எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் 11
கீதா, அருண், மிஸ் லேக் மூவருமாக பக்கரூவைத் தூக்கிக்கொண்டு வெடரினரி கிளினிக் வந்து சேர்ந்தார்கள். அவர்களது நல்லநேரம், அன்று டாக்டர். உட்ஸ் இருந்தார். கீதாவையும் அருணையும் பார்த்தவுடன் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டார்.

"என்னாச்சு, மிசஸ் மேகநாத்? பக்கரூவுக்கு மீண்டும் ஏதாவது உடம்புக் கோளாறா?" என்று கேட்டார். அதற்குள் ஒரு நர்ஸ் அங்கு வந்துசேர்ந்தார்.

"அப்படியே பேச்சு மூச்சு இல்லாம இருக்கான் பக்கரூ" என்று வருத்தமும் பதட்டமும் கலந்த குரலில் சொன்னார் கீதா. பக்கரூவின் நாடித்துடிப்பைப் பார்த்துக்கொண்டே "இன்னைக்கு ஏதாவது வித்தியாசம் இருந்ததா அவனோட நடவடிக்கையிலே?" என்று கேட்டார் வுட்ஸ். "தூக்கம்? சாப்பாடு? இதுல ஏதாவது பெரிய மாற்றம் இருந்ததா? எப்ப நீங்க இந்த நிலையில பார்த்தீங்க? பக்கரூ வீட்டுலதான் இருந்தானா, இல்லை எங்காவது வெளியே போனானா?" என்று கேள்விமேல் கேள்வி கேட்டார்.

"டாக்டர், நான் கொஞ்சநேரம் முன்னாடிதான் வேலையிலிருந்து திரும்பி வந்தேன். அப்போ மிஸ். லேக்கும் அருணும் பக்கரூவை எழுப்ப முயற்சி பண்றதைப் பார்த்தேன். அதுக்கு முன்னால என்ன நடந்துச்சுன்னு தெரியலை" என்றார் கீதா. டாட்கர் மிஸ். லேக்கிடம் "நீங்க ஏதாச்சும் மாற்றம் பார்த்தீங்களா, பக்கரூகிட்ட?" என்றார்.

ஏற்கனவே மிகுந்த பதட்டத்தில் இருந்த மிஸ். லேக், பயத்துடன் பதில் அளித்தார். "நான்… சரியா கவனிக்கலை. அருண்தான் பார்த்தான். நாங்க வீட்டுக்குத் திரும்பி வரும்போது 3 மணி இருக்கும்."

"காலைல எல்லாரும் 8 மணிக்கே வீட்லேர்ந்து கிளம்பிட்டோம். அப்போலிருந்து அருணும் மிஸ். லேக்கும் திரும்பி வரவரைக்கும் பக்கரூ தனியாத்தான் இருந்தான்" என்றார் கீதா.

டாக்டர் உட்ஸ் கடகடவென்று பக்கரூவைப் பரிசோதனை அறைக்குள் கொண்டுபோய்ச் சோதனை செய்தார். "ஏதோ விஷ உணவு சாப்பிட்ட மாதிரி தெரியுது. எங்காவது வெளியே போய் எதையாவது தின்னிருப்பானோ நீங்க யாரும் வீட்டுல இல்லாத நேரத்துல?"

மிஸ். லேக் அதற்கு இல்லை என்று தலையாட்டினார். கீதாவிற்கோ என்னடா இது திரும்பவும் ஒரு பிரச்சனையா என்று கவலை ஏற்பட்டது. பக்கரூ இன்னும் மூச்சுவிடக் கஷ்டப்படுவது போலத் தோன்றியது அவருக்கு.

டாக்டர் உட்ஸ் உணவில் விஷம் என்று சொன்னவுடன், அருணுக்குத் தனது பேண்ட்டினுள் இருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தின் ஞாபகம் வந்தது. ஃப்ராங்கிடம் இருந்து வாங்கிய சாப்பாட்டுப் பாக்கெட்டின் கவரை எடுத்து டாக்டரிடம் காண்பித்தான். அதைப் பார்த்தவுடன் கீதா அடையாளம் கண்டுகொண்டார். ஹோர்ஷியானா நிறுவனத்தின் முத்திரையை அந்தக் கவரில் பார்த்தவுடன், அன்று காலையில் டேவிட் ராப்ளே திட்டியது நினைவுக்கு வந்தது. எதற்காக டேவிட் தன்னை எல்லார் முன்னாலும் திட்டினார் என்பது அவருக்கு அர்த்தமானது. அருண் கையில் இருக்கும் அந்த கவருக்கும், டேவிட் ராப்ளே காலையில் திட்டிய திட்டிற்கும் முடிச்சுப் போட்டார். கோபம் எங்கிருந்தோ சுனாமிபோல வந்தது.

"அருண், எவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் உனக்கு? யார்கிட்டேயிருந்து உனக்கு இந்தக் கவர் கிடைச்சுது? ஹோர்ஷியானா கிட்ட வம்பு வைச்சுக்காதேன்னு தலையில அடிச்சுக்கிட்டேன், கேட்டியா? இப்போ பாரு, டேவிட் ராப்ளே போறாதுன்னு பக்கரூவும் சேர்ந்து கஷ்டம் கொடுக்கறான் நமக்கு" என்று கீதா பொறிந்து தள்ளினார். கோபத்தில் அருணை நாலு சாத்து சாத்தவேண்டும் என்று தோன்றியது.

