'கக்கூஸ்' ஆவணப்படம்
ஆகஸ்ட் 13, 2017 அன்று கலிஃபோர்னியா, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் உள்ள மில்பிடாஸ் நகர நூலக அரங்கத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் 'கக்கூஸ்' என்ற ஆவணப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டுத் திரையிடப்பட்டது. சமூக ஆர்வலர் திவ்யா பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

மனிதக்கழிவை மனிதன் கையால் அள்ளும் கொடுமை 21ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்கிற அவலத்தை இப்படம் சொல்கிறது. சமூகநீதியில் ஓரளவு முன்னேறியுள்ள மாநிலமான தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது என்ற கசப்பான உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இதனைத் தடுக்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்திய நடுவண் மற்றும் மாநில அரசுகள் இதைக் குறித்துக் கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இந்தியரில் பெரும்பாலோர் இப்படி ஒரு இழிநிலைமை இருப்பதை அறியக்கூட இல்லை.

அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் (AKSC) உறுப்பினர் திரு. கனகராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மற்றுமொரு உறுப்பினர் திரு. இளஞ்சேரன் வரவேற்புரையில் இந்த ஆவணப்படத்தை திவ்யா பாரதி இயக்கத் தூண்டுதலாக அமைந்த காரணங்களை விவரித்தார்.

அசோசியேஷன் ஆஃப் இந்தியாஸ் டெவெலப்மென்ட் (AID) - விரிகுடாப்பகுதி' அமைப்பின் உறுப்பினர் திருமதி. கலை ராமியா துப்புரவுத் தொழிலாளர்கள் சரியான பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் பணிகளைச் செய்வதனால் ஏற்படும் துயரங்களையும், குறிப்பாக, பெண்கள் கருப்பையை இழக்கும் கொடுமையையும், அவர்களின் குழந்தைகள் "என்னை உன் கையால் தொடாதே அம்மா!" என்று சொல்லும்போது உண்டாகும் மன அழுத்தத்தையும் இப்படத்தைப் போல வேறெதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

பின்னர் படம் திரையிடப்பட்டது. துப்புரவுத் தொழிலில் ஈடுபடுவோருக்குச் சமூகத்தில் ஏற்படும் இழிநிலையும், அதனால் வேறெந்த வேலைக்கும் தகுதியற்றவர்களாகி, பல தலைமுறைகளாக இத்தொழிலை விடமுடியாத நிலைமைக்கு உள்ளாவது மனித உரிமை மீறல் என்ற கருத்தையும், அதை ஒழிக்கத் தேவையான வழிமுறைகள் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டன. படிப்பு வட்ட அமைப்பாளர் திரு. கார்த்திகேயன் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனில் உறுதிமிக்கோரை அதிக எண்ணிக்கையில் சட்டமன்றங்களுக்கு அனுப்புவதே பொருத்தமான மாற்றாக இருக்குமென்று வலியுறுத்தினார். AID-விரிகுடாப்பகுதி அமைப்பின் தலைவி திருமதி. வித்யா பழனிசாமி, உலகத்தமிழ் அமைப்பின் (WTO) மூத்த உறுப்பினர் திரு. தில்லை.க. குமரன், சிறகு.காம் (Siragu.com) வலைத்தளத்தின் செயலர் திரு. தியாகராஜன், நாம் தமிழர் அமெரிக்காவின் (NTAI) நிறுவனர் திரு. ரவிக்குமார் ஆகியோர் பல்வேறு வழிமுறைகளை அலசினர்.

திரு. உதயபாஸ்கர் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மேலே குறிப்பிட்ட அமைப்புகளோடு, பீஸ் அண்ட் ஜஸ்டிஸ் சென்டர், AID-விரிகுடாப்பகுதி, அம்பேத்கர் அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா ஆகியவை இணைந்து செய்தன.

மேலும் தகவலுக்கு: akscsfba@gmail.com

கார்த்திகேயன் சங்கர், கனக் நடராஜன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com