செப்டம்பர் 30, 2017 அன்று ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்க நிதி திரட்டும் பொருட்டு அனைத்து நியூ இங்கிலாந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி 'இதயகீதம்' என்ற மெல்லிசை நிகழிச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
திரு. கார்த்திக் ஐயரின் இண்டோசோல் குழுவோடு பின்னணிப் பாடகர் திரு தேவன் ஏகாம்பரம் கைகோத்துச் சிறப்பாக 'இதயகீதம்' நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர். ரோடு ஐலண்டு தமிழ்ச்சங்கம் மற்றும் நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தினர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. தமிழிருக்கையின் திரு. சம்பந்தம் 'தமிழிருக்கை' பற்றி விளக்கிப் பேசினார். பமிலா வெங்கட், கார்த்திக் ஐயர் குழுவையும், பின்னணிப் பாடகர் திரு.தேவன் ஏகாம்பரத்தையும் அறிமுகப்படுத்துகையில், நிகழ்ச்சியை இருவரும் இலவசமாக நடத்தித்தரச் சம்மதித்ததை பெருமையாகக் கூறினார்.
கார்த்திக் ஐயர் வழங்கிய பித்துக்குளி முருகதாஸின் செங்கதிர் வானம், கர்மாவின் இரு பக்கம், சாரங்க, பாரதியாரின் "ஆசைமுகம் மறந்துபோச்சே", ரகுவம்ச, நகுமோ, சமீபத்திய பௌண்ட்லெஸ் என்று அத்தனையும் அற்புதம். தேவன் வரிசையில் "நெஞ்சுக்குள் பெய்திடும்", "காதல் சடுகுடு", "ரம் பம் பம்" போன்ற பாடல்கள் இனிமை. நிகழ்ச்சியில் $25,000 திரட்டப்பட்டது. லோசன் கார்த்திக்கின் ஹார்வர்ட் தமிழ் இருக்கை காணொளி மிக நன்று. திரு. கார்த்திக் ராமு மற்றும் திரு. சி.டி. நாராயணன் நன்றியுரை வழங்கினர்.
அடுத்து நவம்பர் 17 அன்று YGM வழங்கும் "காசேதான் கடவுளடா" நகைச்சுவை நாடகம் செயின்ட்.ஜான்ஸ் பள்ளி, ஷ்ரூஸ்பரியில் நடக்க உள்ளது. தொடர்ந்து ஹார்வர்டு தமிழிருக்கைக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்!
பமிலா வெங்கட், பாஸ்டன், மாசசூஸட்ஸ் |