ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். விடியற் காலையில் கிராமத்து வீட்டிற்கு அம்மாவுடன் வந்திருந்தேன். பேருந்துப் பயண அசதியில் அறையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். வெளியில் கதிரேசன் சித்தப்பா யாருடனோ பேசும் சத்தம். திரும்பி, கீழே படுத்திருந்த அம்மா இருக்கிறாளா என்று பார்த்தேன். இல்லை. அவளால் இந்த வீட்டுக்கு வந்தால் தூங்கமுடியாது. சின்னச் சின்னதாகப் பலவற்றைத் திட்டமிட்டு வைத்திருப்பாள். அனேகமாக இப்போது கொல்லையில் சித்தியுடன் கதை பேசிக்கொண்டே எதாவது ஒரு செடியைப் பராமரித்துக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு செடியும் அவளின் ஏதோ ஒரு நினைவுடன் தொடர்புடையவை.
நான் எழுந்து அறையை நோட்டமிட்டேன். அப்போதெல்லாம் அம்மா அறுப்பிலிருந்து வந்த நெல்லை அவித்துக் காயவைக்க இந்த அறையில்தான் கொட்டி வைப்பாள். இந்த அறையிலிருந்து நெல்லைக் கூடையில் அள்ளிக்கொண்டு எதிர்வீட்டில் இருந்த செட்டியார் வீட்டு மாடியில் காயவைக்க எடுத்துச் செல்வோம். அக்காள் ஒரே தூக்கலில் ஒரு பெரிய கூடையில் நெல்லை நிரப்பி, அனாயாசமாக இடுப்பில் வைத்து கொள்வாள். என் இடுப்பில் வைக்க முயன்று, ஒருமுறை ரோட்டில் கொட்டியது ஞாபகம் வந்தது. இந்த அறையில் சிறிது நேரம் இருந்தால் நெல்லில் இருக்கும் சுணை உடம்பு முழுவதும் வியர்வையில் ஒட்டிக்கொண்டு அரிக்கும். அந்த அரிப்பு இன்றும் உள்ளுணர்வாக எங்கேயோ இருக்கிறது. பழைய ஞாபகம் அப்பாவை நினைவுபடுத்த, அப்படியே மீண்டும் படுத்துக்கொண்டேன். அப்பா அரசு அலுவலராக இருந்தாலும், செங்கல் அறுப்பது, வெற்றிலை பயிர் செய்வது, விவசாயம் என்று வேறு சில தொழில்களையும் முயன்று பார்த்தார். விவசாயம் மட்டும்தான் கொஞ்சம் நஷ்டம் அடையாமல் இருந்தது. அது மட்டும் இல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், வீட்டுக்கான அரிசித் தேவையையும் பூர்த்தி செய்ததால் சில வருடம் அதனைத் தொடர்ந்து செய்தார். ஆனால், அந்தக் காலங்களில் மிகக் கடுமையாக உழைப்பார். குடும்பத்தில் எல்லோருமே உழைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, அறுவடை நடக்கும் நான்கு நாட்களும் வீட்டிலுள்ள அனைவரும் ஏதாவது ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு இயங்கிக் கொண்டிருப்பார்கள். பெரியண்ணன் தவிர மற்றவர்கள் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு. அக்காள் இருவரும் அம்மா, பெரியம்மாவுக்கு ஒத்தாசையாக வீட்டுவேலை செய்வார்கள்.
காலையும், மதியமும் வயலில் இருக்கும் அப்பாவுக்குச் சாப்பாடு எடுத்து செல்லும் வேலை எனக்கு. வீட்டிலிருந்து ஒருமைல் தொலைவில் இருக்கும் வயலுக்கு நடந்தே செல்ல வேண்டும். சிறிது தூரம் தார் ரோட்டிலும், பின்பு குறுக்காக வாய்க்கால் மேட்டின் மீதும் செல்லவேண்டும். பெரும்பாலும் வாய்க்கால் வரை யாரோ ஒருவர் சைக்கிளில் ஏற்றிக்கொள்வார்கள். யாரும் இல்லையென்றால், மாட்டு வண்டியின் பின் தொற்றிக்கொண்டு செல்வேன். வாய்க்கால் மேட்டின்மீது நடக்கும்போது பயமாக இருக்கும். ஒற்றையடிப் பாதை. அதில் சிலர் மட்டுமே அவ்வப்போது செல்வார்கள். வழிநெடுக அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்த தேக்கு மரங்கள். சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலில் பாம்புகள் தலைதூக்கி என்னைப் பார்க்கும். முனியன் கோவிலில், குதிரை சிலை ஒன்று பல்தெரிய இளித்து, கண்களை உருட்டி தூரத்தில் மறையும்வரை என்னைப் பார்க்கும்.
