தன்மானம்!
இது கதையல்ல; நிஜம். போன வாரம் நடந்தது.

சுமார் ஐந்து வருடங்களாக அவரைப் பார்த்து வருகிறேன். இங்குள்ள ஒரு குரோசரி ஸ்டோரில் வேலை செய்கிறார். என்னைவிட இளையவர், வயது 55 இருக்கும். பார்த்தவர்களை அதிரவைக்கும் 45 டிகிரி கூனல். அவரைப் போல நாம் இருந்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்போம். அவர் செய்யும் வேலை எளிதல்ல. தரையைப் பெருக்கி வேக்ஸ் செய்வது. மிகவும் கனமான வாக்குவம் க்ளீனரையும் வேக்ஸரையும் அவர் கஷ்டப்பட்டுத் தள்ளிப் போவதைப் பார்க்கும்போதெல்லாம் எனது மனது சங்கடப்படும்.

அவர் நிறம் வெள்ளை. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகம். யாரிடமும் பேசி நான் பார்த்ததில்லை. ஒருவேளை ஊமையோ என்றுகூட நினைத்தேன். சில சமயம் அவரருகில் சென்று, "ஹலோ" என்பேன். அவர் எப்போதாவது தன் தலையை அசைப்பார்.

அவர் படும் சிரமத்தை நானும் உணரவேண்டும் என்று ஒருநாள் நினைத்தேன். அவரைப் போல கூனிக்கொண்டு வீட்டின் பின்புறத்தில் நடந்தேன். 15 நிமிடந்தான் என்னால் நடக்க முடிந்தது. இடுப்பிலும் முதுகிலும் தாங்கமுடியாத வலி! வீட்டுக்குள் வந்து அரைமணி நேரம் படுத்திருந்த பின்புதான் வலி குறைந்தது.

அவர் பரம ஏழை என்றும் நண்பர்கள் எவரும் இல்லை என்றும் அறிந்தேன். அவருக்கு எப்படியாவது என்னால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றிவிட்டது.

இந்தச் சம்பவம் நடந்த அன்று, அதே கடைக்குக் கறிகாய் வாங்கச் சென்றிருந்தேன். அவர் தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் அருகில் போய் ஐந்து டாலரை நீட்டி, "இது உங்களுக்கு லஞ்சுக்கு உதவும்" என்றேன்.

அவர் வேலை செய்வதை நிறுத்தவில்லை. என்னைப் பார்த்து "I don't want that kind of money" என்றார்.

நான் உறைந்து போனேன்.

டாக்டர் ஏ. சுந்தரராஜன்,
நார்மன், ஓக்லஹாமா

© TamilOnline.com