மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
பீஷ்மருடைய பேச்சைப் பாஞ்சாலி மறுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு பகுதியை விளக்கவேண்டி இருக்கிறது என்று சொன்னோம். அந்தப் பகுதியை மீண்டும் பார்ப்போம்: "சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும் கெடுநினைவுள்ளவர்களும் சூதிலேயே ஊக்கமுள்ளவர்களுமான மோசக்காரர்கள் அதிக ஜாக்கிரதையெடுத்துக் கொள்ளாத ராஜாவைச் சபையில் அழைத்தபிறகு அவர் இஷ்டப்படி விடப்பட்டவராவது எப்படி? கெட்ட எண்ணத்துடன் மோசத்துக்கே ஆரம்பித்த எல்லோரும் சேர்ந்து மோசம் அறியாதவரும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சிரேஷ்டருமான தர்மராஜரை ஜயித்த பிறகுதான் அவர் இந்தப் (*) பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டார். தங்கள் பெண்களுக்கும் மருமகளுக்கும் அதிகாரிகளாய் உள்ள இந்தக் கௌரவர்கள் சபையில் இருக்கின்றனர். நீங்களெல்லாரும் இந்த என் கேள்வியை ஆராய்ந்து பார்த்துச் சரியான மறுமொழி கூறுங்கள்". (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 89, பக்: 287) (* இந்த இடத்தில் 'கைதவம்' என்ற சொல் மூலத்தில் ஆளப்பட்டிருப்பதாக அடிக்குறிப்பு சொல்கிறது.)

இது அப்படியே ஆங்கில மொழிபெயர்ப்பை ஒட்டி அமைந்திருக்கிறது. 'இந்தப் பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டார்' என்ற தொடருக்கு மாறாக மூலத்தில் 'இந்தக் கைதவத்துக்கு ஒப்புக்கொண்டார்' என்று மூலத்தில் இருப்பதாகத் தமிழ் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பு சொல்கிறது. கைதவம் என்றால் வஞ்சனை என்று பொருள். பாரதி பாஞ்சாலி சபதத்தில் இந்த இடத்தை எப்படிச் செய்திருக்கிறான் தெரியுமா?

மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம் நீர்கட்டியது மாநிலத்தைக் கொள்ள அன்றோ?

மூலத்திலுள்ள அதே சொல்லைப் பயன்படுத்தித்தான் பாரதி தன் காப்பியத்தை நடத்தியிருக்கிறான். இப்படிப் பல இடங்களில் பார்க்கலாம். எனவே பாஞ்சாலி சபதத்தைப் படிப்பதும் மூலநூலில் இந்த கட்டத்தைப் படிப்பதும் ஏறத்தாழ சமம். சொல்லுக்குச் சொல் இல்லாவிட்டாலும் கருத்துக்குக் கருத்து ஒன்றுபட்டிருக்கும். சில இடங்களில் மூலத்திலுள்ள அதே பிரயோகமே வந்துவிழும். இங்கே நமது வேலை எளிதாகிறது. பாரதி படைத்திருப்பதன் மூலமாக நமக்கு மூலநூல் சொல்வதாக என்ன தெரிகின்றதென்றால் (1) சூதாடச் சொல்லி நீங்கள் அரசரை வற்புறுத்தினீர்களே ஒழிய அவரே இதில் விருப்பத்தோடு ஈடுபடவில்லை; (2) நீங்கள் அரசாட்சியை தருமபுத்திரனிடமிருந்து பிடுங்கிக் கொள்வதற்காகவே மிகவும் ஆலோசித்து (முற்படவே சூழ்ந்து) மண்டபத்தைக் கட்டி அதைப் பார்ப்பதற்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்து, இங்கே வந்ததும் அவரை சூதாடச் சொல்லி வற்புறுத்தினீர்கள்; (3) அவருக்குச் சூதிலே பழக்கம் கிடையாது; (4) அவரோடு விளையாட வேண்டியவனோ துரியோதனன். இருந்தாலும் அவன் விளையாடாமல் சூதிலே கைதேர்ந்தவன் என்று பீஷ்மரே நற்சான்றிதழ் கொடுக்கின்ற சகுனி ஆடினான்; துரியோதனன் பந்தயத்தை மட்டும் வைத்தான்.

இவ்வளவு நடந்திருக்கிறது. இவ்வளவையும் அறியாதவரைப் போல நீங்கள் 'தருமன் தானே முன்வந்துதான் பணயம் வைத்தான்' என்று சொல்கிறீர்கள். இத்தனை வற்புறுத்தல் நடந்திருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பேசுகிறீர்கள். (தன்னைச் சூதாட அழைப்பார்கள் என்று விதுரன் மூலமாகக் கேள்விப்பட்டதுமே தருமன் தயங்கியதைப் பார்த்தோம். 'உன் காரணமாக இன்னும் பதினான்கு வருடங்களில் குலம் நாசமடையப் போகிறது' என்று வியாசர் முன்னறிவித்ததும் 'பெரியவர்கள் எதைச் சொன்னாலும் கேட்பேன்' என்று தருமன் செய்துகொண்டிருந்த சத்தியமே அவனை இந்த 'மண்டபத்தைக் காண்பதற்காகக்கூட வரவழைத்தது' என்பதையெல்லாம் நாம் முன்னர் பார்த்திருக்கிறோம்.)