பக்கத்துத் தெரு 'கட்டையன்' இந்த வாய்க்கால் மேட்டைப்பற்றி நிறையக் கதைகள் சொல்வான். அம்மாவிடம் சொன்னால் அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பாள். பக்கத்து வீட்டு அக்கா சொன்னதுபோல 'கந்த சஷ்டி’யைச் சொல்ல முயற்சித்து, முடியாமல் ஓடுவேன். என் காலணிச் சத்தம் என்னைத் துரத்தும். அப்பா சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருப்பேன். அப்பா, "ஏண்டா, ஓடி வராதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்?. இங்க பாரு சாம்பார் கீழே ஊத்திருக்கு" என்று சத்தம் போடுவார். நான் அப்பாவின் பின்னால் சென்று மறைந்துகொள்வேன்.
வயலில் நிறையப் பேர் வேலை செய்துகொண்டிருப்பார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம், மஞ்சள் நிறத்தில் பெரிய மணல் வெளியைப் போல நெற்பயிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கும். களத்துமேட்டில், கதிரடிக்கும் மெஷின் அறுத்த நெல் பயிரை மென்று தின்று, நெல்லை உமிழும். அப்பா புங்கமர நிழலில் சாப்பிடுவார். சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை வயலில் வேலை செய்யும் அய்யிரைத் தனியாக கூப்பிட்டு சாப்பிடச் சொல்வார். நான் முதன்முதலில் அய்யிரை என் வீட்டில்தான் பார்த்தேன். யூரியா மூட்டையைத் தூக்கிக்கொண்டு வீட்டில் வைக்க வந்திருந்தார். குள்ளமாக, நல்ல உடற்கட்டுடன், சற்று கூச்ச சுபாவத்துடன் இருந்தார். எப்போதும் அழுக்கு வேட்டியும், தோளில் ஒரு துண்டும்தான். அப்பாவிடம் நேராகக் கண்பார்த்துப் பேசமாட்டார். எங்கோ பார்த்துக்கொண்டு உரநெல் பற்றியும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது பற்றியும் சொல்வார். அவருக்குத் தெரிந்தது எல்லாம் வயலும், வயல் சார்ந்தவைகளும் மட்டும்தான். என்னைப் பார்க்கும் போதெல்லாம், "பள்ளிக்கூடத்துக்கு போகல?" என்று சிரித்துக்கொண்டே கேட்பார்.
ஒருமுறை "ஏன் அவரை அய்யிருன்னு கூப்பிடுறோம்?" என்று அம்மாவிடம் கேட்டதற்கு அவள் சாமிநாதன் மாமாவைப் பார்க்க, அவர் "ஓ! அதுவா.. இருங்க" என்று சொல்லிவிட்டு தண்ணீர்க் குவளையுடன் வெளியே சென்று புளிச்சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு வரும்வரை மர்மம் நீடித்தது. "அவன் பேரு 'அய்யாறு'. அது அய்யிருன்னு மாறிடுச்சு" என்று சொல்லி உடல் குலுங்கச் சிரித்தார்.
ஒவ்வொரு நாள் மாலையும் வயலிலிருந்து வரும் நெல்மூட்டைகளை வராந்தாவில் அடுக்கி வைப்பார்கள். சில மூட்டைகளைப் பிரித்துக் காயவைத்து வீட்டிலிருந்த பத்தாயத்தில் கொட்டுவார்கள். அந்த நாட்களில் மட்டும்தான் பத்தாயத்தின் அனைத்து அடுக்குகளையும் திறந்து வைத்திருப்பதைப் பார்க்கமுடியும். நானும், சின்னக்காவும் அதனுள் குதித்து நெல்லில் கால் புதைய விளையாடுவோம். பெரியம்மா "உடம்பெல்லாம் அரிக்கப் போகுது" என்று திட்டுவாள். பெரியம்மா, பத்தாயத்தில் கால் வைக்கக்கூடாது, சாமியாக்கும் என்று சொல்லி வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடும்போது பத்தாயத்தையும் சேர்த்துக் கும்பிடுவாள். எங்கள் வீட்டு வராந்தாவின் பெரும்பகுதியை, ஒரு கரிய யானைபோல அது ஆக்கிரமித்திருந்தது. நாங்கள் பெரும்பாலும் அதன் மீதேறியும், அதன் பின்னால் ஒளிந்துகொண்டும் விளையாடுவோம்.
