அருட்பிரகாச வள்ளலார்
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர் அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க அடிகள்.

அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி


என்ற மகாமந்திரத்தை மாநிலம் உய்ய அருளிய மாண்பாளர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்த மகாபுருஷரின் வாழ்க்கை நாம் என்றும் நினைந்து பின்பற்றத் தக்கது.

தோற்றம்
சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் ராமையா பிள்ளை - சின்னம்மை தம்பதியினருக்கு அக்டோபர் 5, 1823ல் மகவாகத் தோன்றினார் இராமலிங்கர். தந்தை இளவயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வளர்ந்தார். கருவிலே திருவுடைய அவர், பள்ளிப் பருவத்திலேயே ஓதாது அனைத்தையும் உணர்ந்த ஞானக் குழந்தையாகப் பரிணமித்தார்.

பள்ளிப்பருவம்
பள்ளியில் ஆசிரியர் காஞ்சிபுரம் சபாபதிப் பிள்ளை "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்" என உலகநீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட இராமலிங்கர், "இங்ஙனம் ‘வேண்டாம்’ வேண்டாம்’ என எதிர்மறையான எண்ணங்களைப் பிஞ்சு மனங்களில் பதியச் செய்வது தவறு" என்று மறுத்துப் பாடிய பாடல், அவர் ஒரு ஞானக்குழந்தை என்பதை உலகுக்குக் காட்டியது.

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

என்று "வேண்டும், வேண்டும்" என்று அவர் பாடிய பாடலை ஆசிரியர் மெச்சினார். என்றாலும், இராமலிங்கர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதையும், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு அண்ணனிடம் முறையிட்டார். சபாபதிப் பிள்ளை தம்பியைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அண்ணியாரும் அறிவுரை கூறினார். இராமலிங்கர் வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்தார் அண்ணன். மாடியறையில் தனியிடம் ஒதுக்கிக் கொடுத்தார்.

முருகனின் காட்சி!
அண்ணன் படிப்பதற்காக ஒதுக்கிக் கொடுத்திருந்த அறையில் தினம்தோறும் படிப்பதற்குப் பதிலாக தியானம் செய்தார் இராமலிங்கர். அண்ணியார் வைத்துவிட்டுச் சென்ற உணவைக்கூட உண்ணாமல் முற்றிலுமாய்த் தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்தார். அண்ணனும் அண்ணியும் இராமலிங்கர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருக்க, அவரோ மெய்ஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தன்னை மறந்து தியானத்திலும் யோகத்திலும் திளைத்துக் கொண்டிருந்த இராமலிங்கருக்கு ஒருநாள் முருகனின் அருட்காட்சி கிடைத்தது.

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!


- என்று அந்நிகழ்வைப் பாடினார் வள்ளலார் பிற்காலத்தே.

முருகனின் அருட்காட்சி கண்ட அந்த நாள்முதல் வள்ளலாரின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. எப்போதும் அன்பும், அடக்கமும் கொண்ட அவரது நடத்தையில் மேலும் இரக்கமும் பணிவும் மிளிர்வதாயிற்று. முகத்தில் சாந்தம் குடிகொண்டது. கண்கள் ஒளிவீசின. கந்தனைக் கண்ட அந்த நாள்முதல் அவரது மனம் பக்தி மார்க்கத்திலேயே செல்லத் தொடங்கியது. பாடம் படிப்பதிலும், சிறுவர்களுடன் விளையாட்டில் பொழுதைக் கழிப்பதிலும் இருந்த நாட்டம் குறைந்தது. அருகிலிருந்த கந்தகோட்டத்திற்கு அடிக்கடி சென்று முருகனை தரிசித்து வரலானார். ஆலயத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கத் தொடங்கினார்.

