சிட்னி நகரத்தின் பிரதான சாலையில் நடந்து வருகிறார் அந்த மனிதர். அவரது நடையில் சோர்வும் களைப்பும் தெரிகிறது. அவர் பழைய சூட், குளிருக்கு மேல்கோட், கான்வாஸ் ஷூக்கள், அகலமான விளிம்புள்ள தொப்பி அணிந்திருக்கிறார். வலது கையில் பத்து ஷில்லிங் நோட்டு; இடது கையில் பழைய செய்தித்தாள் கட்டு வைத்திருக்கிறார்.
அது 1933ம் ஆண்டு, ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை. அவர் பெயர் ஜான்சன்.
அத்தி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ள இடத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார். சிட்னி நகரத்தில் வேலை இல்லாதவர்கள், அந்த மரங்களின் நிழலில் படுத்துறங்குவார்கள். புற்களில் படிந்துள்ள பனி அவரணிந்திருந்த பழைய காலணிகளுக்குள் ஊடுருவி, களைத்துப்போன கால்களை உறைந்துவிடச் செய்தன. அவர் பைக்குள்ளே இருந்த தீப்பெட்டியில் ஒரு குச்சிதான் இருந்தது. அவர் தீக்குச்சியைப் பொருத்தினார்.
அந்த இடத்தில் பல ஆடவர் படுத்திருப்பதைத் தீக்குச்சியின் மங்கலான ஒளி காட்டியது. அவர்கள் புற்கள் மீது பழைய பத்திரிகைகளைப் பரப்பி, கோட்டை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு படுத்திருந்தார்கள். ஒரு நபர் தன்னுடைய குழந்தைமீது கோட்டைப் போர்த்தி அருகில் படுத்திருந்தார். குழந்தை குளிர் தாங்காமல் சிணுங்கியபொழுது அவர் ஆறுதலாகப் பேசி அதைத் தூங்கவைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியினருகில் தான் தூங்குவதற்கு ஒரு இடத்தை ஜான்சன் தேர்வுசெய்தார். அவர் அந்த இடத்தை நோக்கி கவனமாக நடந்தார். ஆனால் அங்கு படுத்திருந்த ஒருவர்மீது அவர் கால் இடறியது. "ஏய், பார்த்து நட!" என்றார் அந்த மனிதர்.
"மன்னியுங்கள்" என்று ஜான்சன் முணுமுணுத்தார்.
அவர் பக்கத்தில் படுத்திருப்பவருக்குத் தொல்லை இல்லாமல் புற்களின் மீது பத்திரிகைக் காகிதங்களைப் பரப்பினார். முதுகைச்சுற்றி காகிதங்களை வைத்தார். அது கட்டாந்தரை என்பதால் அவரால் வசதியாகப் படுக்க இயலவில்லை. உடலைப் போர்த்தினால் கால்களை மூட முடியவில்லை. காகிதங்களால் உடலை மூடுகின்ற வேலையை அவர் மறுபடியும் தொடங்கினார். முகம் தவிர உடலின் எல்லாப் பகுதிகளையும் காகிதங்களால் மூடினார். ‘ஹெரால்டு' பத்திரிக்கையைப் படிக்க முடியாது. ஆனால் அதைக்கொண்டு உடலை மூடலாம் என்று சொல்லிக்கொண்டார்.
மழை பெய்யாததால் பூமி இறுகியிருந்தது. மரத்தின் அடர்த்தியான கிளைகளும் இலைகளும் பூமியில் பனி விழாமல் தடுக்கின்றன என்று நினைத்தார். முதுகில் ஏதோ உறுத்தியது. மரத்தின் வேர் பூமிக்குமேல் துருத்திக்கொண்டிருந்ததும் அவர் சற்று புரண்டுபடுத்தார். அவர் தூங்க விரும்பினார். ஆனால் காலி வயிறும், குளிரில் விறைத்த கால்களும் அவர் தூங்கமுடியாமற் செய்தன.
