ஆகஸ்ட் 26 சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து அதற்கொரு பன்னாட்டு விழா எடுத்தனர். காலை 9 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா. திருமதிகள் கீதா பிரபாகரன், ஜெயந்தி சங்கர், கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் குத்துவிளக்கு ஏற்றினர். வாஷிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் "தாய் மொழியே வணக்கம்", "யாமறிந்த மொழிகளிலே" மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடினர்.
மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம். வாஷிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றம் சில தமிழ் அமைப்புகளோடு இணைந்து நடத்தின. பேரவையின் துணைத்தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி துவக்கவுரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு வரிசையில் நடத்தப்படும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன். குறுந்தொகை பாட்டு மற்றும் பேச்சுப்போட்டி வெற்றியாளர்கள் பாடியும் பேசியும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் திரு. கலியமூர்த்தி (மேநாள் IPS) பரிசுகளை வழங்கினார்.
குறுந்தொகை ஆய்வு பற்றிய முதல் அமர்வில், முனைவர் மருதநாயகம் 'உளவியல் நோக்கில் குறுந்தொகைப் பாடல்களைப்' பற்றியும் முனைவர் நிர்மலா மோகன் 'குறுந்தொகையில் தோழியம்' குறித்தும், முனைவர் முருகரத்தினம் 'செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள்' பற்றியும் பேசினர். மருத்துவர் சோம. இளங்கோவன் மட்டுறுத்தினார்.
இரண்டாவது அமர்வில் 'தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது: சங்க இலக்கிய அகப் பாடல்களா? புறப்பாடல்களா?' என்ற பட்டிமன்றம் பேரா. மோகன் தலைமையில் நடைபெற்றது. திரு. மயிலாடுதுறை சிவாவும், திருமதி நிர்மலா மோகனும் அணித்தலைவர்களாகப் பணியேற்றனர்.
மதிய உணவுக்குப் பிறகு, முனைவர் R.C. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வில், திரு. பாபு விநாயகம் குறுந்தொகைப் பாடல்களை இசையோடு வழங்க, திரு, பன்னீர்செல்வம், திரு. மகேந்திரன் பெரியசாமி ஆகியோர் குறுந்தொகை சார்ந்து கவிமழை பொழிந்தனர். திரு. அகத்தியன் பெனடிக்ட், குறுந்தொகையில் 'அலர்' என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா போன்று முழங்கினார். திரு. மணிகண்டன் சங்க இலக்கியம்பற்றிச் சிற்றுரை ஆற்றினார். குறுந்தொகை கண்ட தலைவனும் தலைவியும் என்ற நிகழ்ச்சியில், திருமதி லதா கண்ணன் குறுந்தொகைப் பாடல்களை, தமிழிசையில் பாடி மகிழ்வித்தார்.
நான்காவது அமர்வில் நடந்த குறுந்தொகையில் கேள்வி பதில் பல்லூடக நிகழ்ச்சியில் திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் ஒழுங்குபடுத்த, சுமார் 40 பேர் பங்களித்தனர். நிகழ்ச்சியை முனைவர் இர. பிரபாகரனின் வழிகாட்டலில் திரு. நாஞ்சில் பீற்றர் தயாரித்து வழங்கினார். மின்னசோட்டா செல்வி அத்விகா சச்சிதானந்தன் "அகம் என்ன ஆகாததா? அகன்று நிற்க!" என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் முனை. பிரபாகரன் குறுந்தொகையில் உவமை நயம் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.
ஐந்தாவது அமர்வு முனைவர் அரசு செல்லையா தலைமையில் குறுந்தொகையின் சிறப்பு பற்றி ஆய்ந்தது. கலைமாமணி இலந்தை இராமசாமி 'குறுந்தொகையில், தோழியே வாழியே' என்ற தலைப்பிலும், பேராசிரியர் மோகன் 'நவில்தொறும் நயம் நல்கும் குறுந்தொகை' என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினர்.
ஹார்வர்டில் தமிழிருக்கை அமையவேண்டும் என்பதைச் செல்வி. மாதவி நடனமாகவும், மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் கருத்துக்களாகவும் பதித்தனர். மாநாட்டு மலரை, அதன் ஆசிரியர் திரு. செந்தில் முருகன் முன்னிலையில் திரு. கலியமூர்த்தி வெளியிட்டார். முனை. பிரபாகரன் மற்றும் பேரா. மோகன் எழுதிய இரண்டு குறுந்தொகை நூல்கள் வெளியிடப்பட்டன.
மாலையில் விழா சிறப்பு அழைப்பாளர் திரு. கலியமூர்த்தி சங்க இலக்கியங்களைத் தற்காலத்துடன் இணைத்து ஓர் அருமையான சொற்பொழிவாற்றினார். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் மரியாதை செய்யப்பட்டனர். செல்வியர் காவ்யா சுந்தர், உன்னதி மேத்தா இணைந்து ஆடிய 'யாயும் ஞாயும் யாராகியரோ! நறுமுகையே!' என்ற குறுந்தொகை நடனத்தை அடுத்து ஸ்ரேயா சகோதரிகள் 'அழகே தமிழே' என்ற பாடலுக்கு நடனமாடினர். கும்மி, ஒயிலாட்டம் ஆகியவற்றுக்குப் பின், 'காதல், பிரிதல், இணைதல்' என்ற தலைப்பில் குறுந்தொகை மையக்கருத்தில் சுமார் ஐம்பது பேர் பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்ச்சி திருமதி. புஷ்பராணி வில்லியம்ஸ் ஒருங்கிணைப்பில் நடந்தது. இரவு 8:45 மணிக்கு வாஷிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. இராசராம் சீனிவாசனின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.
செய்திக்குறிப்பிலிருந்து |