முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்.
கேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்ட எது சரியான தருணம்? (தொடர்கிறது)
பதில்: சென்ற பகுதிகளில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பின்வரும் அம்சங்களை விவரித்திருந்தேன்: உங்கள் நிறுவன வகை, குழு பலம், வணிகத் துறை, தற்போதைய வளர்ச்சி நிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்கவேண்டும் என்பதாகக் கூறியிருந்தேன். மேலும், மூலதனத்தாருக்குப் பெரும்பங்கு அளிக்க வேண்டி வந்தாலும் உடனே மூலதனம் திரட்டுவதற்கான இரு காரணங்களையும் பார்த்தோம்: ஒன்று, உங்கள் வணிகத் துறையில் ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் விற்பொருளுடன் இயங்குவது. மற்றது, உங்கள் வணிகத் துறையில் நுழைவது சுலபமானால், செயல்பாட்டு வேகம் மற்றும் திறன் முக்கியமாக இருப்பதால், உடனே மூலதனம் திரட்டி வேகமாக இயங்கியாக வேண்டும்.
உடனே மூலதனம் திரட்டுவதற்கு இன்னொரு காரணம், மூலதனத்தார் தளர்ச்சி (investor fatigue). அதாவது, உங்கள் நிறுவனத்தின் வணிக உபதுறையில் ஏற்கனவே பல நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு மூலதனம் பெற்றிருக்கலாம். அப்படியானால், நீங்கள் தாமதிப்பது நல்லதல்ல. நீங்கள் கஷ்டப்பட்டு சிறிய மூலதனத்தோடு (அல்லது மூலதனமேயின்றிகூட) ஓரளவுக்கு விற்பொருள் தயாரித்துவிட்டு "ஆஹா, இப்போது பாருங்கள் இந்தப் படுசூடான துறையில் (red-hot area) என் நிறுவனத்துக்கு அதிக மதிப்பீட்டில் மூலதனம் கிடைத்து விடும்" என்று ஆவலுடன் போய் மூலதனம் திரட்ட யத்தனிப்பீர்கள். ஆனால் நீங்கள் நாடும் ஒவ்வொரு மூலதன நிறுவனமும், அதே உபதுறையில் ஒரு நிறுவனத்துக்கு ஏற்கனவே மூலதனமிட்டுவிட்டதாகக் கைவிரித்து விடக் கூடும். அல்லது, "அய்யய்யோ, அந்த உபதுறையா, வேண்டாமப்பா, அதில் ஏற்கனவே நிறைய மூலதனம் புகுந்துவிட்டது. இப்போது நாங்கள் வேறு உபதுறையில் தான் நாட்டம் கொள்கிறோம்" என்று நிராகரிக்கக் கூடும். தகவல் சேமிப்பு (data storage), மற்றும் கணினிப் பாதுகாப்பு (cyber security) போன்ற துறைகளில் சில நிறுவனங்களுக்கு இந்தக் கதி ஆனதை நான் கண்டிருக்கிறேன்.
அப்படி ஆகிவிட்டால், உங்கள் நிறுவனத்துக்கு மூலதனமே கிட்டாமல் போய் நெருக்கடி நிலையில் மிகக்குறைந்த விலைக்கு உருவாக்கிய தொழில்நுட்பத்தை மட்டும் விற்க வேண்டிவரலாம் (technology fire sale); அல்லது மற்றொரு நிறுவனம் உங்கள் நிபுணர்களை அமர்த்திக்கொள்ள வேண்டி எதோ ஒரு சிறு தொகையோ பங்குகளையோ அளித்துச் சேர்த்துக் கொள்ளலாம் (acqui-hire). இம்மாதிரி மூலதனத் தளர்ச்சி உங்கள் துறையில் நேரக்கூடும் என்ற சகுனங்கள் வர ஆரம்பித்தவுடனேயே விரைவாக மூலதனம் நாடுவதே சரியான அணுகுமுறை.
