செப்டம்பர் 15, 16, 17 தேதிகளில் கலிஃபோர்னியா மாகாணம் கான்கார்ட் நகரில், திரு சுப்ரமணிய குருதேவரின் வழிகாட்டுதலின் பேரில் அமைந்துள்ள சிவா முருகன் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
முதல்நாள் விநாயகர் விழா, இரண்டாம் நாள் முப்பெருந்தேவியருக்கு அழகான பூப்பல்லக்கு விழா, மூன்றாம் நாள் முருகபெருமானுக்கு மயில்வாகனம் என சிறப்பாக இவ்விழா கொண்டாடப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையெனக் கலாசார நிகழ்வுகளுடன் வியப்படையச் செய்தது இந்தத் திருவிழா. விரிகுடாப்பகுதி நாட்டியப் பள்ளிகளின் கலைஞர்களும் ஆசிரியர்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டி திருவிழாவை பக்திமயம் ஆக்கினர்.
கடைவீதி, விளையாட்டுச்சாவடி, பரிசுகளெனக் களைகட்டியது திருவிழா வளாகம். ஆலயத் திருப்பணிக்காக அன்பர்கள் அளித்துவரும் நன்கொடைகளும் போற்றுதலுக்கு உரியது. இது போன்ற திருவிழாக்களினால் வளரும் சந்ததியினரின் மனத்தில் நம் பாரம்பரியத்தின் உயர்மதிப்பினை வித்திடுகிறோம் என்பது உண்மை. இதனை நிகழ்த்திக் காட்டி முதலடி எடுத்து வைத்துக் காண்பித்திருக்கிறது (CSMT) கான்கார்ட் சிவா முருகன் ஆலயம்.
மீ. மணிகண்டன், கான்கார்டு, கலிஃபோர்னியா |