ஆகஸ்ட் 13 2017 அன்று நாதோபாஸனா நுண்கலை அகாடமியின் சார்பில் ஸ்ரீதர் விஜயலட்சுமியின் புதல்வன் செல்வன் அக்ஷய் பரத்வாஜின் மிருதங்க அரங்கேற்றம் சான் ஹோஸே CET SOTO அரங்கத்தில் குரு திரு. ரவீந்திர பாரதியின் ஆசியுடன் நடந்தேறியது. பிரபல வித்வான் நெய்வேலி நாராயணன் விழாவுக்கு வருகை தந்திருந்தார்.
சங்கீத சூடாமணி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் அற்புதமான கச்சேரியில் அக்ஷயின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. "அன்பே அருளே" எனும் நாட்டை ராக வர்ணத்துடனும், "ஏகதந்தம் பஜேஹம்" என்ற பிலஹரி ராக விநாயகர் கிருதியுடனும் கச்சேரி ஆரம்பமானது. இவருடன் வித்வான் ஸ்ரீ டெல்லி சுந்தர் ராஜனின் வயலினும், வித்வான் ஸ்ரீ ஆதம்பாக்கம் சங்கரின் கடமும் இசை விருந்து படைத்தன.
சாவேரி ராகத்தில் "தரி தாபுலேக" என்னும் கீர்த்தனைக்கு அக்ஷயின் விரல்கள் மிருதங்கத்தோடு பேசின. மிச்ரசாபுவில் "கானமுத பானம்", சாலகபைரவியில் "பதவிநி" ஆகியவை தொடர்ந்தன. "நாதோபாஸனா" (பேகடா) கீர்த்தனையில் சதுஸ்ரம், திஸ்ரம், கண்டம் என நடைகளை மாற்றி விரல்களில் வித்தை காட்டினார் அக்ஷய். கீரவாணியில் அமைந்த ராகம் தானம் பல்லவிக்குக் கண்டநடையில் வாசித்ததைக் கேட்டவர்கள் பேறு பெற்றவர்களே.
பிந்துமாலினி தில்லானாவைத் தொடர்ந்து நிறைவாக பாரதியும், அருணகிரிநாதரும் இசைத்தமிழாக நுழைந்து நிறைவு செய்தனர். குருவருளும் திருவருளும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற அக்ஷயின் இசைப்பயணம் வெற்றிகரமாகத் தொடரட்டும்.
அகிலா சந்திரமௌலி, சான் ஹோசே, கலிஃபோர்னியா |