ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15a)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

*****


கேள்வி: நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க என்னிடம் பிரமாதமான யோசனை ஒன்று உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும் பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிய பின் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்டச் சரியான தருணம் எது?

கதிரவனின் பதில்: ஆஹாஹா, ஆஹாஹா, என்ன ஒரு அற்புதமான கேள்வி? மெச்சுகிறேன் அன்பரே. ஆனால், முன்பு கூறியுள்ள சில பதில்கள் போல், இதற்கும் இதுதான் சரி என்று கூறமுடியாது!

போச்சுடா! மீண்டும் வழவழா கொழகொழாவென்று பதிலளித்து, குட்டை குழப்பி, ஏற்கனவே உள்ள என் குழப்பத்தை அதிகரிக்கப் போகிறார் என்று அங்கலாய்க்கிறீர்களா? கவலை வேண்டாம் சகோதர சகோதரிகளே! உங்கள் நிறுவன வகை, குழு பலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சி நிலை (current progress), இவற்றை எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்க உதவும்படி கறாரான பதிலையே அளிக்க இருக்கிறேன். அதாவது, இப்படியான நிறுவனத்துக்கு தாமதிப்பது நல்லது, வேறு மாதிரியான நிறுவனத்துக்கு உடனே மூலதனம் திரட்டுவது நல்லது என்று எடைபோட முடியும். இந்தக் கணிப்பீட்டின் அம்சங்களே உங்களுக்கு சரியாகத் தெரியாவிட்டால், கணிப்பீடும் கறாராக இருக்க முடியாது. சரி விவரங்களைப் பார்ப்போம் வாருங்கள்!

ஒருவிதத்தில் பார்த்தால், உங்களுக்கு வேறுபட்ட ஆலோசனைகள் கிடைப்பது ஆச்சரியப்படும் விஷயமே இல்லை. ஏனெனில், மேலே கூறியதுபோல் இந்த விஷயத்தில் பல அம்சங்கள் கூடியுள்ளன. உங்களுக்கு ஆலோசனை அளித்த ஒவ்வொருவரும் வெவ்வேறு அம்சத்தைப் பார்த்து அதன்படி நிலையை எடைபோட்டு வெவ்வேறு முடிவெடுத்திருப்பார்கள். அதனால் அவரவர் தத்தம் பார்வைக் கோணத்தின்படி வெவ்வேறு ஆலோசனை அளிப்பது ஆச்சரியமல்லவே? சில குருடர்கள் ஒரே யானையின் வெவ்வேறு பாகங்களைத் தொட்டுப் பார்த்துவிட்டு, அது சுவர்போல் இருக்கிறது (உடல்), அல்லது தூண்போல் இருக்கிறது (கால்), அல்லது கயிறுபோல் உள்ளது (வால்) என்று வெவ்வேறாக வர்ணித்த கதைதான்.

என் ஆரம்பநிலை நிறுவனங்களின் பயணங்களில் இந்தக் கேள்விக்கான பதில்களின் ஒரு சில பரிமாணங்களை அடியேனும் சந்தித்துள்ளேன். சில நிறுவனங்களுக்கு, ஆரம்பிக்கும் தருணத்திலேயே பெருமளவு முதற்சுற்று மூலதனம் கிட்டியது. சில நிறுவனங்கள் சிறிது காலம் கழித்தே சிறிது சிறிதாக மூலதனம் திரட்டின. இரண்டு வழிமுறைகளுக்கும் அனுகூலங்களும் உள்ளன, பிரதிகூலங்களும் உள்ளன. இரண்டு வழிமுறைகளாலும் வெற்றிகாண முடியும். நிறுவனத்தைச் சரியான பாதையில் செலுத்தாவிடில் இரண்டு வழிமுறைகளும் தோல்வியில் முடியவும் கூடும்.

