ஆகஸ்ட் 13, 2017 அன்று 'மைத்ரி நாட்யாலயா' மாணவி செல்வி. சாஹிதி வங்கியாலப்பட்டியின் அரங்கேற்றம் சான்ட க்ளாரா மிஷன் சிட்டி கலையரங்கில், குரு திருமதி சிர்ணிகாந்த் வழிகாட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக "அம்பா பராக்கு" என்ற குச்சுபுடி கிராமத்தின் கடவுளைப் போற்றிப் பாடினர். முதல் உருப்படி "கிரிஜங்க ஸிடித" என்ற பாடலின்மூலம், பார்வதியின் மடியில் வீற்றிருக்கும் விநாயகக் கடவுளுக்குச் சமர்ப்பணமாக அமைந்தது. தொடர்ந்து தியாகராஜரின் கம்பீரவாணி ராகத்தில் அமைந்த "சடாமதிம்" கீர்த்தனையின் நடனம் உள்ளம் கவர்ந்தது. மையப்பகுதியாக "நிருபமா சுந்தரகாரா", பந்துவராளி ராகப் பாடலுக்குத் தட்டின்மேல் ஆடியது அழகு. அன்னமாச்சாரியாரின் "வச்சேனு அலமேலு மங்கா" பாடலுக்கு வெண்ணிற ஆடை, அணிகலன்களுடன் அழகாக ஆடினார். அடுத்ததாக ராமாயண சப்தம், ஆரண்ய காண்டம் பகுதி முதல் பட்டாபிஷேகம் வரை சாஹிதி நடனத்தில் சித்திரித்தார். பாலமுரளியின் குந்தலவரளி தில்லானாவுக்கு இனிதே நடனமாடினார்.
நிறைவுப்பகுதியாக மங்களத்துடன் நிறைவு செய்தார். குரு. சிர்ணிகாந்த் (நட்டுவாங்கம்), தஞ்சாவூர் ர. கேசவன் (மிருதங்கம்), திருமதி சந்திரிகாபாய் (பாட்டு), திரு. அஸ்வின் (புல்லாங்குழல்), திரு சசி மதுகலா (வயலின்) பக்கவாத்தியம் நிகழ்ச்சிக்கு மெருகேற்றின. பெற்றோர் மமதா, பிரசாத் வங்கியாலப்பட்டி நன்றி கூறினர்.
அனு பத்மநாபன், சன்னிவேல், கலிஃபோர்னியா |