அரங்கேற்றம்: அனிவர்த்தின் ஆனந்த்
ஆகஸ்ட் 19, 2017 அன்று, கூப்பர்ட்டினோ கம்யூனிடி அரங்கத்தில் குரு திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தம் அவர்களின் மாணவன் செல்வன். அனிவர்த்தின் ஆனந்தின் மிருதங்க அரங்கேற்றம் நடந்தேறியது. நிகழ்ச்சிக்குத் திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தம் அவர்களின் பெற்றோர், வயலின் கலைஞர் திருமதி. ஸ்ரீமதி பிரம்மானந்தம் மற்றும் திரு. பிரம்மானந்தம் கெளரவ விருந்தினர்களாக வருகை தந்தனர்.

அனிவர்த்தினின் சகோதரி ச்ரியா ஆனந்த் கச்சேரியை ஹம்ஸத்வனி ராகத்தில் "வாதாபி கணபதிம்" பாடலுடன் தொடங்கினார். தோடி ராகத்தில் "நின்னே நம்மிதி" கச்சேரியின் சிறப்பு அம்சமாக இருந்தது. எல்லாப் பாடல்களுக்கும் ஒத்திசைந்து அனிவர்த்தின் மிருதங்கம் வாசித்தார். அவருடைய தனி ஆவர்த்தனமும் மிகவும் அற்புதமாக இருந்தது. செல்வி. நயன்தாரா நரசிம்ஹன் அழகாக வயலின் வாசித்தார்.

அனிவர்த்தின், ச்ரியா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் திரு. ஸ்ரீராமின் சகோதரியான குரு அனுராதா ஸ்ரீதரிடம் முறைப்படி பாட்டும், வயலினும் கற்கிறார்கள். இந்நிகழ்ச்சி நாதாலயா இசைப்பள்ளி மற்றும் ஆக்டா-கலிஃபோர்னியாவின் பாரம்பரியக் கலைகளின் கூட்டணியின் ஆதரவில் நடைபெற்றது. இவ்வருடம், இந்தக் கூட்டணி, கலைப்பயிற்சித் திட்டத்தின் கீழ் அனிவர்த்தின், ஸ்ரீராம் பிரம்மானந்தம் அவர்களிடம் தஞ்சாவூர் பாணி மிருதங்கம் கற்பதற்கு உதவித்தொகை வழங்கியது.

சுகன்யா,
கூப்பர்ட்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com