ஜூலை 15, 2017 அன்று, சான் ரமோன் டோகர்ட்டி வேலி நிகழ்கலை மைய அரங்கில் திரு. கோபி லக்ஷ்மிநாராயணன் அவர்களின் மாணவன் செல்வன். அபிஷயன் தம்பா ஷிவாவின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. வித்வான் திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தம்பாவின் சகோதரி ஷாயினி ஷிவாவும் சகோதரன் ஹரீஷ் கோபிகன் ரவீந்திரனும் வரவேற்றார்கள். ஹரீஷின் தெளிவான ஆங்கிலமும் ஷாயினியின் சுத்தமான தமிழ் உச்சரிப்பும் சிறப்பான தொடக்கத்தை அளித்தன. தம்பாவின் தாத்தா திரு ராஜேஸ்வரன், அம்மம்மா திருமதி. சரஸ்வதிதேவி ராஜேஸ்வரன் மற்றும் டாக்டர் சூரியகுமார், டாக்டர் புனிதா சூரியகுமார் மங்கள விளக்கை ஏற்றினார்கள்.
வர்ணம், ஸ்ரீ மஹாகணபதி ரவதுமாம், சதானந்த தாண்டவம், வேங்கடரமணா, சனாதனா பரமபாவனா, கார்த்திகேய காங்கேய, அனுபம குணம்புதி, ராகம்-தானம்–பல்லவி, சின்னஞ்சிறு கிளியே, இரக்கம் வராமல் போனதென்ன, தில்லானா, திருப்புகழ், மங்களம், என அடுத்தடுத்துப் பன்னிரண்டு பாடல்கள் பார்வையாளர்களை இசை மழையில் நனைத்தன. 'கார்த்திகேய காங்கேய' பாடலில் தம்பா 45 நிமிடங்களுக்குத் தனி ஆவர்த்தனம் வாசித்து மகிழ்வித்தார். எவ்வித ஒத்திகையும் இல்லாமல் இவற்றைத் தம்பா வாசித்தது, அவரது குரு உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராகம்–தானம்–பல்லவி பாடும்பொழுது, திரு. குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா தம்பாவிற்குப் பல சவால்களை விடுத்தார். அவற்றைத் தம்பா கையாண்ட விதம் மிகச்சிறப்பு.
வயலினில் டாக்டர் முல்லைவாசல் சந்திரமௌலி, கஞ்சிராவில் திரு. சுந்தர்குமார், கடத்தில் திரு. ரமணா இந்திரகுமார், தம்புராவில் குமாரி ஷாயினி ஷிவா ஆகியோர் சிறந்ததொரு இசைக்குழுவாக அமைந்தனர். திருமதி விமாலினி சிவராமன் தொகுத்து வழங்கினார்.
தம்பா எட்டு வயதில் மிருதங்கம் கற்றுக்கொள்ளத் துவங்கினார். 2013 க்ளீவ்லேன்ட் ஆராதனா, பாபநாசம் சிவன் போட்டி, கலா ஆராதனா போட்டி, ஒஸ்ஸாட் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். அவரது அம்மம்மா சரஸ்வதிதேவி இலங்கை வானொலியில் பல ஆண்டுகள் பாடியுள்ளார். தம்பாவுக்கு கிடார், பியானோ, டிரம்ஸ் எனப் பிற கருவிகளையும் வாசிக்கும் திறன் உண்டு. தனது நண்பர்களுடன் முதியோர் இல்லங்களில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார்.
இளங்கோ மெய்யப்பன், ஃப்ரீமான்ட் |