அதனால், என் அனுபவங்களையும், எனக்கு ஆலோசனை அளித்த பெரியவர்களின் அறிவுரைகளையும் கலந்து, இயன்றவரை இதன் நுணுக்கங்களை விவரிக்கிறேன். அதன் பிறகு, உங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட அம்சங்களை வைத்து எது சரியான வழி என்று நீங்களேதான் கணித்துக்கொள்ள வேண்டும்; அல்லது உங்களுக்கு மிக நெருங்கிய ஆலோசகர் யாரோ, அவரிடம் இந்த நுணுக்கங்களைப்பற்றிக் கலந்துரையாடி முடிவெடுக்கலாம். மீண்டும் பலரின் யோசனையைக் கேட்டால் மேலும் குழப்பந்தான். சரி, இந்த நுணுக்கப் பரிமாணங்களைச் சந்திப்போம் வாருங்கள்!

பொதுவாக ஒரு விஷயம், எல்லா ஆரம்பநிலை நிறுவனங்களுக்குமே பொருந்தும்: அதாவது, நிறுவனத்தின் பயணத்தில் மிகவும் சீக்கிரம் நிதி திரட்டினால் அதற்கு ஏற்றாற்போல் நிறுவனத்தில் அதிக சதவிகிதப் பங்கை மூலதனத்தாருக்கு அளிக்கவேண்டி வரும். (இதற்கும் சில விதிவிலக்குகள் உள்ளன. அதைப் பிறகு பார்ப்போம்). இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நிறுவனம் ஆரம்பித்தவுடன், அது செய்துகாட்டக் கூடிய சாதனைகள் அதிகம் இருக்காது. அதனால் நிறுவனம் எதிர்கொள்ளக் கூடிய அபாயங்கள் பலமாக இருக்கும். அத்தகைய நிலையில் மூலதனம் திரட்ட வேண்டுமானால், நிறுவனத்தின் மதிப்பீடு குறைவாக இடப்படும். அதனால் மூலதனத்தின் ஒவ்வொரு டாலருக்கும் சதவிகித ஒப்பீட்டளவில் (relative percentage) அதிகப் பங்குகள் அளிக்க வேண்டியிருக்கும். இதைப்பற்றித்தான் உங்கள் சில ஆலோசகர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அப்படியானால், எதற்காக முதலில் மூலதனம் திரட்ட வேண்டும்? நிறுவனத்தை ஓரளவு வளர்த்து, சில சாதனைகளைப் படைத்து அவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு மூலதனம் திரட்டுவதுதானே புத்திசாலித்தனம் என்று நீங்கள் கேட்கலாம். அதைத்தானே ஆலோசகர்கள் கூறியுள்ளார்கள்? நியாயந்தான். ஆனால், நிஜத்தில் அப்படி ஒரேயடியாக ஆணித்தரமாகக் கூறிவிட முடியாது.

ஏனெனில், மூலதனம் திரட்டுவது அத்தியாவசியமாக இருக்கக்கூடும். அதாவது, மூலதனமில்லையேல் நிறுவனமே இல்லை என்ற நிலை இருக்கக்கூடும். அல்லது மூலதனம் திரட்டாமல் நிறுவனம் தொடர்ந்தாலும், தழைத்து வளராமல், தடுமாற்றத்துடன் மெள்ள மெள்ள வளர்ந்து ஒரு காலகட்டத்தில் திறந்திருக்கும் வாய்ப்புக்கதவு மூடும் நிலை உண்டாகி, சில காலத்துக்குப் பிறகு மிகச் சோகையாக வளர்ச்சியடைந்து தோல்வியடையக் கூடும்.

அப்படியானால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் இருக்கிறதே என்று நீங்கள் எண்ணலாம். மூலதனம் திரட்டினால் பங்கு போகும், திரட்டாவிட்டால் நிறுவனம் அல்லது வெற்றி போகும். என்ன செய்வது என்று இருதலைக் கொள்ளி எறும்புபோலத் தவிக்கிறீர்களா? தவிக்கவேண்டாம். நிறுவனத்தின் ஒரு சில அம்சங்களைக் கவனத்துடன் எடையிட்டுப் பார்த்தால் எது சரி என்பது புலப்படும். அதுமட்டுமல்ல, இரண்டுக்கும் இடைப்பட்ட மூலதன வழியும் உண்டு.

அடுத்த பகுதியில், மூலதன முடிவின்மேல் தாக்கமுள்ள அத்தகைய அம்சங்கள் என்ன, அவற்றை எப்படி எடையிடுவது, எப்படி முடிவெடுப்பது, இடைப்பட்ட மூலதன வழி என்ன என்பதையெல்லாம் அலசுவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com