தீபாவளித் திரைப்படங்கள்
மெர்சல்



தீபாவளிப் படங்களில் விஜய் நடிக்கும் "மெர்சல்" முன்னிலையில் உள்ளது. இதில் விஜய் மூன்று வேடங்களில் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கிறார். நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா நடிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லன். விஜய் நடிக்கும் 61வது படம் இது. அட்லீ இயக்குகிறார். இசை: ஏ.ஆர். ரஹ்மான். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது இப்படம்.

*****


சொல்லி விடவா



நடிகர் அர்ஜுன் கதை எழுதி, இயக்கித் தயாரிக்கும் படம் சொல்லி விடவா. நாயகனாக சந்தன்குமார் அறிமுகமாகிறார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகி. சுஹாசினி, இயக்குநர் கே. விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு எனப் பலர் உடன் நடிக்கின்றனர். மதன் கார்க்கி, விவேகா, பா. விஜய் பாடல்களை எழுத, ஜெஸ்சி கிப்ட் இசை அமைத்துள்ளார். தமிழ், கன்னடம் இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது இப்படம். ஒரு காதல் ஜோடி, வேலை நெருக்கடிகளைத் தாண்டி, எப்படிக் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை ரசிக்கும்வகையில் சொல்லியிருக்கிறாராம் அர்ஜுன்.

*****


கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்" படமும் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அரங்குகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள், சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் வெளியாக வாய்ப்புள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com