ஆகஸ்ட் 27, 2017 அன்று, 64வது நாயனாராகக் கருதத்தக்க திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 112வது அவதார நாளைக் கொண்டாடும் வகையில், நியூ ஜெர்சியில் உள்ள சவுத் ஆரஞ்சு நகரத்தில் வெங்கடேஷ்-ஆரத்தி தம்பதியினர் இல்லத்தில் ஒரு விழா நடைபெற்றது. பத்மஸ்ரீ மஹராஜபுரம் சந்தானம் அவர்களின் புதல்வி திருமதி. பிருந்தா தியாகராஜனின் சிஷ்யை திருமதி. ரோஷ்ணி ப்ரவீன், அற்புதமான தமிழ்ப் பாடல்களில் கர்னாடக இசைக்கச்சேரி வழங்கி முருகபக்தியில் திளைக்க வைத்தார். திருமதி. கௌரி ராமகிருஷ்ணனின் மாணவி குமாரி ஸ்வேதா நரசிம்மன் (வயலின்); திரு. பிரகாஷ் ராவின் புதல்வன் மற்றும் மாணவராகிய திரு. அனந்த்தபத்மநாப ராவ் (மிருதங்கம்) பக்கம் வாசித்தனர். திருமதி. பவானி பிரகாஷ் மற்றும் தமிழறிஞர் திரு. சுவாமிநாதன் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினர்.
தொடர்ந்து, வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் அரிய புகைப்படங்களுடன் வழங்கப் பட்டது. வாரியார் தமது இருபத்தைந்தாம் வயதில் அருளிய மகாபாரதத்தின் ஆதி பருவத்தின் 4,371 பாடல்களுக்கு, அவருடன் பயின்ற தர்மபுரி புலவர் தியாகசீலன் அவர்களின் துணையோடு, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் வெளியிட இருக்கும் உரை நூலுக்காக நிதி திரட்டப்பட்டது. வாரியார் தொடங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதியின் தலைவரும் அவரது வளர்ப்பு மகனுமான திரு. கோடிலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் சமுதாயப் பணிகளுக்கும், காங்கேயநல்லூரில் உள்ள நினைவாலயத்தின் புதுப்பித்தலுக்கும், குழுமி இருந்த நல்ல உள்ளங்கள் நன்கொடை வழங்கினர்.
மேலுமறிய: vaariyarvazhikalvi.wordpress.com |