ஓர் ஆண்டுக்கு முன்பு மரணமடைந்த மனைவியை அவர் நினைத்துக்கொண்டார். உடல் களைத்திருந்தபடியால் மனைவியைப் பற்றி நினைக்கும் பொழுது ஏற்படக்கூடிய வழக்கமான ஏக்கமும் துயரமும் மறைந்துவிட்டன. வேலை இல்லாதவர்களின் அடையாளச் சீட்டு சட்டைப்பையில் இருந்தது. அதைத் தொட்டுப் பார்த்தார். உதவிப்பணம் என்று தருவார்கள். இந்த விவகாரம் வேண்டாம் என்று எண்ணினார். ஆனால் வேலை கிடைக்கவில்லையே! வயது நாற்பதைத் தாண்டிவிட்டது; தொழிற்பயிற்சியும் இல்லை. இவ்வாறாக அவருடைய சிந்தனைகள் சுழன்றன. வயிற்றுப் பசி அவரை வாட்டியது. குளிர் அவரை வதைத்தது.
அவரைச் சுற்றிலும் பலர் உடல்களை வளைத்துக் கொண்டு, கால்களை மடக்கிக் கொண்டு படுத்திருந்தார்கள். அவர்கள் தூங்கிவிட்டார்கள். அது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவர் கையில் வைத்திருந்த பத்து ஷில்லிங் நோட்டைப் பற்றி திடீரென்று நினைத்தார். மடித்து வைத்திருந்த நோட்டை விரித்தார். அந்த இருட்டில்கூட அதன் உருவரை அவருக்கு நன்றாகத் தெரிந்தது. அந்தப் பணத்தை நன்கொடையாகப் பெற்ற சந்தர்ப்பங்களைப் பற்றி அவர் மனம் சிந்தித்தது.
வேலையில்லாத தொழிலாளர்கள் மையத்தில் அவர் சில்லறையாக நான்கு ஷில்லிங் மற்றும் மூன்று பென்னி வசூலித்தார். அவர்கள் தம்மிடமிருந்த கடைசிப் பணத்தை நன்கொடையாகக் கொடுத்தார்கள் என்று ஊகித்தார். வேலை செய்கின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வேலை இல்லாத தொழிலாளர்களிடம் கட்சிப்பற்று அதிகமாக உள்ளது. சனிக்கிழமை முழுவதும் தன்னுடைய நண்பர்கள் செல்லக்கூடிய மதுக்கடைகளுக்குச் சென்றார். அந்த நண்பர்கள் கட்சி அனுதாபிகள். அவர்களிடமிருந்து நான்கு ஷில்லிங் பத்து பென்னி நன்கொடையாகப் பெற்றார். சில்லறையாகத்தான் நன்கொடைகள் கிடைத்தன. அவர் தன்னிடமிருந்த கடைசி அரை டாலருக்கு பீர் குடித்தார். நண்பர்கள் அவருக்கு பீர் வாங்கித் தர முன்வந்தாலும், அவர்களுடைய உதவியை அவர் மறுத்துவிட்டார்.
நண்பர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதற்காகவே அந்த பீர் கடைக்குச் சென்றார். தவிர்க்க இயலாமல் அவர்களுடன் சேர்ந்து குடித்தார். பிறகு, அவர் காலணிகளைப் பழுது பார்க்கின்ற நிக் என்னும் நண்பருடைய வீட்டுக்குச் சென்றார்.
"இப்பொழுது காலணிகளைப் பழுது பார்க்கும் தொழில் கெட்டுப் போச்சு; அவர்களே பழுது பார்த்துக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் நன்கொடை அளிக்க விரும்புகிறேன். ஆனால் என்னிடம் இந்த பத்து ஷில்லிங் நோட்டு மட்டுமே உள்ளது" என்றார் நிக்.