இப்படிப்பட்ட நிலைமையிலே தருமபுத்திரர் 'இஷ்டப்படி விடப்பட்டவராவது எப்படி' என்று திரெளபதி மடக்குகிறாள். இந்தக் கேள்விக்குப் பாட்டனாரிடம் விடையில்லை. இதனால்தான் பாஞ்சாலி: பெரியோர்கள் இல்லாதது சபையன்று; தர்மத்தை உரையாதவர் பெரியோர்களும் அல்லர்; உண்மையில்லாதது தர்மமுமன்று; கபடம் சேர்ந்தது உண்மையுமன்று. அதாவது, 'இங்கே உண்மையிலேயே பெரியோர்கள் என்று யாருமில்லததால் இது சபையே அன்று; பெரியோர்கள் யாருமில்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால் 'இங்கே யாரும் தர்மம் எது என்று துணிவோடு எடுத்துச்சொல்ல முன்வரவில்லை; நீங்கள் பேசுவது தர்மத்தைப் போல ஒலிக்கலாம். அவ்வாறு ஒலித்தாலும் அதில் உண்மையில்லை என்பதால் அது தர்மமே இல்லை. ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் உம் பேச்சில் கபடம் இருக்கிறது; ஆகவே கபடம் சேர்ந்தது உண்மையுமன்று' என்று சொல்கிறேன்—என்று நேரடியாகச் சொல்லாமல் பாஞ்சாலி கடுமையாக பீஷ்மரை விமரிசிக்கிறாள். பீஷ்மருடைய பேச்சு இப்படிச் சுற்றிவளைத்து நடப்பதற்குக் காரணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பின் இன்னொரு அடிக்குறிப்பு சொல்கிறது: "துரியோதனிடம் பயந்து தந்திரமாகப் பேசுவது சத்தியமாகாது; சத்தியம் தவறினபிறகு தர்மமில்லை; தர்மம் சொல்லாதவர்கள் பெரியோரல்லர்; பெரியோர் அல்லாதது சபையே அன்று என்பது கருத்து." பீஷ்மருக்குக்கூட துரியோதனிடத்தில் (அச்சம் என்று சொல்லமுடியாவிட்டாலும்) தயக்கம் இருந்திருக்கிறது என்பதை பெரியோர் யாரும் அவனை அடக்க முனையாததிலிருந்தே அறிந்துகொள்கிறோம்.

இதற்குப் பிறகுதான் பீமசேனன் குறுக்கிட்டு தருமரைக் கண்டிப்பதும்; திரெளபதியின் துன்பத்துக்கு நீரே காரணம். "அரசரே! இவளுக்காக இந்தக் கோபத்தை உம்மேல் போடுகிறேன். உமது கைகள் இரண்டையும் கொளுத்தப் போகிறேன். சகதேவா! அக்கினியைக் கொண்டுவா' என்று சகதேவனிடத்திலே சொல்வதும், விகர்ணன் குறுக்கிட்டு திரெளபதியை ஆட்டத்தில் வைத்தது ஏன் செல்லாது என்று சொல்லி விளக்குவதும் நடக்கின்றன. இந்தக் கட்டத்திலே கர்ணனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. 'சிறுபிள்ளைத் தனமாகப் பேசாதே' என்று விகர்ணனைக் கண்டிக்கிறான். அப்போதுதான் கர்ணனுடைய மனத்தில் அந்த வக்கிரமான எண்ணம் தோன்றுகிறது. ஐந்து கணவர்களை உடைய இவள் குலமகளே அல்லள். "இவளைச் சபைக்குக் கொண்டுவருவதும் இவள் ஒற்றை வஸ்திரத்தை உடுத்திருப்பதும் வஸ்திரமே இல்லாமல் இருப்பதும் வியக்கத்தக்கன அன்றென்று நான் நினைக்கிறேன். இந்தப் பாண்டவர்களின் பொருள்கள் அனைத்தும்; இவளும் இந்தப் பாண்டவர்களும் எல்லாம் தர்மமாகவே சகுனியினால் ஜயிக்கப்பட்ட உடைமைகள். துச்சாஸனா! இந்த விகர்ணன் மிகச்சிறியவன்; தெரிந்தவன் போலப் பேசுகிறான். பாண்டவர்களின் வஸ்திரங்களையும் திரெளபதியின் வஸ்திரத்தையும் கொண்டுவா' என்றான்" (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 90, பக். 290) 'நீ ஒற்றையாடையில் இருந்தால் என்ன அல்லது நிர்வாணமாகவே இருந்தால்தான் என்ன' என்று துச்சாதனன் பேசியது இங்கே கர்ணனுடைய பேச்சில் ஒலிக்கின்றதல்லவா.

இதன் பிறகு நடந்தனவற்றில் பெரும்பாலானவற்றை நாமறிவோம். அவற்றினுள்ளே செல்ல எனக்கு மனமில்லை. இந்தக் கட்டத்திலும் பீஷ்மர் உள்ளிட்ட பெரியவர்கள் யாரும் மறுத்துப் பேசவோ தடுக்கவோ முயலாமல் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திரெளபதி வஸ்திராபஹரணத்துக்குப் பிறகு நடந்தனவற்றில் முக்கியமான குறிப்புகளைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com