தமிழக மக்களால் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அறக்கட்டளையின் சிகாகோ கிளையுடன் இணைந்து ஆகஸ்ட் 26, 2017 அன்று கோலாகலமாக நடத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திருமதி. லட்சுமி ஆனந்தன் வரவேற்றார். முதலாவது நிகழ்ச்சியாக எம்.ஜி.ஆர். திரைப்படப் பாடல்களான "செந்தமிழே வணக்கம்" மற்றும் கவிஞர் பாரதிதாசனின் "சங்கேமுழங்கு" என்ற அருமையான பாடல்களுக்கு திருமதி. உமா முத்தையாவின் நடன அமைப்பில் சிகாகோவின் நவரச நாட்டியாலயா குழுவினர் பரதம் ஆடி மகிழ்வித்தனர். அடுத்து சங்கச் செயலாளர் திரு. மணிகுணசேகரன், நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்களை அறிமுகப்படுத்தினார். அவர் எம்.ஜி.ஆரைப் போன்று தத்ரூபமாக உடையணிந்து அவரது புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்வித்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர். அறிவுரை சொல்லும் பாடல்களில் இருந்து தேர்நதெடுத்த வரிகளுடன் குழந்தைகளோடு ஆடிப்பாடியவை மனதைக் கவர்ந்தன.
சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆர். 1970களில் சிகாகோ வந்திருந்த நாட்களை அன்புடன் நினைவுகூர்ந்தார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. நாதன் தம் இன்தமிழில் எம்.ஜி.ஆர். இலங்கை கண்டியில் பிறந்த வரலாறு, அவர் இலங்கை மக்கள்மீது கொண்ட அன்பு மற்றும் ஈகையை எடுத்துரைத்தார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. சேவுகன்செட்டி எம்.ஜி.ஆரின் கடைசித் திரைப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' தயாரித்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அதில் எம்.ஜி.ஆர் கலைத்துறையில் கோலோச்சிய போதும் சகபணியாளர்களிடம் காட்டிய பரிவினை நீங்கா வியப்புடன் சொல்லி மகிழ்ந்தார். திரைப்பட நடிகர்களான சத்யராஜ், தம்பி இராமையா, மயில்சாமி ஆகியோர் தாம் எம்.ஜி.ஆர். மீது கொண்ட அபிமானத்தைக் காணொளி மூலம் தெரிவித்தனர்.
தலைமை தாங்கிய தொழிலதிபர் பழனி. G. பெரியசாமி, 1984ம் ஆண்டு பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரைப் பரிசோதிக்க அமெரிக்காவின் அனுபவசாலிகளான மருத்துவர் நால்வரை 24 மணி நேரத்தில் ஒருங்கிணைத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பரபரப்பான தருணங்களை நினைவு கூர்ந்தார். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க புரூக்லின் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பொழுது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனி விமானம் ஏற்பாடு செய்ததையும், மருத்துவர் குழுவின் பெருமுயற்சியால் எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி 1985 பிப்ரவரி மாதம் முதலமைச்சராகவே அவரைச் சென்னைக்கு அழைத்துச் சென்றதையும் பகிர்ந்து கொண்டார். தமது ஆட்சிக் காலத்தில், தமிழ் நாடு அறக்கட்டளைக்குச் சென்னை டெய்லர்ஸ் சாலையில் ஓரிடத்தைச் சொந்தப் பணத்தில் அவர் வழங்கியதையும் நன்றியோடு பதிவு செய்தார் பெரியசாமி.
"சேச்சா" என்று அன்போடு அழைக்கப்பெற்ற எம்.ஜி.ஆரைப் பற்றிய நினைவுகளை உறவினர்கள் டாக்டர். கிருஷ்ணன், திருமதி. கவிதா கிருஷ்ணன், பால்டிமோர் Dr. சிவராமன், Dr.அனிதா சிவராமன், திரைப்படத்துறையில் தற்போது கால் பதித்திருக்கும் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் வழிப் பேரனான திரு. ராமசந்திரன் ஆகியோர் நினைவு கூர்ந்தார்கள்
சங்கத் தலைவர் திரு. சாக்ரடீசு பொன்னுசாமி விழாவின் நோக்கம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மாண்புகளைப் பற்றித் திருக்குறள் மேற்கோள்களுடன் உரையாற்றினார். மேலும் தமிழ்ச்சங்க உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி 2019ம் ஆண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் நடைபெற இருப்பதை அறிவித்தார்.
பின்னர், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக எம்.ஜி.ஆர். பாடல்களுடனான காணொளியை 'மனிதநேயம்' என்ற தலைப்பில் திருமதி. லட்சுமி ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார். அறக்கட்டளையின் சிகாகோ கிளைத் தலைவர் திரு. வீராவேணுகோபால் அறக்கட்டளை ஆற்றிவரும் செயற்திட்ட விவரங்களையும் வெற்றிகளையும் புள்ளி விவரங்களோடு விவரித்தார். மகளின் திருமண வேலைக்கிடையே விழாவிற்கு வந்திருந்த நாமக்கல் எம்.ஜி.ஆருக்குச் சிகாகோ தமிழ்ச்சங்கம் நினைவுக் கேடயம் வழங்கி நன்றி தெரிவித்தது.
விழாவை முன்னின்று நடத்திய சிகாகோ தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் நாடு அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் திரு. அறவாழி நன்றியுரை வழங்கினார்.
முத்தாய்ப்பாக திரு. ராஜா தலைமையில் 'நம் நினைவில் பெரிதும் நிலைப்பவை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படக் காதல் பாடல்களே! தத்துவப் பாடல்களே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. 'காதல் பாடல்களே!' அணியில் மேகலா ராமமூர்த்தி, மினு பசுபதி, மணி குணசேகரன் ஆகியோரும், 'தத்துவப்பாடல்களே!' அணியில் நெல்லிக்கனி, டாக்டர். நல்லபானு, முத்துவேலு ஆகியோரும் வாதிட்டனர். நடுவர் ராஜா தத்துவப் பாடல்களே என்று தீர்ப்பு வழங்கினார். சபரி லோகநாதன் மற்றும் ஜெயஸ்ரீ அழகாகத் தொகுத்து வழங்கினர்.
தேவி அண்ணாமலை |