ஜான்சனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. "நிக்! நான் ஒன்பது ஷில்லிங் ஒரு பென்னி வசூலித்திருக்கிறேன். நீ இதை எடுத்துக்கொண்டு உன்னிடமுள்ள பத்து ஷில்லிங் நோட்டைக் கொடு; நமது கட்சிக்கு உன்னுடைய நன்கொடை பதினொரு பென்னி!" என்றார் ஜான்சன்.
நிக் அந்தப் பரிவர்த்தனைக்கு உடன்பட்டார். பிறகு அவர்கள் ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடத்திற்குத் தீ வைக்கப்பட்டதைப் பற்றியும் அந்த நாட்டில் பாசிசம் வளர்ந்துகொண்டிருப்பதைப் பற்றியும் பேசினார்கள். அவரிடமிருந்து விடை பெற்ற ஜான்சன், மற்றொரு தோழரைச் சந்திப்பதற்குச் சென்றார். அவரிடம் நன்கொடை கேட்பதற்கு முன்பே அவராகப் பேசினார்.
"ஜான்சன், நன்கொடை தரக்கூடிய நிலையில் நான் இல்லை. ஆனால் நீ இங்கு சாப்பிடலாம்; படுக்கையில் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
ஜான்சன் அங்கு உணவருந்திய பிறகு அவரோடு செஸ் விளையாடினார். இரவில் தூங்கிய பிறகு புத்துணர்ச்சியோடு காலையில் எழுந்தார். எளிய காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு சிட்னியை நோக்கி நடந்தார். மாலையில் கட்சி நடத்திய கூட்டத்துக்குச் சென்றார். அதே இடத்தில்தான் அவர் இப்பொழுது காகிதங்களை விரித்துப் படுத்திருக்கிறார். பசி, குளிர், மூட்டுவலி ஆகியவற்றைப் பற்றி நினைத்தார். பத்து ஷில்லிங் நோட்டை கவனமாக மடித்துப் பையில் வைத்தார். ஏதோ ஒரு உணர்ச்சியால் தூண்டப்பட்டவராகத் திடீரென்று தரையிலிருந்து எழுந்து நின்றார். மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்தவர்களை மிதித்துவிடாமல் கவனமாக நடந்தார். அவர் சிட்னிக்குச் செல்கின்ற சாலையில் நடக்கலானார். மூட்டுவலி துன்புறுத்தினாலும் அவர் தள்ளாடிக் கொண்டு சென்றார். ஒரு வீட்டுக்குள்ளிருந்து கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்தது.
நெடுஞ்சாலையில் ஓர் உணவு விடுதி இருந்தது. கண்ணாடி சன்னல் வழியாகப் பலவிதமான உணவுப் பொருட்களைப் பார்த்தார். வறுத்த இறைச்சி, புறாக்கறி, மீன் பொறியல், சுவையான கேக்குகள்... அவர் நாக்கில் எச்சில் ஊறியது. காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அவர் எதுவும் சாப்பிடவில்லை. கையில் பணம் இருந்ததால் எதை சாப்பிடலாம் என்று கற்பனை செய்தார். பன்றி வறுவலா? மாட்டிறைச்சியா? கேக்குகளா? வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டுகளா? முகத்தில் குளிர்காற்று சில்லென்று அடித்தது. அவர் உடல் நடுங்கியது. சாலையில் ஒரு டிராம் வண்டி கடகடத்துக் கொண்டு சென்றது. சாலையில் ரோந்து வந்த போலீஸ்காரர், ஜான்சனை சந்தேகத்தோடு பார்த்தார். போகும் வழியில் ஒரு புகையிலைக் கடையில் சுருட்டுகளும் புகைக்குழாய்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. புகைக்கின்ற பழக்கத்தைச் சென்ற ஆண்டில் நிறுத்தியது நல்லதே; இல்லாவிட்டால், இப்பொழுது அதிகத் துன்பமேற்பட்டிருக்கும் என்று ஜான்சன் நினைத்தார்.