இளமையில்...
அண்ணன் தம்பியை ஒரு சாதாரணக் குழந்தையாகவே எண்ணியிருந்தார். ஆனால் எதுவும் வெளிப்பட காலமும் நேரமும் வேண்டுமே! வள்ளலாரின் இறையாற்றல் வெளிப்படும் காலம் வந்தது. சோமு செட்டியார் சென்னையில் புகழ்பெற்ற தனவந்தர். வாரந்தோறும் சனிக்கிழமை அவரது வீட்டில் சபாபதிப் பிள்ளையின் தலைமையில் பெரியபுராணச் சொற்பொழிவு நடைபெறும். ஒருமுறை சபாபதிப் பிள்ளைக்கு உடல்நலமில்லை. அதனால் அன்றைக்கு தமக்குப் பதிலாகத் தன் தம்பி இராமலிங்கத்தை அனுப்பி வைத்தார். இராமலிங்கரும் சொற்பொழிவு செய்துவிட்டு வந்தார்.

உடல் குணமானதும் நண்பர்களைக் காணச்சென்றார் சபாபதிப் பிள்ளை. அவரைக் கண்டதும் ஓடோடி வந்த சிலர் இராமலிங்கரின் சொற்பொழிவைப் பாராட்டினர். அது கேட்டு மனம் மகிழ்ந்தார் பிள்ளை. இராமலிங்கரின் சொற்பொழிவைத் தாமும் கேட்க ஆவல் கொண்டார்.

ஒருமுறை இராமலிங்கருக்குச் சொற்பொழிவாற்ற வெளியூரிலிருந்து அழைப்பு வந்தது. அவரும் அண்ணன், அண்ணி அனுமதி பெற்றுப் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றவுடன், பிறர் யாரும் தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இருக்க, தன்னை மறைத்துக்கொண்டு கூட்டத்திற்குச் சென்றார் சபாபதிப் பிள்ளை. தம்பியின் பேச்சைக் கேட்டார். நல்ல குரல் வளத்துடனும், அற்புதமான பாவத்துடனும், எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகாமல் இராமலிங்கர் பேசியவிதம் கண்டு மலைத்துப் போனார். "இராமலிங்கம் சாதாரணச் சிறுவனல்லன். இறையருள் பெற்றவன். அதனால்தான், யாரிடத்தும் கற்காமலேயே அனைத்தையும் உணர்ந்து பேச இவனால் முடிகிறது; இவ்வளவு பெருமை உடையவனைப் போய்த் தவறாகக் கருதிவிட்டோமே! பலமுறை மனம் புண்படுமாறு நடந்து கொண்டு விட்டோமே!" என்று நினைத்து மனம் கலங்கினார். வந்ததுபோலவே யாருமறியாமல் வீட்டிற்குச் சென்றார். சொற்பொழிவு முடிந்து வந்த தம்பியை அணைத்து வரவேற்று வாயாரப் போற்றினார். வாழ்த்தினார்.

பயணம்
வள்ளலாரின் வாழ்வில் இறையருளால் பல்வேறு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒருநாள் பசித்திருந்தபோது அன்னை வடிவாம்பிகையே அவருக்கு அக்காள் உருவத்தில் வந்து அமுதூட்டினார். மற்றொரு முறை திருமண வற்புறுத்தல் குறித்து வள்ளலார் வருத்தமுற்றிருந்த போது, துறவி உருவில் இறைவனே தோன்றி அவரை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். திருமணம் செய்துகொண்டாலும் துறவற வாழ்க்கையையே விரும்பியது வள்ளலாரின் அகம். அடிக்கடி ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். வாழ்க்கை உண்மைகளை மக்களுக்குப் போதித்தார். வள்ளலாரின் அறிவுத்திறத்தால் பலரும் அவரை நாடிவந்து சந்தேக விளக்கம் பெற்றுச் சென்றனர். தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களுள் ஒருவர். அவர், வள்ளலாரையே ஆசானாகக் கொண்டு அவருக்கே அடியவரானார்.

