ஆகஸ்ட் 12, 2017 அன்று நிருத்ய சங்கல்பா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. சிந்து கண்ணப்பனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ராஸ்வெல் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் நடந்தது. தமிழை மையக்கருவாகக் கொண்டிருந்தது இந்த அரங்கேற்றம்.
முதலில் "சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய" என்னும் சிலப்பதிகாரப் பாடல் இடம்பெற்றது. மாதவியின் அரங்கேற்றக் கதை சொன்ன இந்தப் பாடலில், ஊர்வசியின் மரபில் வந்த மாதவியைக் கண்முன் நிறுத்தினாள் சிந்து. அடுத்து மகாகவி பாரதியின் "சிவசக்திக் கூத்தில்" சக்தியைத் தன்னுள் வாங்கி, உச்சக்கட்ட பக்திப் பரவசத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். பாபநாசம் சிவனின் "சுவாமி நீ மனம் இறங்கி அருள் தா" என்னும் வர்ணத்தில் முழு நாட்டியத் திறமையையும் வெளிப்படுத்திப் பிரமிக்க வைத்தார்.
"முகத்தைக் காட்டியே தேகம் முழுமையும் காட்டாத" எனும் பாடலில் கயிலாயச் சிவனோடு செல்லச்சண்டை, அவனுடைய விளையாட்டில் ரசனை, ஏமாற்றமான கோபம் என்று பாவங்களைக் காட்டினார். "ஆடினையே கண்ணா" எனும் கீர்த்தனத்தில் கண்ணனும் கோபியரும் ஆடும் ராஸலீலையை நடத்திக் காட்டினார். ராம நாமத்தைச் சொல்லும், "பஜமன ராம சரண சுகதாயி" எனும் பஜனைத் தொடர்ந்து, லால்குடி ஜெயராமனின், முருகன் தில்லானா மற்றும் மங்களத்துடன் இனிதே முடிவடைந்தது அரங்கேற்றம்.
திருமதி. ஜோதிஸ்மதி ஷீஜித் கிருஷ்ணா (வாய்ப்பாட்டு), திரு. ஷீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), திரு. G.S. ராஜன் (புல்லாங்குழல்), திரு. லட்சுமி நாராயணன் (வயலின்), குரு. சவிதா விஸ்வநாதன் (நட்டுவாங்கம்) ஆகியோர் சிறப்பாகத் துணை நின்றனர்.
அட்லாண்டாவில் 16 வருடங்களாகக் கலாக்ஷேத்ரா பாணியில் நாட்டியம் பயிற்றுவித்து வரும் திருமதி. சவிதா விஸ்வநாதனிடம் 10 வருடங்களாகப் பயின்றுவரும் சிந்து, இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த நிதியைக் கோயம்புத்தூர் பக்தி நாட்டிய நிகேதன் என்னும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |