'ஒரு சமயம் ஒரு பள்ளி' (One School at a time-OSAAT) அமைப்பு தனது இரண்டாவது கட்ட நிதி திரட்டலுக்காக மே 19, 2007 அன்று 'கங்கா காவேரி' இசைக்குழுவின் நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது. நிகழ்ச்சி அன்று மாலை 5:30 மணிக்கு சான்ஹோசேயிலுள்ள CET அரங்கத்தில் நடைபெறும்.
காயல், ராகம் தானம் பல்லவி, தும்ரி, நாட்டுப்புற இசை, பக்தி இசை, ஜாஸ் ஆகியவற்றையும் மிகச் சிறப்பான புல்லாங் குழல் ஜுகல்பந்தியையும் வழங்குவதில் இந்தக் குழுவினர் இந்தியாவில் மிகப் பிரபல மடைந்துள்ளனர். வித்வான்கள் ஆனூர் அனந்த கிருஷ்ண ஷர்மா (மிருதங்கம்), எம்.கே.பிராணேஷ் (கர்நாடக பாணிப் புல்லாங்குழல்), சுரமணி பிரவீண் கோட் கிண்டி (ஹிந்துஸ்தானி புல்லாங்குழல்), வி.உமேஷ் (கீ போர்ட்), அருண்குமார் (ரிதம் பேட்ஸ், டிரம்ஸ்), எஸ். மதுசூதனா (தபேலா) ஆகியோர் குழுவின் முக்கிய அங்கத்தினர் ஆவர்.
ஓசாட் தற்போது கர்நாடகாவில் உள்ள பன்னர்கட்டாவில் புதிய தொடக்கப் பள்ளி ஒன்றைக் கட்டியுள்ளது. இக்கட்டடத்தின் முதல் கட்டப் பணி மார்ச் 23, 2007 அன்று முடிவடைந்தது. 6 வகுப்பறைகள் உட்படக் கட்டப்பட்ட இந்த புதிய பள்ளிக் கட்டடங்களால் தற்போது 540 கிராமத்துக் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். ரோட்டரி இன்டர்நேஷலின் பெங்களூரு கிளை இப்பணியில் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது.
இதன் இரண்டாவது கட்டப் பணியான இன்னும் இரண்டு வகுப்பறைகள் கட்டுவது, ஓரளவு இருக்கை வசதிகள் ஏற்படுவது போன்றவற்றுக்கு $40,000 தேவைப்படுகின்றது. அதற்கான நிதி திரட்டவே 'கங்கா-காவேரி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. ஓசாட் ஒரு லாபநோக்கற்ற 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற தொண்டு நிறுவனம். இதற்கெனச் சொந்தச் செலவுகள் இல்லை என்பதால் திரட்டும் நிதி முழுவதுமாக அதற்கான பணிக்கே செலவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி: கங்கா காவேரி வழங்குவோர்: OSAAT நாள், நேரம்: மே 19, 2007; மாலை 5:30 மணி இடம்: CET Theater, 701 Vine Street, San Jose, CA 95110 நுழைவுச்சீட்டுகள்: $10, $20; $35 (முன் பதிவு செய்யப்பட்டது); மே 15ம் தேதிக்கு முன்னர் வாங்கினால் ஒரு சீட்டுக்கு $5 கழிவு உண்டு. சீட்டுகள் வாங்கவும் அதிகத் தகவலுக்கும்: www.ossat.org மின்னஞ்சல் முகவரி: info@osaat.org |