அரங்கேற்றம்: ஹர்ஷிதா
ஆகஸ்ட் 20, 2017 அன்று சங்கீதா வாசுதேவன் அவர்களது நிருத்தியகீதா நாட்டிய அகாடமி மாணவி செல்வி. ஹர்ஷிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான்ஹோசே CET அரங்கில் நடைபெற்றது. கம்பீர நாட்டையில் மல்லாரி, திஸ்ர நடையில் 'அலாரிப்பு', ஊத்துக்காடு வேங்கடகவியின் "ஆனந்த நர்த்தன கணபதிம்" என்று விறுவிறுப்பாத் தொடங்கியது நிகழ்ச்சி.

முக்கிய நிகழ்வான ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "மாதே" என்ற தருவர்ணத்தை ஜதிகளுடனும் அபிநயத்துடனும் அழகுற நடனமாடினார். அடுத்து வந்த "ஆடும் பாதனை", "காவாவா", "எண்ணி எண்ணி" ஆகிய மூன்று பதங்களுக்கும் அற்புதமாக அபிநயத்தார் ஹர்ஷிதா. இறுதியாகப் பூர்விராகத் தில்லானாவின் கோர்வைகள் நல்ல பாடாந்தரத்தை வெளிப்படுத்தின. ஆஷா ரமேஷின் வாய்ப்பாட்டும், ரவீந்திரபாரதி ஸ்ரீதரனின் மிருதங்கமும் லக்ஷ்மி பாலசுப்ரமண்யாவின் வயலினும் நன்கு பரிமளித்தன.

சங்கீதாவின் குரு கலைமாமணி திருமதி ராதா அவர்கள் வழுவூர் பாணியை முன்னிறுத்துபவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கௌரவித்தார்.

வி. லக்ஷ்மி,
கூப்பர்ட்டினோ, கலிஃபோர்னியா.

© TamilOnline.com