அறுவடை இல்லாத காலத்திலும் அய்யிரு தினம் தோறும் காலை நேரத்தில் அப்பாவைப் பார்க்க வருவார். திண்ணையில் அமர்ந்து வாய்விட்டு மனப்பாடம் செய்யும் என்னையே ஆச்சரியமாகப் பார்ப்பார். அப்பா வந்தவுடன், வயல்பற்றிய அனைத்து விவரங்களையும் கடகடவென கேள்வியும் பதிலுமாக அவரே சொல்லிவிடுவார். அப்பா அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு "ம்.." மட்டும் போட்டுவிட்டு, கடைசியாக "சரி, செஞ்சிடு அய்யிரு" என்று மட்டும்தான் சொல்வார். போகும்போது அவர் கையில் பத்து ரூபாய் கொடுத்துவிட்டுச் செல்வார். பின்பு அம்மா வந்து "அய்யிரு, இரு சாப்பிட்டுப் போ" என்று சொல்ல, "ஏன்... வேண்டாம்" என்பதை ஒரு சம்பிரதாயமான இழுவையுடன் இவர் சொல்லவும் .."இரு... இரு" என்று அம்மா உள்ளே சென்று சாப்பிட எதாவது எடுத்துவந்து கொடுப்பதும் எப்பொழுதும் நடக்கும்.
திருவிழாக் காலங்களில், குறிப்பாக பொங்கலன்று அய்யிரும் அவர் மனைவியும் வீட்டிற்கு ஒரு நாட்டுக்கோழியுடன் வருவார்கள். அப்பா அவர்களுக்கு வேட்டி, சேலையுடன் கொஞ்சம் பணமும் கொடுப்பார். அவர் மனைவி அம்மாவிடம் அவர் மகனையோ அல்லது மகளையோ பற்றி ஏதாவது சொல்லி அழுதுகொண்டிருப்பாள். அவள் போகும்போது அக்காவுக்கு பத்தாமல் போன ஆடைகளை ஒரு கூடையில் போட்டு அவள் மகளிடம் கொடுக்கச் சொல்வாள். ஒருமுறை அக்கா அய்யிரின் மகள் தன்னுடைய கத்திரிப்பூக் கலர் சட்டையை போட்டிருப்பதைப் பார்த்து கேலி செய்ய, அப்பா கவனித்து வைத்து அவர்கள் போனபின்பு, அக்காவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அக்கா சுருண்டு விழுந்தாள்.
பின்பு, அப்பாவுக்கு அரசு வேலையில் பதவி உயர்வு கிடைத்து வேலை அதிகரித்ததாலும், அக்காள்களின் கல்லூரிச் செலவு எனப் பணத்தேவை அதிகரித்ததாலும், அப்பா பத்து வருடம் விவசாயம் செய்த நிலத்தை விற்றுவிட்டார். எங்கள் வீட்டிலிருந்த பத்தாயம் ஒவ்வொரு இடமாக மாறி, கடைசியாக கொல்லைப்புறத்திற்குச் சென்றது. பின்பு, திரும்பிப் பார்க்க நேரமில்லாமல், என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் என் கல்லூரிப் படிப்பும், அதன் பின் கிடைத்த வேலையும் என்னை விழுங்கிவிட்டிருந்தன. இடையில் அக்காள்களின் திருமணமும், அப்பாவின் மரணமும் நடந்தன.
சித்தப்பாவின் குடும்பம் வீட்டைப் பார்த்துக்கொள்ள, நான் அம்மாவை அழைத்துக்கொண்டு சென்னையில் தங்கினேன். அம்மாவுக்கு, அப்பா வாழ்ந்த வீட்டைவிட்டுச் சென்னையில் இருப்புக் கொள்ளாது. அவள் தெருவில் நடக்கும் அத்தனை வீட்டு விசேஷங்களுக்கும் வந்துவிடுவாள். அது ஒரு காரணம் மட்டுமே. நான், கடைசியாக சித்தப்பாவின் மகள் கல்யாணத்திற்கு வந்தது. பின்பு வெகுநாள் கழித்து இப்போது வந்திருக்கிறேன். அம்மா நான் கண்டிப்பாக இரண்டு நாள் தங்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள். எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். வராந்தாவில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்லைப்புறத்தில் சித்தப்பாவின் பேச்சுச் சத்தம் கேட்க, அங்கு சென்றேன். சித்தப்பா குளித்து, திருநீறு இட்டு ஒரு மர நாற்காலியில் கேணியின் அருகில் அமர்ந்துகொண்டு, அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்தவுடன், "ஏண்டா, இன்னும் கொஞ்சம் நேரம் படுக்க வேண்டியதுதான?" என்று கேட்டார்.
"இல்ல சித்தப்பா. அவ்வளவுதான்" என்றேன்.
அம்மா செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களைப் பறித்துத் தட்டில் வைத்திருந்தாள். சித்தி காஃபி எடுத்து வந்து கொடுத்தாள். என் கல்யாணம் பற்றி எதோ பேசிக்கொண்டிருந்தார்கள் போலும், நான் வந்ததும் நிறுத்திவிட்டு, என்ன பேசுவது என்று தெரியாத ஒரு மௌனம் இருந்தது.
