ஆகஸ்ட் 5, 2017 அன்று மிச்சிகனில் வாழும் குமாரி சாயிஸ்ருதி ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் லம்பயிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. குரு திருமதி.ராதிகா கணேசனின் 'நாட்ய வித்யாலயா' நடனப்பள்ளியில், வழுவூர் பாணியில் இவர் நடனம் பயில்கிறார்.
குரு வந்தனத்தில் தொடங்கி பிறகு நாட்டை ராகத்தில் அமைந்த கணேச ஸ்துதிக்கு நடனமாடினார். "சகியே நீ சொல்லடீ" என்ற கல்யாணி ராக வர்ணத்திற்கு இவர் பதம் பிடித்தது அருமை. அம்புஜம் கிருஷ்ணாவின் "தேவி நீயே துணை" என்ற பாடலில் மதுரை மீனாட்சியைக் கண் முன் கொணர்ந்தார். அலாரிப்பிலும், ஜதிஸ்வரத்திலும் தக்க பாவங்களுடன் அருமையாக ஆடினார் சாயிஸ்ருதி.
மிச்சிகனின் முதன்மைக் கலைஞர்களான திரு. சாந்தப்ரகாஷ் அவர்கள் பாட, வயலினில் குமாரி. அக்ஷயா ராஜ்குமார், மிருதங்கத்தில் திரு. ஜெயசிங்கம் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். நட்டுவாங்கம் குரு திருமதி. ராதிகா கணேசன்.
சாயி ஸ்ருதி படிப்பிலும் சிறந்து விளங்குகிறார். அமெரிக்காவின் தலைசிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றான இன்டர்நேஷனல் அகாடமியில் உயர்நிலைக் கல்வியை முடித்து, நேஷனல் மெரிட் ஃபைனலிஸ்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ப்ளூமிங்டனிலுள்ள இந்தியானா பல்கலைக் கழகத்தில் கெல்லி ஸ்கூல் ஆப் பிசினஸில் இளங்கலை பட்டம் படிக்கத் தேர்வு பெற்றுள்ளார்.
குரு ராதிகா கணேசன் திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரனின் மூத்த மாணவிகளில் ஒருவர். 'நாட்ய வித்யாலயா' மூலம் பத்து ஆண்டுகளாக நடனக் கலையைப் பரப்பி வருகிறார்.
காந்தி சுந்தர், ட்ராய், மிச்சிகன் |