நா. தர்மராஜன்
அயல்நாட்டு முற்போக்கு இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, பலரும் அவை பற்றி விரிவாக அறியக் காரணமானவர் பேராசிரியர் நா. தர்மராஜன். இவர், ஆகஸ்ட் 4, 1935 அன்று சிவகங்கையில் பிறந்தார். தந்தை நாராயண சேர்வை, சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் நாட்டம் கொண்டிருந்த அவர், சிவகங்கையில் கூட்டுறவு அமைப்புகள் பலவற்றை உருவாக்கினார். பொதுவுடைமை சித்தாந்தம் சிறுவயதிலேயே மகனையும் ஈர்த்தது. படிக்கும்போதே வாசிப்பார்வம் பிறந்துவிட்டது. வெ. சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதி, தி.ஜ. ரங்கநாதன் போன்றோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் இவரைக் கவர்ந்தன. பள்ளி நூலகத்திலிருந்து அவற்றை எடுத்துச் சென்று படிப்ப்பார். ஜேன் ஆஸ்டின், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஆர்.எல். ஸ்டீவன்சன், ஜார்ஜ் பெர்னார்டு ஷா போன்றோரது நூல்கள் இவரது ஆங்கில அறிவைக் கூர்மையாக்கின. தமிழாசிரியர்கள் வரதராஜனும், தக்ஷிணாமூர்த்தியும் தமிழார்வத்தை ஊட்டினர். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமை மிக்கவரானார்.

சிவகங்கை மன்னர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில வகுப்பில் சேர்ந்தார். கல்லூரி மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் ஜீவாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். ஆங்கில இலக்கியத்தில் பின்னர் முதுகலைப்பட்டமும் பெற்று அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இன்றைய பிரபலமான பல இலக்கியவாதிகள் இவரது மாணவர்களே! பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்த போதும் சக ஆசிரியர்களின் நலன் குறித்தே அவர் சிந்தித்தார். அவர்களது உரிமைகளுக்காகப் போராடினார். அதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து போராடினார். பிற்காலத்தில் அக்கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றமடையவும் அவரே அடிப்படைக் காரணமானார்.

அக்காலகட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் உட்பட பல பொறுப்புகளை ஏற்றிருந்தார் தர்மராஜன். அக்காலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், தொ.மு.சி. ரகுநாதன் போன்றோரைச் சந்தித்து உரையாடி தனது அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார். பெருமன்றத்தின் மூலம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டார். இவரது முதல் மொழியாக்கப் படைப்பு 1958ல் 'ஜனசக்தி'யில் வெளியானது. ஐரிஷ் எழுத்தாளரான ஷான் ஓ கேசியின் (Sean O' Casey) "The Worker Blows the Bugle" என்ற கதையை "உழைப்பாளியின் சங்கநாதம்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 1960ல் சீனக்கதைகளை மொழிபெயர்த்தார். இத்தாலியக் கதைகள், தென்னாப்பிரிக்கக் கதைகள் என மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்தது. இ.எம். ஃபாஸ்டரின் "பேஸேஜ் டு இண்டியா" என்ற நூலை "இந்தியா: மர்மமும் சவாலும்" என்று மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இவரது திறனை அறிந்த சோவியத் அரசு இவரை மாஸ்கோவிற்கு அழைத்தது. 1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகள்அங்கு தங்கி ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் தரும் முயற்சியில் ஈடுபட்டார். மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காக (Progress Publications) மாக்ஸிம் கார்கி, புஷ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் நூல்களைத் தமிழில் தந்தார். லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' தவிர்த்து அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரே எழுத்தாளர் இவர்தான். அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், சிறுதை, நாவல் போன்ற வகைகளில் இவரது மொழியாக்கங்கள் அமைந்தன. மாஸ்கோவில் 'ஹிந்துஸ்தானி சமாஜ'த்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பின்னர் தமிழகம் திரும்பிப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

மூல ஆசிரியனின் படைப்புக்குக் குந்தகம் நேராமல், அதே சமயம் வாசிப்பவருக்குத் தன் மொழியில் வாசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துபவரே சிறந்த மொழிபெயர்ப்பாளர். அதில் தேர்ந்தவர் தர்மராஜன். இவரது மொழிபெயர்ப்பு எளிய மொழியில், அனைவரும் வாசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு இவருக்கு இருக்கும் இருமொழிப் புலமை மிகமுக்கிய காரணம்.