அப்போதுதான் கவனித்தேன், எதோ ஒன்று இல்லாமல் இருந்ததற்கான வெறுமை இருந்தது.
"சித்தப்பா, இங்க என்னமோ..." என்று இழுக்க...
"ரொம்ப நாளா பத்தாயம் அங்க இருந்துச்சு. நீ இப்பதான் கவனிக்கிறியா?" என்றார்.
"ஓ! வித்துட்டிங்களா?" என்றேன்.
"இல்ல இல்ல, இப்ப பத்தாயமெல்லாம் யார் வாங்குறாங்க. உபயோகிக்காம மரமெல்லாம் பூச்சி அரிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதான், அதப் பிரிச்சு நீ படுத்திருந்தியே அந்தக் கட்டிலும், இதோ இந்த நாற்காலியும் பண்ணிச்சு" என்றார்.
நான் பத்தாயம் இருந்த இடத்தைப் பார்த்தேன். அதன் நான்கு கால்கள் இருந்த இடத்தில், சதுரமான அச்சும், சுவரில் ஒரு கோடும் மட்டும் விட்டுச் சென்றிருந்தது.
"சண்முக மாமா வரேன்னு சொல்லிருக்காங்க. உன்ன அவர் வீடு கட்டுற இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னாரு. குளிச்சிட்டு ரெடியாய்டு" என்றாள் அம்மா.
நான் குளித்து, சாப்பிட்டுவிட்டு மாமாவுக்காகக் காத்திருந்தேன். ஊரில் நிறைய இடங்கள் நல்ல விலைக்குச் செல்வதாகவும், இப்பொழுது வாங்கினால் நல்ல லாபத்தில் பின்பு விற்கலாம் என்றும் கூறி, என்னை வாங்கச் சொல்லி மாமா ஒருநாள் தொலைபேசியில் கூப்பிட்டு வற்புறுத்தினார். சிறிது நேரம் கழித்து வந்து, அவர் வீடுகட்டும் இடத்தைக் காண்பிக்க அழைத்துச் சென்றார். நான் சிறு வயதில் நடந்தும், மாட்டு வண்டியில் தொங்கிக்கொண்டும் போன அதே தார்ச் சாலைகள். ஆனால், இரு பக்கமும் இருந்த வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை. மாமா ஒரு காலனிபோல் இருந்த இடத்தைச் சென்றடைந்தோம். பார்க்கும் இடந்தோறும் வீடுகட்ட அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் இருந்தன. மாமாவின் வீடு வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. நான் ஏதேனும் சொல்வேன் என்று பெருமிதமாகப் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை. யாரையோ சத்தம் போட்டுக் கூப்பிட்டவாறு சென்றுவிட்டார்.
"நல்லா இருக்கீங்களா தம்பி?" என்று யாரோ கேட்க, திரும்பிப் பார்த்தேன். குள்ளமான உருவம் ஒன்று சிமெண்ட் சட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. "ம்..நல்லா இருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே உற்றுப் பார்த்தேன். சட்டியைக் கீழே வைத்துவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து முகம் துடைத்து தோளில் போட்டுக்கொண்டார்.
"அய்யிரு.." என்று சொல்லி ஆச்சரியத்தில் அவரைப் பார்க்க, அவர் அதே சிரிப்புடன், "மாமா, நீங்க வந்திருப்பதா சொன்னாங்க" என்றார்.
"இங்க என்ன பண்றிங்க?"
"ஆளு இல்லன்னாங்க, அதான்..."
"விவசாயம் பார்க்கல?"
"யாரு இப்ப விவசாயம் பார்க்கிறா, எல்லாம் போய்டுச்சு. இப்பெல்லாம் வீடு கட்டத்தான் ஆள் தேவைப்படுது. கொஞ்சம் கொஞ்சமா இந்த வேலையைக் கத்துக்கிட்டேன்."
அவர் உடல் தளர்ந்து இருந்தது. அவரின் கண்ணைப் பார்க்க வலிமை இல்லாமல் கீழே பார்த்தேன். சட்டியில் தளதளவென இருந்த சிமெண்ட் கலவை மனதை ஏதோ செய்தது. இன்னும் சிறிது நேரத்தில் அது இறுகிவிடும்.
"அம்மாவைக் கேட்டதாச் சொல்லுங்க" என்று சொல்லிச் சட்டியை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.
ஏனோ, எனக்கு நான்கு சதுரங்களும் ஒரு கோடும் விட்டுச் சென்ற பத்தாயம் நினைவுக்கு வந்து போனது.
வெங்கடேசன் சுந்தரேசன், ஒஃபலோன், மிசெளரி |