அவர் நடக்க முடியாமல் நின்றார். அந்த இடத்தில் கட்டில், மெத்தை, தலையணைகள் விற்பனை செய்கின்ற கடை இருந்தது. சொகுசான மெத்தைகள், மென்மையான தலையணைகள், கம்பளிப் போர்வைகள், பூப்போட்ட படுக்கை விரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த மெத்தையில் படுத்துத் தூங்கினால் எப்படி இருக்கும் என்று அவர் கற்பனை செய்தார். கண்ணாடி சன்னலை உடைத்து உள்ளே சென்று மெத்தையில் படுத்துக் தூங்கலாமா என்று அவர் சிந்தித்தார். உடனே சிரித்தார். சிரிப்பொலி அவரை பயமுறுத்தியபடியால் அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்.
கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம், ஆதரவற்ற மக்களுக்கு இலவசமாக சூப்பும் ஒரு ஷில்லிங்கிற்குப் படுக்கையும் தருகிறது. ஒரு ஷில்லிங்கைச் செலவுசெய்தால், களைப்புத் தீர உறங்கலாம். ஒன்பது ஷில்லிங் மட்டுமே வசூலித்ததாகச் சொன்னால் என்ன? என்று சிந்தித்தார். அது முறையல்ல என்று அவர் முடிவு செய்தாலும் கால்கள் அந்தத் தொண்டு நிறுவனத்துக்கு அவரை இட்டுச் சென்றன.
ஜான்சன், கட்டிடத்திற்குள் நுழைந்தார். ஒரு எழுத்தர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரில் மேசைமீது ஒரு ரிஜிஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. ஜான்சன் அவருக்கு முன்னால் சென்று லேசாக இருமினார். எழுத்தர் தலையை உயர்த்தி "என்ன வேண்டும்" என்று கேட்டார்.
"நான் படுத்துறங்க விரும்புகிறேன்; இடமிருக்கிறதா?" என்றார் ஜான்சன்.
"கூடத்தில் ஒரு கட்டில் காலியாக இருந்தது. நான் பார்த்து வருகிறேன்" என்று கூறிவிட்டு அவர் எழுந்து சென்றார். அந்த அறையில் கணப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. ஜான்சன், நெருப்புக்குமேல் கைகளை நீட்டிச் சூடேற்றினார். அவருடைய ரத்தக்குழாய்களில் சூடான ரத்தம் பாய்ந்தது. உடல் சுறுசுறுப்படைந்தது.
எழுத்தர் திரும்பி வந்தார். "ஒரு கட்டில் காலியாக உள்ளது. அதில் நீ படுத்துக் கொள்ளலாம்; ஒரு ஷில்லிங் கொடு" என்றார் அவர்.
ஜான்சன், தன்னிடமிருந்த பத்து ஷில்லிங் நோட்டைத் தயக்கத்தோடு நீட்டினார். அவர் அதைப் பெற்றுக் கொண்டு மீதம் ஒன்பது ஷில்லிங் சில்லறையாகக் கொடுத்தார். ஜான்சன் பணத்தை மேலங்கிப் பைக்குள் வைத்தார்.
"நான் கணப்புக்கு அருகில் சிறிது நேரம் உட்கார விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபமுண்டா?" என்று ஜான்சன் கேட்டார்.
"உன் விருப்பப்படி செய்" என்றார் எழுத்தர். ஜான்சன் ஒரு ஸ்டூலை இழுத்து கணப்பின் அருகில் வைத்தார். எழுத்தரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இடது கால் ஷூவைக் கழற்றினார். இரண்டு ஷூக்களையும் கழற்றிய பிறகு, காலுறைகளை அகற்றினார். அவை ஈரமாக இருந்தன. அவர் காலுறைகளைப் பிழிந்தபொழுது, அவற்றிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. அவர், குதிகாலைக் கைகளால் தேய்த்தார். பிறகு துன்பமளித்த முழங்கால் மூட்டுகளை இரண்டு கைகளாலும் தேய்த்தார்.
அந்த சமயத்தில், எழுத்தர் அறைக்குள் வந்தார். "காலணிகளை இங்கே கழற்றக் கூடாது" என்று கடுகடுப்பாக் கூறினார்.
"மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு ஷூக்களை அணிந்தார் ஜான்சன். உறக்கம் அவர் கண்களை மூடியது. பல தோழர்கள் கட்சிக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். சிலர் தம்மிடமிருந்த கடைசிப் பணத்தைக் கொடுத்தார்கள். அதில் ஒரு ஷில்லிங்கை என்னுடைய சுகத்துக்குச் செலவழிப்பதா? என்று சிந்தித்தார்.
உடனே அவர் எழுத்தருக்கு முன்னால் போய் நின்றார். "நான் தூங்க விரும்பவில்லை; கட்டில் வேண்டாம்" என்றார்.
"சரி" என்று கூறிய எழுத்தர், மேசைமீது வைக்கப்பட்டிருந்த பணப் பெட்டியிலிருந்து ஒரு ஷில்லிங்கை எடுத்து அவரிடம் கொடுத்தார்.
"நான் கொடுத்த பத்து ஷில்லிங் நோட்டைக்கொடுங்கள்" என்று கூறிய ஜான்சன், ஒன்பது ஷில்லிங் சில்லறையை அவரிடம் நீட்டினார். எழுத்தர் முணுமுணுத்தார். பத்து ஷில்லிங் நோட்டைத் தேடி எடுத்து ஜான்சனிடம் கொடுத்தார்.
"சூப் கிடைக்குமா?" என்று ஜான்சன் கேட்டார்.
"இலவச சூப் இனிமேல் எட்டு மணிக்குத்தான்" என்றார் எழுத்தர்.
ஜான்சன் அந்த கட்டிடத்திலிருந்து வெளியில் வந்தார். எங்கு செல்வதென்று தெரியாமல் சாலையில் நின்றார். மழைத்தூறல் தொடங்கியது. ஒரு பாலத்தின் கீழ் அவர் மழைக்கு ஒதுங்கினார். அவலட்சணமான ஒரு பெண் அவரிடம் வந்தாள். "இரவில் இன்பம் அனுபவியுங்கள்" என்றாள்.
ஜான்சன் தள்ளாடினார். "நோயாளி மாதிரி இருக்கிறாயே" என்று அவள் அனுதாபத்தோடு பேசினாள். ஜான்சன் பதில் பேசாததால் அவள் சாலையில் நடந்து செல்லத் தொடங்கினாள்.
ஜான்சன் சில தெருக்களைக் கடந்து சென்றார். ஓட்டலில் உணவு சமைக்கின்ற வாசனையை முகர்ந்தார். ஓட்டல் வாயிலில், "ஒன்றரை ஷில்லிங்குக்கு முழுச்சாப்பாடு" என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தைப் படித்தார். கால்கள் ஓட்டலுக்குள் அவரை இழுத்துச் சென்றன. உணவருந்தும் அறையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். உணவுப் பண்டங்களின் விலைகளைத் தெரிவிக்கின்ற அட்டையை எடுத்துப் படித்தார். கறிவறுவல், ஈரல், சூப்.... வயிற்றுப்பசி அதிகரித்தது. மனிதன் உணவில்லாமல் வாழமுடியுமா? ஒன்றரை ஷில்லிங். எட்டரை ஷில்லிங் வசூல் என்று கூறி விட்டாலென்ன? அவர் மேசைமீது தலையை வைத்தார்.
ஒட்டல் சிப்பந்தி அவரிடம் வந்தார். "உடல் நலமில்லையா?" என்று கேட்டார்.
கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் ஜான்சனிடம் வந்தார். "போதையில் உள்ளவர்கள் ஓட்டலுக்குள் வரக்கூடாது" என்று வெறுப்போடு கூறினார்.
"எனக்கு போதை இல்லை. திடீரென்று களைப்பு ஏற்பட்டது. அவ்வளவுதான்" என்றார் ஜான்சன்.
"என்ன வேண்டும் என்று சொல்; உணவருந்தும் மேசைமீது தலையை வைக்கக்கூடாது" என்றார் கல்லாக்காரர்.
ஜான்சன் எழுந்து நின்றார். "நான் சாப்பிடவில்லை" என்றார். நாற்காலியைப் பின்னால் தள்ளிவிட்டுக் கதவை நோக்கி நடந்தார்.
உணவு வேண்டாம் என்று கூறியது ஏன் என்று அவர் சிந்தித்தார். பத்து ஷில்லிங் நோட்டை மாற்ற விரும்பாததனாலா? அல்லது ஓட்டல் மேலாளருடைய மிரட்டலை வெறுத்ததாலா? அவர் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பசி அவரை வாட்டியது.
எங்கு போவது என்று தெளிவில்லாமல் அவர் சாலையில் நடந்து சென்றார். மூட்டுவலி அதிகரித்தது. மழையில் அவருடைய காலணிகள் நனைந்து பாதங்கள் ஈரமாகிவிட்டன. சாலையின் குறுக்கே நடந்தபொழுது ஒரு டாக்சி அவரை இடிப்பது போல வந்து கிறீச்சிட்டு நின்றது.
"ஹாரன் அடிக்கிறேனே உன் காதில் விழவில்லையா?" என்று டாக்சி ஓட்டுநர் அவரைக் கோபித்துக்கொண்டார். தரையில் விழுந்த ஜான்சன் சிரமப்பட்டு எழுந்து நின்றார். எதுவும் பேசாமல் நடந்தார். சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சின் மீது உட்கார்ந்தார்; கால்களை நீட்டினார்; அமர்ந்த நிலையியே கண்களை மூடித் தூங்கினார். கதிரவன் உதித்தபொழுது விழித்துக்கொண்டார்.
அவர் தொண்டு நிறுவனத்தை நோக்கி நடந்தார். அங்கு நீளமான வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரையும்போல அவருக்கும் ஒரு கோப்பை சூடான சூப் தரப்பட்டது. அவர் அதை ஆவலோடு குடித்தார். பிறகு சாலையில் நடந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு சாலையில் போடப்பட்டிருந்த பெஞ்ச் மீது உட்கார்ந்தார். பையிலிருந்த பத்து ஷில்லிங் நோட்டை எடுத்தார். அதை கவனமாகப் பார்த்துவிட்டு மடித்துப் பைக்குள் வைத்தார்.
அவர் சற்று வேகமாக நடந்து ஒரு கட்டிடத்துக்கு முன்பாக நின்றார். பிறகு கட்டிடத்தின் இருட்டான மாடிப்படிகளில் ஏறினார். முதல் தளத்தில் ஒரு அறைக்கு முன்னால் நின்று கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து, "வரலாம்" என்று ஒரு குரல் கேட்டது.
ஜான்சன் உள்ளே நுழைந்தார். அந்த அறையும் குளிர்ச்சியாக இருந்தது. சுவரில் வர்ணப்பூச்சு உதிர்ந்திருந்தது. அந்த அறையில் ஒரு பெரிய மேசையும் இரண்டு பழைய நாற்காலிகளும் இருந்தன. அழுக்குப்படிந்த சன்னல் வழியாக அறைக்குள் மங்கலான சூரிய ஒளி வந்தது. மேசைக்குப் பின்னால் ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். அவர் கோட்டும், டையும் அணிந்திருந்தார். அவர் குனிந்து காகிதத்தில் பேனாவால் எழுதிக்கொண்டிருந்தார். அவருக்குச் சுமாராக முப்பது வயதிருக்கும். மேசைமீது காகிதங்கள், ஃபைல்கள், அச்சு ப்ரூஃபுக்கள் இருந்தன. சுவரில் காரல் மார்க்சின் படம் தொங்கியது. அன்றைய செய்திப் பத்திரிகைகள் மற்றும் கட்சியின் வாரப்பத்திரிகைகள் அங்குள்ள ஸ்டாண்டு மீது வைக்கப்பட்டிருந்தன.
அவர் எழுதுவதை நிறுத்தி, தலையை உயர்த்தினார். "ஹலோ ஜான்சன்!" என்றார். அவர்தான் தோழர் ஷார்க்கி. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்.
ஜான்சன், ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அந்தப் பழைய நாற்காலி பாரம் தாங்காமல் கிறீச்சிட்டது.
"சனிக்கிழமையன்று கட்சிக்கு நிதி வசூலித்தேன்".
"எவ்வளவு கிடைத்தது?"
"பத்து ஷில்லிங்"
ஜான்சன், பத்து ஷில்லிங் வசூலித்ததைச் செயலாளர் ஷார்க்கி மனப்பூர்வமாகப் பாராட்டினார். "நம் தோழர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். ஆகவே, பத்து ஷில்லிங் நன்கொடை வசூலித்தது ஒரு சாதனை. உங்களைப் பாராட்டுகிறேன்" என்றார் ஷார்க்கி.
ஜான்சன், பத்து ஷில்லிங் நோட்டை ஷார்க்கியிடம் கொடுத்தார். அவர் அந்தப் பணத்தை ஒரு டப்பாவில் வைத்தார்.
"வேலையிழந்த தொழிலாளர்களுடைய ஆர்ப்பாட்டத்தை போலீஸ் தாக்கியபொழுது எடுத்த படம் இது. இதை கட்சிப்பத்திரிகையில் பிரசுரிக்கவேண்டும். பிளாக் செய்பவர்கள் பழைய பாக்கியைக் கொடு என்கிறார்கள். நீ இந்த போட்டோவை அவர்களிடம் கொடுத்து, பத்து ஷில்லிங் வரவு வைத்துக் கொள்ளும்படிச் சொல்லு, உடனே போ. இந்த வாரம் வெளியாகின்ற கட்சிப் பத்திரிகையில் இந்த போட்டோ இருக்க வேண்டும்" என்றார் செயலாளர் ஷார்க்கி.
ஜான்சன், போட்டோவையும் பத்து ஷில்லிங் நோட்டையும் வாங்கிப் பைக்குள் வைத்தார்.
"எனக்குப் பசி; சூடான அப்பம் வாங்கிக் கொண்டு வா" என்று சொல்லிவிட்டு ஆறு பென்னி காசைக் கொடுத்தார் ஷார்க்கி. "நீ சாப்பிட்டாயா?" என்று அவர் ஜான்சனிடம் கேட்டார்.
"நான் அதிகப் பசியோடிருக்கிறேன். புழுக்கள் நெளியும் இறைச்சியைக் கூட சாப்பிடத் தயார்" என்றார் ஜான்சன்.
"அப்படியானால் உனக்கு ஒரு அப்பம் வாங்கிக் கொள்" என்றார் ஷார்க்கி.
ஜான்சன் கட்டிடத்திலிருந்து வெளியில் வந்து மார்பை நிமிர்த்திக் கம்பீரமாக நடந்தார். காலியாக இருந்த வயிறு அவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவர் கரங்களை வீசிக்கொண்டு சுறுசுறுப்பாக நடந்து சென்றார். பத்து ஷில்லிங் நோட்டைக் கையில் பத்திரமாகப் பிடித்திருந்தார்.
(நன்றி: காலமும் கருத்தும் மாத இதழ்)
மூலம்: ஃப்ராங்க் ஹார்டி தமிழில்: நா. தர்மராஜன் |