செப்டம்பர் 15, 2017 அன்று டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 7ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி, கார்லண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் கட்டும்போது நடந்த மூதாட்டியாரின் கதையையொட்டி நாட்டிய நாடகம் நடைபெற்றது. 'அழகி' குழந்தைகளே பங்கேற்ற இந்த நாடகத்தில் மூதாட்டியாக நடித்த குழந்தை, கைநடுங்க நடித்து அசத்தினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் டாக்டர். அருண் அழகப்பன் (தலைவர், அட்வான்டேஜ் டெஸ்டிங்) சிறப்புரை ஆற்றினார். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்கக் கல்லூரியில் சேர எப்படித் தயார் செய்வது என்பதை விளக்கிக் கூறினார். ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கச் செய்வதற்கான நலத்திட்டங்களில் தனது பாதி நேரத்தைச் செலவிடுவதாக அருண் குறிப்பிட்டார். 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் திரு. சக் ஹோகன் ஒன்றரை மணிநேரம் வாழ்க்கைத் தத்துவங்களை எளிதில் புரியும்படி கற்பித்தார்.
இந்த ஆண்டு திரட்டப்பட்ட தொகையில் 37,000 டாலர் உதவும் கரங்கள் அமைப்பின் காயத்ரி மருத்துவமனை கட்டுமானப் பணிக்கும், 5,000 டாலர் டெக்சாஸ் புயல் நிவாரணப் பணிக்கும், 5,000 டாலர் 11வது ஆண்டு திருக்குறள் போட்டிக்கும் நிதியாக வழங்கப்பட்டது.
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |