தென்றல் பேசுகிறது...
கரன்சியைப் புழக்கத்திலிருந்து நீக்குதல் (Demonetisation), பலவாக இருந்த வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக்குதல் (GST) போன்ற துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டதால் இந்தியாவில் தொழில் நடத்துதல் சுலபமாகி உள்ளதாக (ease of doing business) உலகவங்கி குறிப்பிட்டுள்ளதில் வியப்பில்லை. வரி ஏய்ப்பு, கறுப்புப் பொருளாதாரம், லஞ்சம், கோடிக்கணக்கில் போலிகள் அரசு மானியம் பெறுதல், செக்போஸ்ட்களில் நாட்கணக்கில் வாகனங்கள் காத்துக்கிடத்தல் போன்றவற்றை அகற்றி, டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தியது ஒரு புதிய வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி, நாட்டுக்கு அளவற்ற நன்மை புரிந்துள்ளது. ஒரு சிறிய பின்னடைவுக்குப் பின் பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சீறிப்பாய்ந்து முன்னேறி, 33,650ஐத் தாண்டியுள்ளது. 2016ல் ஒரு டாலருக்கு 66 ரூபாய் என்ற நிலையில் வலுவிழந்து கொண்டிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைக்கு 64.57 ஆகியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இன்றைக்கு ஒருவர் வீட்டுக்கடனை மிகக்குறைந்ததான 8.30 சதவிகிதத்தில் பெறுவதோடு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 'பிரதம மந்திரியின் வீட்டுவசதி' திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் மானியத்தையும் பெறமுடியும். நல்ல நாட்களின் வருகைக்கு இவை கட்டியம் கூறுகின்றன என்பதில் ஐயமில்லை.

*****


விளையாட்டுத் துறையிலும் உற்சாகம் தரக்கூடிய செய்திகள் வந்தபடி உள்ளன. "இந்தியாவுக்கு ட்ரிபிள் சண்டே விருந்து" என்று தலைப்பிட்டிருந்தது டைம்ஸ் ஆஃப் இந்தியா. காரணம் மூன்று வெற்றிகள்: இந்திய ஹாக்கி அணி டாக்காவில் ஏஷியா கப்பை வென்றது; ககன்ஜீத் புல்லர் மக்காவ் ஓப்பன் ட்ராஃபியை வென்றது; கிடாம்பி ஸ்ரீகாந்த் டேனிஷ் க்ரௌனை இறகுப்பந்தில் வென்றது. அதற்குப் பின்னர் ஸ்ரீகாந்த் ஃப்ரென்ச் ஓப்பனையும் வென்றதன் மூலம் ஒரே ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் போட்டிகளில் வென்ற சாதனையாளராக முன்வரிசையில் நிற்கிறார். கேப்டன் விராட் கோலியும் இந்திய கிரிக்கெட் அணியும் செய்துவரும் சாதனைகளை யாரும் தவறவிட முடியாது. சானியா மிர்சா, P.V. சிந்து, சய்னா நெஹ்வால் ஆகியோரும் உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தருவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள். மொத்தத்தில் 2017 ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கத்தான் போகிறது.

*****


அமெரிக்க மண்ணில் 'தென்றல்' தவழத் தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தென்றலுக்கு இவை 17 மறக்கமுடியாத ஆண்டுகள். வெற்றிகள், பின்னடைவுகள் என மாறிமாறிச் சந்தித்து வருவது நமக்குப் பழகிவிட்டது. தேசத்தில் வெவ்வேறு வகைப் பின்னடைவுகள் இருந்த காலத்திலும், வாசகர்களும் விளம்பரதாரர்களும் கொடுத்தும் வரும் ஆதரவினால் நம் வளர்ச்சியில் தேக்கமில்லை. இன்றைக்கும் புதுப்புதுப் பகுதிகளிலிருந்து தென்றலை அனுப்பக் கோரி மின்னஞ்சல்களும் தொலைபேசியும் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனாலும், சந்தா என்று வைக்காமல் விளம்பரத்தை மட்டுமே சார்ந்து வெளியாவதால் பிரதிகளை அதிகரிப்பதில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. அவற்றையும் கடப்போம் உங்கள் துணையோடு என உறுதியாக நம்புகிறோம்.

*****


பார்வைக் குறைபாடு கொண்ட சிறுவன் சபரி வெங்கட்டின் கற்கும் திறன், பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கை எவருக்கும் கண்ணைத் திறக்கும் வல்லமை கொண்டது. அதேபோல, நியூ ஜெர்சியிலிருந்து பூண்டிப்பட்டுக்குச் சென்று குழந்தைகளோடு குழந்தையாகப் பழகி, அங்கே புறக்கணிக்கப்பட்ட கட்டடத்தைப் புதுப்பித்து வகுப்பறையாக்கவும் கழிவறை கட்டிக்கொடுக்கவும் தனது திறனையும் உழைப்பையும் செலவிட்ட சித்தார்த் துப்பில் ஒரு சிறந்த முன்மாதிரி இளைஞர். குழந்தைகள் தினவிழா கொண்டாடும் இந்த மாதத்தில் சாதனை இளையோரின் அணிவகுப்பு இந்தத் தென்றலில். நீங்கள் வாசிக்கவும், நேசிக்கவும்.

வாசகர்களுக்கு நன்றிநவிலல் நாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

நவம்பர் 2017

© TamilOnline.com