ஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான்
2017 அக்டோபர் 13-15 நாட்களில் மிச்சிகனின் ஃபார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் 16 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமானும், ஸ்ரீ குருவாயூரப்பனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னதாகப் பன்னிரு ஆழ்வார்களும், உடையவர் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு நிறுவப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து பெருமாள், தாயார், லக்ஷ்மண ஹனுமான் சீதா ஸமேத பத்ராசல ஸ்ரீராமர் மற்றும் உத்ஸவ மூர்த்திகள் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோவிலை நிறுவிய விஜயராகவன் தம்பதியர், 40 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். இறைப்பணியில் ஆழங்கால் பட்டவர்கள். உத்சவ மூர்த்திகளையும், மூல விக்ரஹங்களையும் வடிக்கச்செய்து அமெரிக்கா வந்து சேரும்வரை மொத்தத்தையும் கவனித்தது கிரி நிறுவனத்தின் திரு. ராமன்.

மூன்று நாட்களும், நாள் முழுவதும் வேதமந்திர கோஷம், பகவன் நாமம், கர்நாடக சங்கீதம் இசைக்கப்பட, யாகசாலைகள் அமைக்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டு, பலவித அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயமே பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது. கோவில் விமானம் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குக் கப்பலில் புறப்படத் தயார் நிலையில் இருக்கிறது.

அன்பர்கள் சகல நலன்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ தரிசிக்க வேண்டிய முக்கியத் தலம் Farmington Hills ஸ்ரீபக்த ஹனுமான் ஆலயம்.

டி.எஸ். ரங்கநாதன்,
மிச்சிகன்

© TamilOnline.com