நாளடைவில் இறை உந்துதலால் சென்னையை விட்டு நீங்கிச் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் வள்ளலார். வழியில் அன்பர்களின் அழைப்பிற்கேற்ப பல ஊர்களில் தங்கி ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். பசியின் கொடுமை, கொல்லாமை ஆகியவை பற்றி ஊனும் உள்ளமும் உருகும்படிச் சொற்பொழிவுகளில் எடுத்துரைத்தார். வழியிலிருந்த ஆலயங்களுகெல்லாம் சென்று தரிசனம் செய்தவாறே சிதம்பரத்தை அடைந்தார். அன்பர் ஒருவரின் இல்லத்தில் தங்கினார். தினந்தோறும் தில்லை நடராஜரைத் தரிசிப்பதும், அவருக்குப் பாமாலை சூட்டி வழிபடுவதும் வள்ளலாரின் வழக்கமாயிற்று. வள்ளலாரின் புகழ் சுற்றுப்புறங்களில் எல்லாம் பரவியது. பலரும் அவரை நாடிவந்து தரிசிப்பதும் அருள்விளக்கம் பெற்றுச் செல்வதுமாய் இருந்தனர். அவ்வாறு தன்னை நாடிவந்த அன்பர்களுக்குப் பல்வேறு வாழ்க்கை உண்மைகளைப் போதித்தார். அனைத்து உயிரையும் சமமாகப் பாவித்து, தன்னால் முடிந்த உதவிகளை ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்‘ என்ற உண்மையை மக்களிடம் எடுத்துரைத்தார்.

கருங்குழி வாசம்
இந்நிலையில் வேங்கட ரெட்டியார் என்ற அன்பர் வள்ளலாரிடம், சிதம்பரம் அருகே உள்ள கருங்குழியில் வந்து தம்மோடு தங்கி இருக்குமாறும், தாம் தேவைப்படும் வசதிகளைச் செய்து தருவதாகவும் கூறி வேண்டிக் கொண்டார். முதலில் மறுத்த வள்ளலார், பின்னர் அவரது அன்பின் தன்மை கண்டு அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ரெட்டியாரின் இல்லத்தில் வள்ளலாருக்கு எனத் தனியறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தனித்திருந்தார். தினமும் தியானம் செய்து கொண்டிருப்பார். அல்லது ஏதாவது சுவடியில் எழுதிக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருப்பார். சமயங்களில் வெளியில் எங்காவது புறப்பட்டுச் சென்று ஏகாந்தமாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவார்.

சமரச சன்மார்க்க சங்கம்
இவ்வாறு சிலகாலம் கருங்குழியில் தங்கியிருந்த வள்ளலார் பின் அங்கிருந்து நீங்கி கடலூர், மஞ்சக்குப்பம், மருதூர் எனப் பல இடங்களில் மாறிமாறித் தங்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கருங்குழியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாசம் செய்தார். சென்ற இடத்திலெல்லாம் ஜீவகாருண்ய ஒழுக்கம் பற்றியும் பசியின் கொடுமை பற்றியும் விரித்துரைத்தார். புலால் மறுத்தலையும், பசிப்பிணி போக்குவதையும் அறிவுறுத்தினார். அதை வலியுறுத்துவதற்காகவே வடலூரில் சமரச சன்மார்க்க சங்கத்தைத் துவங்கினார். அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்தவேண்டும் என்பதே சங்கத்தின் முக்கியக் கொள்கை என்று அறிவித்தார். "அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தில் உள்ள அழியாத பொருள். எனவே அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு நிறைந்தவர்களாய்த் திகழ வேண்டும். உயிர்ப்பலியை ஒருபொழுதும் இறைவன் ஏற்பதில்லை. எனவே எந்த ஒரு உயிரையும் கொன்று அதனை இறைவனுக்குப் படைத்தல் கூடாது" போன்றவை சங்கத்தின் முக்கியமான கொள்கைகளாக இருந்தன.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com