சிகாகோ தியாகராஜ உத்சவத்தின் 31வது விழா 2007 மே 26-28 நாட்களில் லீமான்ட்டில் (இல்லினாய்) உள்ள கிரேட்டர் சிகாகோ ஹிந்துக் கோவிலில் நடைபெறும்.
மே 26 அன்று காலை 8 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் தியாகராஜரின் பஞ்சரத்னக் கிருதிகளுடன் நிகழ்ச்சி தொடங்கும். அதை அடுத்து பார்வதி ரவி கண்டசாலா குழுவினர் தியாகராஜ வைபவம் என்ற நடன பாலேயை வழங்குவர்.
மே 27 அன்று உத்சவ சம்பிரதாயக் கிருதிகளைத் தொடர்ந்து டி.என். சேஷகோபாலன் அவர்களின் ராமாயண சங்கீத உபன்யாசம், டாக்டர் என். ரமணி அவர்களின் புல்லாங்குழல் இசை, உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரலிசை ஆகியவை நடைபெறும்.
இந்திய இசையே பயிலாத, மேனாட்டு இசையில் ஆர்வம் கொண்ட குழந்தை களையும் ஈர்க்கும் வண்ணம் நம் க்ருதிகளை மேற்கத்திய இசை நோட்டுகளாக வடித்து, அவற்றிலிருந்து வயலின், புல்லாங்குழல், சாக்ஸ·போன், ட்ரம்பெட் என்று வாசிக்கும் இளைஞர் இசைக்குழு ஒன்று உருவாகி யுள்ளது. இவர்கள் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளின் ஆரம்பமாக மே 28 அன்று வாசிப்பர். அடுத்து கணேஷ்-குமரேஷ் இரட்டையரின் வயலின் இருவரிசை, எஸ். சஷாங்க் மற்றும் சஞ்ஜீவ் அப்யங்கர் குழுவினரின் புல்லாங்குழல்-குரலிசை ஜூகல்பந்தியும் நடைபெறும்.
சிகாகோ நகரைச் சுற்றி குறிப்பாக வடக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள நேபர்வில், உட்ரிட்ஜ், போலிங்ப்ரூக், ஓக்ப்ரூக், ஷாம்பர்க், ப·பலோக்ரோவ் என்று பல நகரங்கள் மேலும் மாடிஸன், ரெஸின் மில்வாகி என்று விஸ்கான்சின் மாகாண மக்கள் மற்றும் இண்டியானா, அயோடா, மிக்சிகன் என்று பல மாகாணங்களிலிருந்தும் - ஏன், டெக்ஸாஸ், நியூஜெர்சி, மின்னஸோடா என்று பல மாகாண இசைப்பிரியர்களும் இந்த இசைவிழாவில் பங்குகொள்ள இருக்கின்றனர்.
அறுநூற்றுக்கும் மேற்பட்ட இசையன்பர்கள் காலை 8 மணிக்கு வந்து இரவு 10, 11 மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும் என்றால் அதற்கேற்ற காபி, டிபன், சாப்பாடு ஏற்பாடுகள் இல்லாமலா! கல்யாண விருந்தே உண்டு.
உத்சவம் இதோடு முடியவில்லை. சென்னை நகரையே ஈர்க்கும் சங்கீத உபன்யாசகி திருமதி விசாகா ஹரி, இவ்வருட சங்கீத கலாநிதி சேஷகோபாலன் இருவரும் சிகாகோ தியாகராஜ உத்சவம், பாலாஜி கோவில் கலை நிகழ்ச்சி இவற்றில் ஜூன் 3, 23 தேதிகளில் மீண்டும் செவிக்கு விருந்து படைக்க இருக்கின்றனர்.
விவரங்களுக்கும், குழந்தைகள் மற்றும் பெரியவருக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற் பதற்கும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://www.tyagaraja-chicago.org
பேரா. T.E.S.ராகவன், வில்லாபார்க் |