தென்றல் பேசுகிறது...
அதிபர் ட்ரம்ப் பதவியேற்றுப் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு அவைகளிலும் அவருக்குப் போதிய பெரும்பான்மையும் உள்ளது. நன்மைதரும் மாற்றங்களை நாட்டுக்குத் தருவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்? ஆனால் மருத்துவக் காப்பீட்டுச் சட்டத் திருத்தம் ஆகட்டும், வரி சீரமைப்புச் சட்டம் ஆகட்டும், செய்பவை எல்லாமே அரை வேக்காட்டுச் சிந்தனைகளின் விளைவாகவே தென்படுகின்றன. மக்களில் மிகக்கீழான பொருளாதார நிலையில் இருப்பவரும் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கான வழியை எப்படி வகுக்கலாம் என்பதைப் பார்ப்பதே ஒரு நலத்திட்ட அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே அல்லாது, அதை 'ஒபாமா கேர்', 'ட்ரம்ப் கேர்' என்பதாகப் பிரித்துப் பார்த்து, இருக்கின்ற நல்லதையும் தகர்ப்பது நோக்கமாக இருக்கக்கூடாது. நாட்டு நலன் குறித்த செயல்களை எதிர்க்கட்சியோடு ஆலோசித்துச் செய்வதே சரியான ஜனநாயக மரபு. அப்படிச் செய்யத் தவறுவதால், தற்போது பதவியிலிருக்கும் கட்சி மக்கள்மீது தனது பிடிமானத்தை இழக்கும். இழந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அதிபர் சிந்திக்கவும், செயல்பாட்டைத் திசை மாற்றிக்கொள்ளவும் சரியான தருணம் இது.

*****


இந்த இதழில் ஒரு குறும்படத்தைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஒரே ஒரு குறும்படம்! ஆனால் அதில் சித்திரிக்கப்படும் பிரச்சனை பல உயிர்களைக் குடித்துவிட்டது, இன்னும் பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் குறும்படத்தின் பெயர் 'கக்கூஸ்'. பெயரைக் கேட்டாலே முகத்தைச் சுளிக்கலாம். ஆனால் சற்றே யோசித்துப் பார்க்கவேண்டும், இந்தியாவின் பல பகுதிகளில் மனிதக்கழிவு சேமிக்கப்படும் நிலவறைக்குள் இன்னமும் மனிதர்கள் இறங்கித் தூய்மை செய்கிறார்கள். அதை எடுக்கவென மூடியைத் திறந்துகொண்டு உள்ளிறங்கும் அந்தக் கணத்தில் விஷவாயு தாக்கி மரணிக்கிறார்கள். சட்டம் இதை அனுமதிப்பதில்லை. சின்னச்சின்ன வேலைகளைக்கூடச் செய்ய எந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், இப்படிப்பட்ட ஆபத்தான வேலைகளுக்கு எந்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுகூட அதைக் கையாளுவோருக்குத் தக்க பாதுகாப்புக் கருவிகளும் உடைகளும் தரப்பட வேண்டும். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். இது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கும் அரசுகளுக்கும் ஏற்படுத்த வேண்டியது கற்றறிந்த சமுதாயத்தின் முக்கியக் கடமைகளுள் ஒன்று.

*****


சவூதி அரேபிய அரசு பெண்களையும் கார் ஓட்ட அனுமதித்துள்ளதை நாம் வரவேற்கிறோம். 1990ம் ஆண்டு 47 பெண்கள் சவூதியின் தலைநகரான ரியாதில் கார்களை ஓட்டிக்கொண்டு போய்த் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததை நினைவுகூர வேண்டியுள்ளது. எவ்வளவு தாமதமானாலும் சரியான மாற்றம் வரவேற்கத் தக்கதே.

*****


சினிமாவின் மீது ஒரு கண்ணோடு தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் டிஸ்கவரி புக் பேலஸைத் தொடங்கி ஒரு பதிப்பாளராக வாசிப்புலகை விரிவாக்க உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞர் திரு. மு. வேடியப்பனின் நேர்காணல் சுவையானது. நாம் பெருமையோடு உங்கள் பார்வைக்குக் கொண்டுவரும் செல்வி. தேனு செந்தில், சமுதாயப் பார்வை கொண்ட அமெரிக்கத் தமிழர். இன்னும் பல சுவை ததும்பும் அம்சங்களோடு அக்டோபர் இதழை உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்களுக்கு காந்தி ஜயந்தி, முஹர்ரம் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

அக்டோபர் 2017

© TamilOnline.com