டாக்டர். உட்ஸ் நிலைமையைப் புரிந்துகொண்டு, சட்டென்று கீதாவைச் சமாதானப்படுத்தினார். "கீதா ப்ளீஸ், இப்ப குழந்தையைத் திட்டவேண்டாம். பக்கரூ பத்தி யோசிக்கலாமே?"

கீதாவின் கோபம் கொஞ்சம் தணிந்தது. "கீதா, பக்கரூ இந்தப் பாக்கெட்டுல இருந்ததைச் சாப்பிட்டு இருப்பானோன்னு தோணுது. Just an educated guess. ஏன்னா ஹோர்ஷியானா நிறுவனம்மேல நிறையப் பேருக்கு மரபணு மாற்றியமைத்த பொருட்களைச் சாப்பாட்டுல உபயோகப்படுத்தறாங்கன்னு ரொம்ப நாளா சந்தேகம் இருக்கு. இந்தச் சாப்பாட்டுப் பாக்கெட்ல அந்தமாதிரி பொருட்கள் பக்கரூ மாதிரி மிருகங்களுக்கு விஷமாக இருக்கலாம். எல்லாம் ஊகம்தான். ஹோர்ஷியானா எதுவும் செய்யலாம்" என்று சொன்னார் டாக்டர். உட்ஸ்.

"இப்ப என்ன பண்றது டாக்டர்? பக்கரூ குணமாகணுமே?" என்று கேட்டார் கீதா.

"கொஞ்சம் விஷமுறிவு கொடுத்துப் பார்க்கிறேன். அதே சமயம், என்னோட நண்பர்கள் மூலமா இந்தச் சாப்பாட்டு பாக்கெட்ல இருக்கிற பொருட்களை சோதனை பண்ணிப் பார்க்கிறேன். அப்படி ஏதாவது கண்டு பிடிச்சோம்னா, ஹோர்ஷியானா நிறுவனத்துக்கு எதிரா புகார் கொடுக்கிற food advocacy groups மூலமா ஒரு வழி பண்ணிடலாம்" என்றார் உட்ஸ்.

சிறிது நேரத்தில் அவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது: "Dr. Woods, this time we have nailed Hortianna! Thank you, so much."

பக்கரூவிற்கு கொடுத்த சிகிச்சையில் அவனும் சரியானான். டாக்டர். உட்ஸ் தனது கிளினிக்கின் சட்டத்துறை வழியே ஹோர்ஷியானா நிறுவனத்துகு ஒரு கடிதம் அனுப்பச் சொன்னார். அவரே அதற்குள் food advocacy நிறுவனங்களுக்குத் தனக்குக் கிடைத்த தகவலைப் பரப்பினார்.

*****


மறுநாள், எர்த்தாம்டனின் பிரபலமான செய்தித்தாளில் ஹோர்ஷியானா நிறுவனத்தின் பெரிய கடிதம் வெளியாகி இருந்தது:

அன்புள்ள, எர்த்தாம்டன் நகரமக்களே, சில நாட்கள் முன்னர் ஒரு செல்ல நாய்க்குட்டி எங்களது உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிட்டதால் நோய்வாய்ப்பட்டதாக அறிந்து, மிகவும் வருத்தத்துக்கு உள்ளானோம். அதனுள் அடங்கிய சில பொருட்கள் அந்த நாய்க்குட்டிக்கு விஷமாகிவிட்டது என்று பலர் எங்கள்மேல் குற்றம் சாட்டியுள்ளார்கள். நாங்கள் உடனடியாக எங்களின் தலைசிறந்த விஞ்ஞானிகளைத் தொடர்புகொண்டு ஆராய்ந்தோம். எங்களது விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், மனிதர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரச்சினையும் வராது என உறுதி செய்துகொண்டோம்.

ஆனாலும், நமது ஊரின் ஒரு செல்ல நாய்க்குட்டிக்கு ஒரு கஷடம் வந்துவிட்டது என்று அறிந்து, மீண்டும் இத்தகைய சம்பவம் நடக்கவிடாமல் இருக்க எங்களாலான எல்லா முயற்சியையும் எடுக்க முடிவு செய்துள்ளோம். எங்களின் தலையாய அக்கறை இந்த நகரத்தின் மீதுதான். என்றுமே உங்களின் நலன்தான் எங்களின் பலம்.

இப்படிக்கு, என்றும் அன்புள்ள,
டேவிட் ராப்ளே
அதிபர், ஹோர்ஷியானா

அதைப் படித்தவுடன் கீதாவுக்கு 'சே' என்று இருந்தது. என்னதான் ஆனாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ஹோர்ஷியானா செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அப்படியாவது, ஹோர்ஷியானாவின் நிழல் நடவடிக்கைகள் இனிமேல் தொடராது என்று அருணுக்கு விளக்கினார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com