அமெரிக்க வேப்பிலைக் கட்டி
(பெயரில்தான் வேப்பிலை. வேப்பிலைக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை)

தேவையான பொருட்கள்
எலுமிச்சை/நார்த்தை/கிரேப் ஃப்ரூட் இலை - 60
ஓமம் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை
இலைகளின் நடுநரம்பைக் கிழித்து எறிந்துவிட்டு, நீரில் கழுவி, நிழலில் காய வைக்கவும். அவற்றைச் சிறு துண்டுகளாகக் கையாலேயே கிழிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஓமம், மிளகு, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, உலர்ந்த இலைகளை வாணலியில் சேர்த்து லேசாக வதக்கவும். 10 நிமிடங்களில் இலைத்துண்டுகள் மொறுமொறுவென்று ஆகிவிடும். இந்தக்கலவையை மிக்ஸியில் பொடித்து, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பாட்டிலில் வைக்கவும். சுடுசோற்றில் நெய்சேர்த்து இந்தப் பொடியைக் கலந்து சாப்பிட்டால் சுவையோ சுவை! வயிற்று உபாதைகளுக்கு ஒரு அருமருந்து இது. (இங்கு நார்த்தை இலை கிடையாது. அதனால் எலுமிச்சை கிரேப் ஃப்ரூட் விதைகளைத் தொட்டிகளில் விதைத்துச் செடிகளாக்கி அந்த இலைகளை உபயோகிக்கலாம்).

வசுமதி கிருஷ்ணசாமி

© TamilOnline.com