குருபாத சமர்ப்பணம்
செப்டம்பர் 9, 2017 அன்று விரிகுடாப்பகுதியின் மில்பிடாஸில் நாதலயா இசைப்பள்ளியினர் மஹாபெரியவாளின் புகழ்பாடும் 'குருபாத சமர்ப்பணம்' இசை நிகழ்ச்சியை வழங்கினர்.

தமிழகத்தின் பிரபல லால்குடி வயலின் குடும்பத்தைச் சேர்ந்த லால்குடி ஶ்ரீமதி பிரம்மானந்தம் அவரது குமாரர் ஶ்ரீராம் பிரம்மானந்தம், அவர் மனைவி திருமதி சாந்தி ஶ்ரீராம் ஆகியோர் நடத்தும் நாதலயா பள்ளியின் சாதனைகள் பல. திருமதி சாந்தி பிரபல வித்வான் சாத்தூர் சுப்ரமணியம் அவர்களின் பேத்தி ஆவார்.

நிகழ்ச்சியில் திருமதி. விசாலாட்சி நடராஜன் காஞ்சிப் பெரியவர்மீது இயற்றிய கிருதிகளும், பிரபல வாக்கேயக்காரரான ஊத்துக்காடு வேங்கட கவி அன்னை காமாட்சியின் மீது இயற்றிய பாடல்களும் பாடப்பட்டன.

இதில் பாடிய மேல்நிலை மாணவர்கள் ஏழுபேர் பல்லாண்டு கச்சேரி செய்த அனுபவஸ்தர்கள் போல ராகங்கள், ஆலாபனை ஆகியவற்றை அனாயாசமாகக் கையாண்டனர். அடுத்தடுத்து 16 பாடல்களை வடமொழி தமிழ் இரண்டிலும் நல்ல உச்சரிப்புடனும், ராக, தாள மாற்றங்களால் சற்றும் தடுமாற்றமின்றியும், சுமார் மூன்று மணி நேரம் அயர்வின்றிப் பாடினர். ரேவதி, பாகஸ்ரீ போன்ற ராகங்களுக்கும் விஸ்தாரமான ஸ்வரக்கோவை, ஆலாபனையுடன் பாடினர்.

பக்க வாத்தியங்களில் செல்வி நயன்தாரா நரசிம்மன் (வயலின்), திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தத்தின் குமாரர் திரு. அருண் ஸ்ரீராம் ஆகியோர் (மிருதங்கம்) நிறைவாக வாசித்தனர். பிரம்மானந்தம் தம்பதியர் முக்கிய விருந்தினராக வந்திருந்து மாணவ மணிகளை ஆசீர்வதித்தனர்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com