ரஷ்ய இலக்கியம் தவிர, இந்திய, மேற்கத்திய இலக்கியங்களையும் தமிழில் தந்திருக்கிறார். முல்க்ராஜ் ஆனந்தின் 'கூலி' குறிப்பிடத்தகுந்தது. ஷேக்ஸ்பியரை மொழிபெயர்த்தது முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. புஷ்கின், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. ரஷ்ய எழுத்தாளர் ஷெட்ரின் எழுதியதை 'ஒரு குடும்பத்தின் கதை'யாகத் தமிழில் தந்திருக்கிறார். அமெரிக்காவின் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய நூல் 'நிலவு வந்து பாடுமோ' ஆனது. புஷ்கினின் 'காப்டன் மகள்', 'துப்ரோவ்ஸ்கி', 'குல்சாரி', 'அன்னைவயல்', 'நீதிபதியின் மரணம்', 'கடவுளுக்கு உண்மை தெரியும்' போன்றவை முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்களாகும். அக்காலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இக்னேஷியஸ், அப்துல்சங்லேர், விண்டே போன்றோரது படைப்புகளையும் தமிழில் தந்திருக்கிறார். ஐன்ஸ்டீன், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், ஹோ-சி-மின், எம்.என். ராய், ஃபிடல் கேஸ்ட்ரோ போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் அனைவராலும் பாராட்டப்படுபவை.

இவர் எழுதிய 'கார்ல் மார்க்ஸின் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை', 'இந்தியப் பொருளாதாரம்', 'மார்க்ஸும் மூலதனமும்' போன்றவை இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் நூல்களாகும். 'The life and time's of Michael K' என்பது 'மைக்கேல் கே - சில குறிப்புகள்' என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இதற்குக் கலை இலக்கியப் பெருமன்ற விருது கிடைத்தது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது, வெ. சாமிநாத சர்மா விருது, தமிழ்நாடு மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, நல்லி திசையெட்டும் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது, 'மொழி பெயர்ப்புச் செம்மல்' என எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கு. அழகரிசாமி எழுதிய 'குமாரபுரம் ஸ்டேஷன்' சிறுகதையை மொழிபெயர்த்திருக்கிறார். தனது மொழிபெயர்ப்பு பற்றி தர்மராஜன்,, "கதாபாத்திரங்களும் சூழல்களும் வித்தியாசமானவையாக இருந்தாலும், பிரச்சினைகள் மற்றும் உணர்வுகள் உலகளாவியவையே. ஆகவே அந்தப் பிரச்சனைகளைத் தமிழில் சொல்வது என்றுமே எனக்குக் கடினமானதாக இருந்ததில்லை. ஆனால், அம்மொழிகளுக்குச் சமமான வார்த்தைகளைத் தமிழில் தருவதற்குக் கஷ்டப்பட்டிருக்கிறேன்" என்கிறார். அந்த வகையில், நட்புச் சலுகை, நேசச் சலுகை, அறம் சாராமை எனப் பல புதிய கலைச்சொற்களை தமிழுக்கு உருவாக்கி அளித்திருக்கிறார்.

நூற்றிருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். விரிவான நூல்களை அறிமுகப்படுத்தவெனச் சுருக்கி மொழிபெயர்த்தும் அளித்துள்ளார். தற்போது Isaac Deutscher படைப்புகளைத் தமிழில் தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இப்பணியைச் செய்துவரும் நா. தர்மராஜன் சிவகங்கையில் வசிக்கிறார். இன்றைக்கும் பலனை எதிர்பாராது, உழைத்துக் கொண்டிருக்கிறார் இந்த 82 வயது இளைஞர்.

அரவிந்த்

© TamilOnline.com