ஆகஸ்ட் 27, 2017 அன்று, திருமதி. சிர்ணிகாந்த் நடத்திவரும் மைத்ரி நாட்டியாலா பள்ளியின் மாணவி செல்வி. அலேக்யாவின் குச்சுபுடி நடன அரங்கேற்றம், சான் ரமோனில் உள்ள டவர்டி மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. 'அம்பா பராக்கு' என்ற குச்சுபுடி வனதேவதை வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. முதலில், நாராயண தீர்த்தர் இயற்றிய "ஜெயஜெய ராமநாதா" என்ற பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து ஆரபி ராகத்தில் ஊத்துக்காடு வெங்கடகவியின் "மரகத மணிமயா" பாடலுக்கு தட்டின்மேல் ஆடியது அருமை. பின்னர் "ஆனந்த தாண்டவம்" என்ற பாடலுக்கு குரு வேம்பட்டி சின்னசத்யம் நடனம் அமைத்த ஜாவளிக்கு, கோபமாக கிருஷ்ணனைக் கண்டித்து ஆடியவிதம் சிறப்பு. தஞ்சாவூர் ர. கேசவன் (மிருதங்கம்), ரகுநந்தன் (கொன்னக்கோல்) ஆகியோர் தனி வாசித்தனர். தொடர்ந்த "தக்குவேணி மனகு" என்ற தசாவதார ஜதி, சுவாதித் திருநாளின் ஆனந்த பைரவி தில்லானா ஆகியவற்றுக்கு ஆடினார். மங்களமாக "தந்தனானா பாலா" என்ற பாடலுக்கு ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
குரு சிர்ணிகாந்த் (நட்டுவாங்கம்), தஞ்சவூர் ர. கேசவன் (மிருதங்கம்), திருமதி. ஸ்நிக்தா (வாய்ப்பாட்டு), ரகுநந்தன் (கஞ்சிரா), அஸ்வின் (புல்லாங்குழல்), நயன்தாரா (வயலின்) நிகழ்ச்சிக்கு பக்கபலமாக அமைந்தனர். மூத்த குரு திருமதி. பாலகொண்டல ராவ், திருமதி. சிர்ணிகாந்த் ஆகியோர் அலேக்யாவுக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தனர்.
அனு பத்மநாபன், சான் ரமோன், கலிஃபோர்னியா |