ஏப்ரல் 7, 2007 அன்று சிகாகோ அரோராவின் பாரமோண்ட் அரங்கில், பத்மஸ்ரீ ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இது அங்குள்ள பாலாஜி கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டீ·பன் திவாசே கீபோர்டு வாசித்தார். இந்நிகழ்ச்சி கஜல், பஜனை, மெல்லிசைப் பாடல்கள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, உருது என பல வகை இசை கலந்த வண்ணத்தோரணமாய் அமைந்திருந்தது.
'நிலா காய்கிறது' என்று அவர் தமிழில் பாட ஆரம்பித்ததும் அன்பர்களின் உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உருதுவும் இந்தியும் கலந்த பாடலைப் பாடினார். 'காதல் ரோஜாவே'யைத் தொடர்ந்து குஜராத்தியில் 'திவக் ராஜாராம்' என்ற பஜனைப்பாடல். 'வெண்ணிலவே, வெள்ளி நிலவே' பாடலை சந்திரமயியுடன் சேர்ந்து பாடினார். 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாடல் மிக இனிமை. 'லாகூரிலிருந்து' என்ற தன் ஆல்பத்திலிருந்தும் ஒரு பாடலைப் பாடினார் ஹரிஹரன்.
அடுத்து வந்த 'மேரெ ஸ்வனோகி' என்ற கஜல் எல்லோரையும் உருக்கிவிட்டது. அழகாக ஸ்வரம் பாடி மெதுவாக வீசும் தென்றல் போல ஆரம்பித்தவர் வெகுவேகமாக புயல் வேக உச்சத்துக்குச் சென்றதும் ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கியது. அவரது இசைத்திறமைக்கு எடுத்துக்காட்டாக அப்பாடல் அமைந்திருந்தது. லியாகத் அலிகான் சாரங்கியில் ஈடு கொடுத்து வாசித்து பாடலுக்கு மெருகூட்டினார்.
'பொய்சொல்லக் கூடாது கண்மணி', 'கிருஷ்ணா நீ பேகனெ பாரோ', 'சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா', 'உயிரே, உயிரே' பாடல்கள் உள்ளத்தை உருக்குவதாய் இருந்தன. திரளாக வந்திருந்த கூட்டத்தின் மூலம் வட அமெரிக்காவில் ஹரிஹரனுக்கு உள்ள ரசிகர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அரோரா பாலாஜி கோவிலை விரிவுபடுத்த நிதி உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள இணையதளம்: www.balaji.org தொலைபேசி எண்: 630-844-2252.
அலமேலு மணி |