட்பட குபேரலிங்க ஸ்தாபனத்திற்காக யாக அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மார்ச் 25 அன்று உமையாள் முத்து அவர்கள் குபேரலிங்கத்தின் சிறப்புகளைக் குறித்தும் பல்வேறு இலக்கியங்களைப் பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். ஆலயத்தின் சார்பில் ஷைலஜா அவர்களின் சிவசக்தி நாட்டிய நடனம் மிச்சிகன் சீஹோம் உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது.
சென்னையிலிருந்து வந்திருந்த நாட்டிய மணியான ஷைலஜா, தாளம், ராகம், பாவம் இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று போட்டி யிட சிவசக்தியை மையமாக வைத்து சிவனாகவும் சக்தியாகவும் மிகச் சிறப்பாக ஆடினார். சுவாதித் திருநாள் கிருதிக்கு அவர் ஆடிய குச்சுப்புடி நடனம் மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.
டாக்டர் குமார் அன்னை பராசக்தி அவர்களின் அருட்கருணை, ஆலயத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்துச் சொற்பொழிவு ஆற்றினார். குமார் அவர்கள் வழங்கிய இரண்டரை மில்லியன் டாலரில் தொடங்கப் பட்ட அன்னையின் ஆலயம் இன்று பிள்ளையார், முருகன், சிவன், நடராஜர், ஐயப்பன், பூரி ஜகந்நாதர், குருவாயூரப்பன், நவக்கிரங்கள், குபேரலிங்கம் என்று எல்லாத் தெய்வங்களும் குடிகொண்டுள்ள இடமாக வும், தென்னக முறைப்படி அமைந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.
மீனா |