மூலதனம் சீக்கிரமே திரட்ட இன்னொரு காரணம் உள்ளது. சில வணிக உபதுறைகளில், முக்கியமாக நுகர்வோர் சார்பான (consumer oriented) துறைகளில் முதல்முனைவோர் சாதகம் (first mover advantage) என்னும் இயல்பு உள்ளது. அதாவது ஒரே விதமான சேவையுடன் களத்தில் இறங்கும் முதல் நிறுவனம் தன் துறையில் புகழ் (branding) பெற்று, பயனர்களை (users) பெரும்பாலும் தனதாக்கிக் கொண்டுவிடும். அதே துறையில் பின்பு களமிறங்கும் நிறுவனங்கள் நல்ல சேவையளித்தாலும், சதவிகித அளவில் முதல் நிறுவனத்தை விட மிகக் குறைவாகப் பயனர்களைப் பெறும். முக்கியமாக வலை இயல்பு (network effect) எனப்படும் இயல்புள்ள துறைகளில் முதல் முனைவோர் சாதகம் இன்னும் அதிகம். உதாரணமாக ஈபே (eBay) நிறுவனத்தைக் காட்டலாம். 1996 கால கட்டத்தில் பியர் ஒமிட்யார் என்பவர் சிறு பொருட்களை ஏலமிடும் சேவையை ஆரம்பித்தார். அதில் பயனர்கள் அதிகரிக்க அதிகரிக்க, ஏலமிடுபவர்களும் அதிகம் நாடினர், அதிக ஏலங்கள் இருந்ததால் பயனர்கள் இன்னும் அதிகரித்தனர். இந்த வலை இயல்பை முறியடிக்க இணைய ஏலத்துறையில் நுழைந்த அடுத்த நிறுவனங்களால் இயலவில்லை. ஈபே பெரும் நிறுவனமாக வளர்ந்தது. அதேபோல் சமீப காலத்தில் ஏர்பிஎன்பி (AirBnB) நிறுவனத்தை உதாரணமாகக் காட்டலாம். இப்படிப்பட்ட பெயர்-புகழ் அல்லது வலையியல்பே வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய துறைகளில் தழைக்க வேண்டுமானால் விரைவாக மூலதனம் பெற்றுக் களமிறங்கியே தீர வேண்டுமல்லவா?
முதலில் முனைந்த நிறுவனந்தான் வெற்றி பெறும் என்பது நிச்சயமல்ல. ஃப்ரெண்ட்ஸ்டர் (Friendster) தோல்வியுற்று ஃபேஸ்புக் (facebook) பின்பு வந்து வெற்றி கண்டதல்லவா? கூகிள் நிறுவனம் தேடல் துறைக்கு வெகுநாட்களுக்குப் பிறகு நுழைந்து வெற்றி கண்டுள்ளது. ஆனால் வெகுவாக, பெயர்-புகழ் மற்றும் வலையியல்பால் நிர்ணயிக்கப் படும் துறைகளில் மூலதனத் தாமதிப்புப் பொதுவாக இழப்பைத் தரும் வாய்ப்பே அதிகம். மூலதனத்தாரும் இப்படித்தான் எண்ணித் தயங்குவார்கள். எதாவது பெரும் சாதகம் இருந்தால்தான் தாமதமாகக் களமிறங்கும் நிறுவனம் மூலதனம் பெற்று வெற்றியடைய இயலும். உங்கள் நிறுவனத்துக்கு அப்படிச் சாதகமான அம்சம் என்ன என்பதைக் கணித்துப் பாருங்கள்.
இறுதியாக, உங்கள் நிறுவனத்தின் குழு பலமும் சீக்கிரம் மூலதனம் திரட்ட உதவக்கூடும். நீங்கள் தேர்ந்தெடுத்த உபதுறையில் பெயர் பெற்ற நிபுணர்கள், மற்றும் ஏற்கனவே தொழில்முனைவோராக இருந்து வெற்றிகண்டு மூலதனத்தாருக்குப் பலமடங்கு லாபம் தேடித்தந்த தலைமையதிகாரி போன்றோர் சேர்ந்திருந்தால் மூலதனம் நாடத் தாமதிப்பதால் அனுகூலமில்லை. உடனேயே அதிக மதிப்பீட்டில் பெருமளவு மூலதனமிட மூலதனத்தாரே போட்டா போட்டியிட்டு வரக்கூடும். தாமதிப்பதால் மதிப்பீடு இன்னும் பெருமளவு அதிகரிப்பது அபூர்வம். தங்கள் முதல் சுற்று மூலதனத்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றே ஆகவேண்டும் என்பது மூலதனத்தாரின் அசைக்க முடியாத குறிக்கோள். அப்போது உடனே நிறைய மூலதனம் பெற்று, விரைவாக இயங்கி வெற்றி இலக்கைச் சீக்கிரமே அடைவதே சரி. ஒர்க்டே (workday) நிறுவனத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஆக மொத்தம், தாமதிக்காமல் கூடிய சீக்கிரம் மூலதனம் பெறுவதற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன என்று கண்டோம். அடுத்த பகுதியில், ஏன் மூலதனம் நாடலைத் தாமதிக்க வேண்டும், இடைப்பட்ட வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் அலசுவோம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |