வேளாங்கண்ணித் திருவிழா
செப்டம்பர் 9, 2017 அன்று தென் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தேர்த் திருவிழா, அருத்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம் நிர்வகிக்கும் டிவைன் சேவியர் பங்கு தேவாலயத்தில், அருட்தந்தை. அந்தோணி கஸ்பார் அடிகளார் தலைமையில் ஆறு திருத்தந்தையர்களால் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டாடப்பட்டது. திருவிழாவின் தொடக்கமாக அருட்தந்தையர்களுக்கு ஆலய வளாகத்தில், அமெரிக்க இந்தியர்களின் Aztec நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஜான் பீட்டர் அன்னையின் திருவுருவம் தாங்கிய கொடியை புனிதப்படுத்தி ஏற்றினார்.

தொடர்ச்சியாக, மாதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவம் தாங்கிய தேர்ப்பவனி திருச்செபமாலையுடனும், திருத்துதிகளுடனும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தேவாலய மேடையில் வைக்கப்பட்டது. பல்வேறு நாட்டு மக்கள் மாதாவின் திருச்சொரூபத்தைச் சுமந்து வந்தது கண்கொள்ளாக் காட்சி.

மாலை 5 மணியளவில் அருட்தந்தையரும், பக்தர்களும் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து, மாதாவின் மகிமைக்காகவும், நன்றியறிதலாகவும், பக்தர் நலனுக்காகவும் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அருட்தந்தை ஆல்வின் கிறிஸ்து தந்த நற்செய்தியை வாசித்தார். தொடர்ந்து, அருட்தந்தை. பெர்னார்ட் தமது மறையுரையில், மாதாவின் மகிமை, அவர் நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்பதை எடுத்துரைத்தார். ஏன் மாதாவின் மீது பக்தியும் அன்பும் கொண்டு விளங்கவேண்டும் என்பதைப் பத்துவிதமான எடுத்துக் காட்டுகளோடு விவரித்தார்.

திருவிருந்து முடிந்து, அருட்தந்தை. சாமி துரை அவர்கள் திவ்ய நற்கருணை ஆசீர் மற்றும் குணமளிக்கும் திருத்தைலம் பூசுதல் ஆகியவயற்றை நடத்தித்தர, திருப்பலி நிறைவடைந்தது. திருப்பலியில் பங்கேற்றோர் தேவ அன்னை மரியாளைப் புகழ்ந்து பாடினர். ஒன்பது நாட்களும், மாதாவை பல்வேறு விதமான பெயரில் போற்றி, செபமாலையுடன், அருள்வாக்கு வாசிக்கப்பட்டு, விளக்கம் அளித்த அருட்தந்தையர்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தொடர்ந்து, அருத்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாதாவின் மகிமையை எடுத்துரைக்கும் நாட்டியங்கள், உரையாடல், கருவியிசை ஆகியவை இனிமையாக இருந்தன. இறுதியாக, விழா ஒருங்கிணைப்பாளர் திரு. சேவியர் பெரியசாமி அவர்கள் நன்றி நவில, மாதாவின் திருவுருவக் கொடி, பக்தியுடன் இறக்கப்பட்டு இறுதி ஆசீருடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.

வருகின்ற 2018 ஆம் ஆண்டு, அன்னை மரியாள் பிறந்த நாளாம் செப்டம்பர் 8 அன்று, மீண்டும் இத்தகைய திருவிழா நடைபெறும். இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, அன்னையின் அருள் பெற்று வாழ அழைக்கிறோம்.

பிரதி மாதம், முதல் சனிக்கிழமை அன்று, அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவை மகிமைப்படுத்த செபமாலையும், திருப்பலியும் தமிழில் நடைபெறுகின்றது.

விபரங்களுக்கு:
திருப்பலி நேரம்: மாலை 5:30 மணி
முகவரி: Divine Savior Catholic Church, 610 Cypress Ave, Los Angeles, CA 90065
Email: velankannisocal@gmail.com -- Phone: 310-951-4980

ஜோசஃப் சௌரிமுத்து,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com