புகழ்வாய்ந்த ஹார்வர்டு பல்கலையில் தமிழன்னைக்கு ஒரு நிரந்தர அரியணை அமைப்பதற்காக ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டும் மாபெரும் பணி உலகத் தமிழன்பர்களின் ஆதரவுடன் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்த் தொண்டர்களின் விடாமுயற்சி மற்றும் அன்பர்களின் ஆதரவினால் இதுவரை சுமார் 2.8 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தமது 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஹார்வர்டு தமிழிருக்கை முயற்சியைத் தமிழக அரசு ஆதரிக்கும் என அறிவித்திருந்தார். இது சம்பந்தமாகத் தமிழிருக்கை நிறுவனர் Dr. விஜய் ஜானகிராமன், தமிழ்நாடு கல்வி அமைச்சர் திரு K.A. செங்கோட்டையன் அவர்களைச் சென்னையில் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று சந்தித்துப் பேசினார்.
பேரா. ஆறுமுகம், பேரா. பேச்சிமுத்து தலைமையில் நடந்த ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், "தமிழக இளைஞர்கள் ஒன்றிணைந்து ஹார்வர்டில் தமிழிருக்கை அமைக்க முன்வர வேண்டும்" என்று வேண்டினார். ஜூலை 29, 2017 அன்று கனடாவிலுள்ள டொரான்டோ நகரத்தில் இளம் நர்த்தகி ஸ்வேதா பரராஜசிங்கம் தமிழிருக்கைக்கு நிதி திரட்டச் சிறப்பான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றினார். டொரன்டோவின் பிரபல நடன குருவான திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மகளாவார் ஸ்வேதா. இந்த நிகழ்ச்சியில் ஸ்வேதா பத்தாயிரம் டாலர் நன்கொடை திரட்டி, Dr. சுந்தரேசன் சம்பந்தம் அவர்களிடம் அளித்தார்.
ஆகஸ்டு 5ம் தேதி அன்று பாஸ்டன் அருகில் செம்ஸ்ஃபோர்டு நகரத்தில் Dr. சுந்தரேசன் சம்பந்தம், திரு. அப்பாதுரை முத்துலிங்கம் ஆகியோர் தலைமையில் ஒரு கருத்தாய்வு நடைபெற்றது. இந்த முயற்சியின் உயர்நோக்கம் தமிழரல்லாத அமெரிக்கர்களையும் நன்கொடை அளிக்கத் தூண்டியிருக்கிறது. திருமதி டயேன் என்ற இத்தாலிய ஸ்பானிஷ் அம்மையார் தானாகவே முன்வந்து ஆயிரம் டாலர் அளித்திருக்கிறார். ஒரு நாளுக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் சேர்த்து, மூன்று மாதத்தில் ஒவ்வொரு தமிழன்பரும் நூறு டாலர் கொடுத்தால், சிறு காணிக்கை பேருந்தொகை ஆகிவிடும்.
நன்கொடைகளுக்கு அமெரிக்க 501(C)(3) Non-profit வரிவிலக்கு உண்டு. நன்கொடை அளிக்க மற்றும் இந்த முயற்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள: harvardtamilchair.org
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, நியூ ஹாம்ப்ஷயர் |