எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் 12

சில நாட்கள் கழித்து, அருணுக்கு அஞ்சலில் இரண்டு கடிதங்கள் வந்தன. கடிதம் என்றாலே சிறுவர்களுக்கு உற்சாகம்தானே! அருண், தனக்கு வந்திருந்த கடிதங்களை யார் அனுப்பியது என்று பார்த்தான். ஒன்றில் ஃப்ராங்கின் பெயர் இருந்தது. மற்றொன்றில், அனுப்புனர் பெயர் இல்லாமல் இருந்தது. இரண்டாவது கடிதம் யாரிடம் இருந்து வந்திருக்கக்கூடும் என்று அவனுக்கு ஒரு யூகம் இருந்தது.

முதலில் ஃப்ராங்க் அனுப்பிய கடிதத்தை பிரித்துப் பார்த்தான்:

அன்புள்ள அருணுக்கு,

கோடி கோடி அன்பு வணக்கங்கள். உனக்கு எவ்வளவு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீ எப்படி இருக்கிறாய்? என்மேல் உனக்கு கோபமா, நான் சொல்லிக்கொள்ளாமல் போனதற்கு? அப்படிக் கோபம் இருந்தால் என்னை மன்னித்துவிடு. நீயும் நானும் என் வீட்டில் விளையாடிய நாள் இரவில் பல தடியர்கள் வந்து எங்களை மிரட்டு மிரட்டென்று மிரட்டினார்கள். நான் உன்னை மீண்டும் சந்தித்தாலோ, அல்லது உன்னுடன் எந்தவிதமான தொடர்புகொண்டாலோ, எங்கள் குடும்பத்தார்களுக்கு வேலை போய்விடும் என்று எச்சரித்தார்கள். அதுவும் இல்லாமல், எங்களை ராவோடு ராவாகக் காலி பண்ணச் சொல்லி வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள். எங்களது குடும்பம் ஹோர்ஷியானாவை நம்பித்தான் இருக்கிறது. அதை எதிர்த்து எதுவும் பேசமுடியாத நிலையில், அந்தத் தடியர்களின் மிரட்டலுக்குப் பயந்து எர்த்தாம்டன் நகரிலிருந்து வேறிடம் வந்துவிட்டோம். மன்னித்துவிடு நண்பனே. மற்றபடி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஒரு சந்தோஷமான விஷயம்: எனக்கிருந்த விடாத பசி இப்போது நின்றுவிட்டது. இப்போதும் அதே சாப்பாடுதான் நான் சாப்பிடுகிறேன். ஆனாலும், ஹோர்ஷியானா பயந்துபோய் ஏதோ மாற்றம் செய்திருக்க வேண்டும். அந்த மாற்றத்திற்குக் காரணம் நீயாக இருக்கக்கூடும் என்று உளளூரப் பட்சி ஒன்று சொல்கிறது. எனது பெற்றோர்கள், செய்தித்தாளில் ஹோர்ஷியானா நிறுவனத்திடமிருந்து வந்த மன்னிப்புக் கடிதத்தை எனக்குக் காண்பித்தனர். உன்னைச் சந்தித்தது, தடியர்கள் மிரட்டியது, ஹோர்ஷியானாவின் திடீர் மாறுதல் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், நீ ஏதோ செய்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி நண்பனே! மிக்க நன்றி. என்றைக்காவது உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

பி.கு: நமது வகுப்புத் தோழி செராவிடம் நான் மிகவும் கேட்டதாகச் சொல்லவும். அவளைமாதிரி என்னிடம் இவ்வளவு அன்பாக நடந்து கொண்டவர்கள் உன்னைத் தவிர யாரும் கிடையாது. அப்புறம், உனக்குத் தெரியுமா, செரா இரண்டு கையும் விட்டு பைக் ஓட்டுவாள் என்று? Dude, she plays drums, too! Could you believe it? She rocks, dude. She rocks!

With Million Bizillion Kisses,

(விரைவில் ஒல்லியாகப் போகும்) ஃப்ராங்க்

ஹூரே! என்று அருண் உற்சாகத்தோடு துள்ளிக் குதித்தான். மற்றொரு கடிதத்தைப் பிரித்தான்.

அன்புள்ள அருண்,

சபாஷ் குழந்தாய், சபாஷ். நீ ஒரு கலக்கு கலக்கிட்டே. அந்த ஹோர்ஷியானா பயல்களை ஒரு சாட்டைய வச்சு பளார் பளார்னு அடிச்ச மாதிரி பயந்துபோய்ட்டாங்க. அருண் பெயரைக் கேட்டாலே தொடை நடுங்கப்போறாங்க அவனுக.

அவங்க ரொம்ப நாளாகவே ஏதோ தில்லுமுல்லு பண்றாங்கன்னு நிறையப் பேருக்கு சந்தேகம் இருந்தது. நம்ம அரசாங்கத்தோட மலிவுவிலை உணவுத் திட்டம் எல்லாத்திலேயும் டேவிட் ராப்ளே தானாவே பங்கு எடுத்துக்கிறத பார்த்தபோது ஏதோ மர்மம் இருக்குன்னு தோணிச்சு. நானே GMO பொருட்களைப் பத்திச் சந்தேகப்பட்டேன். ஆனா, எனக்கும் ஆதாரம் இல்லாம எதுவும் பண்ணமுடியலை. நீ ஏதோ உன் நண்பனுக்கு நல்லது பண்ணப்போய் இப்ப பாரு இந்த ஊருக்கே நல்லது நடந்திருச்சு.

இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கு. அது SERENDIPITY. எதையோ பண்ணப்போய், வேறு எதோ ஒண்ணைக் கண்டுபிடிக்கறதுதான் அது. Remember, Serendipity!

ஒரு வேண்டுகோள்: ஹோர்ஷியானா மாதிரி நிறுவனங்கள் நிறைய தில்லுமுல்லு பண்றாங்க. அதைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவரணும். அதுக்கு உன்னை மாதிரிச் சிறுவர்கள் அரசியல்வாதிகளா ஆகும்போது அதைச் செய்யவேண்டும். இந்த நாடு மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் எதிர்காலமே உன்னை மாதிரி சிறுவர்கள் கையில்தான் இருக்கு. இதை மறந்துடாதே.

பி.கு: தற்போது நான் வானவியலில் (astronomy) ஆர்வம் கொண்டுள்ளேன். இரவு நேரத்தில், கும்மிருட்டில், நமது அழகான வானத்தில் நட்சத்திரங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் பார்த்து, ரசித்து, படித்துக் கொண்டிருக்கிறேன். அடடா, என்ன அற்புதம்! என்னால், இன்னும் Messier Catalog-ல் உள்ள M-37 என்ற கேலக்சியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. கலிஃபோர்னியாவின் Prop-37 போன்று என்றாவது அது அகப்படும் என்று நம்புகிறேன்.

என்றும் உன் விசிறி

(முற்றும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com