அரங்கேற்றம்: வென்னெலா சுக்கா
ஆகஸ்ட் 19, 2017 அன்று மாலை உட்சைடு ஹைஸ்கூலில் அபிநயா டான்ஸ் கம்பெனி மாணவி செல்வி. வென்னெலா சுக்காவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. விநாயகர் வந்தனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து மல்லாரி நடையில் நடராஜர் பாத புஷ்பாஞ்சலியுடன் குரு வந்தனம். அடுத்து சியாமா சாஸ்திரிகள் இயற்றிய பைரவிராக ஸ்வரஜதியில் காமாட்சி தேவியை அழைத்து, 'உனை அனுதினமும் மறவேன்' என்று உருக்கமாய்ப் பாடின பாடலுக்கு அர்த்தபாவத்துடன், வர்ணனை செய்த ஸ்வரங்களுக்கு ஏற்றபடி தாளபாவத்துடன் 'பரமேசுசவரி உனை மறவேன்' என்ற இடத்தில் காட்டிய அபிநயம் அருமை. தொடர்ந்து "இந்தெந்து வச்சிதிவிரா" என்னும் சுருட்டி ராகத்தில், ஸ்ரீகஸ்தூரி ரங்காவின் பதத்திற்கு அலட்சியம், கோபம் எனத் தொடங்கி, 'கஸ்தூரி ரங்கேசா' என விஷ்ணுவை வர்ணித்து, "என்னை மறந்தாயா, உன்னைப் பார்க்க விரும்பவில்லை, கிளம்பு" என்னும்போது காண்பித்த முகபாவம், கண்ணசைவு யாவும் கனகச்சிதம்.

அடுத்து வந்த "கால் மாறி ஆடிய" என்னும் ஆண்டவன் பிச்சை பாடலுக்குத் தில்லை கனகசபேசன் ஆடிய ஆட்டத்தைக் கண்முன் நிறுத்திய விதம் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். தொடர்ந்து "ராரா சின்னம்மா" என்னும் அன்னமாச்சார்யா பாடலில், யசோதை குழந்தைக் கண்ணனின் குறும்பினை அனுபவித்த விதத்தை அநாயாசமாகக் காட்சிப்படுத்தினார். இறுதியில் பாலமுரளி இயற்றிய கதனகுதூகல ராகத் தில்லானாவில் தாளகதிக்கேற்ப விரைந்து ஆடி, மதுரகானம் செய்யும் முரளியைக் கண்முன் நிறுத்தியது மிகவும் சிறப்பு.

சாந்தி நடராஜன் (வயலின்), நடராஜன் (மிருதங்கம்), சிந்து நடராஜன் (குழலிசை) யாவும் நிகழ்ச்சியின் சிறப்பிற்கு வலுச் சேர்த்தன. குரு மைதிலி குமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com