எதற்குக் கிடைத்தது மரியாதை?
ஒரு கிராமத்தில் இரண்டுபேர் இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியூர் போவதானால் குதிரையில்தான் போவார். மற்றொருவர் நடந்து போவார், ஆனால் கையில் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு போவார். ஒருநாள் இருவரும் ஒரே ஊருக்கு ஒரே நாளில் புறப்பட்டார்கள். கையில் தலையணையோடு செல்பவர் முதலில் போக, குதிரையில் மற்றவர் பின்தொடர்ந்து போனார்.

போகும் வழியில் ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள், கையில் தலையணை வைத்திருப்பவரைப் பார்த்து அவர் ஒரு பியூன் என்றும், அவர் கையிலிருப்பது அலுவலக ஆவணக்கட்டு என்று நினைத்தார்கள். பின்னால் குதிரைமேல் வருகிறவர் அதிகாரி என்றும், அவரது கோப்புகளை முதலில் செல்பவர் சுமந்து செல்கிறார் என்றும் நினைத்தார்கள். அந்தக் காலத்தில் கார் கிடையாதென்பதால் அதிகாரிகள் குதிரைச்சவாரி செய்வது வழக்கமாக இருந்தது.

இருவரும் தாம் போகவேண்டிய ஊரைச் சென்று அடைந்தார்கள். தலையணையுடன் சென்றவர் நேராக ஓய்வறைக்குப் போய்த் தலையணையை வைத்துக்கொண்டு, மிகப்பெருமிதமாகச் சாய்ந்துகொண்டார். மற்றவரோ எங்கே குதிரையைக் கட்டலாம் என்று இடம் தேடிக்கொண்டிருந்தார். இந்தக் கிராமத்தவர்கள் இருவரையும் பார்த்தனர்; தலையைணையில் சவுகரியமாகச் சாய்ந்துகொண்டிருப்பவர்தான் அதிகாரி என்றும், குதிரையைக் கட்ட இடம் தேடுகிறவர் பியூன் என்றும் நினைத்தனர். முந்தைய கிராமத்தில் பியூனாகக் கருதப்பட்டவர் இங்கே அதிகாரியாக மதிக்கப்பட்டார்.

இவை வெறும் பார்ப்பவரின் கற்பனை, மனதின் எண்ணம், அவ்வளவுதான். அந்த இரண்டு நபர்களின் உண்மையான தகுதியைக் கருதி இந்த மரியாதை அல்லது மரியாதையின்மை வெளிப்படவில்லை.

நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2016

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com